Thursday, February 19, 2009

ஆந்திராவைக் கைப்பற்றப்போவது யார்?

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஆந்திர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெல்லும் என்று தெரியவந்துள்ளது.

முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிறப்பான நிர்வாகம் தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா பகுதியில் மட்டுமே தெலுங்கு தேசம்-தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கூட்டணி அதிக இடங்களி்ல் வெல்லும் என்றும், கடற்கரை மாவட்டங்களில் சிரஞ்சீவிக்கு பெரிய ஓட்டு வங்கி உருவாகியிருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து நாடு முழுவதும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் இரண்டாம் பகுதி நேற்று வெளியானது.

இதில் ஆந்திராவில் ஆளும் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2007ல் 64 சதவீதத்தினர் காங்கிரஸ் ஆட்சி திருப்தி அளிப்பதாக கூறியிருந்தனர். அது தற்போது 9 சதவீதம் உயர்ந்து 73 சதவீதத்துக்கு வந்துள்ளது.

அதேபோல் கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 45 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஓட்டளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு 9 சதவீதம் பேர் ஓட்டுப்போட போவதாக கூறியுள்ளனர்.

கன்னி தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கும் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யத்துக்கு குறைந்தபட்சம் 7 சதவீத ஓட்டு கிடைக்கும் என தெரிகிறது. இதைவிட கூடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துகணிப்பு கூறுகிறது.

யாருடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்ற கேள்விக்கு, கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி என 29 சதவீதம் பேரும், தற்போதைய ராஜசேகர ரெட்டி நிர்வாகம் என 57 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் தெலுங்கானா தவிர மற்ற இடங்களில் காங்கிரஸை வெல்வது கஷ்டம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் பாஜக, பிரஜாராஜ்யம் போன்ற கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளதால் அது காங்கிரசுக்கு தான் அதிக லாபத்தைத் தரும் என்றும் தெரிகிறது.

அதே சமயத்தில் ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச ஓட்டுக்களை சிரஞ்சீவி கைப்பற்றக்கூடும். பாஜகவுக்கு இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை கூடவிட்டாலும் கடந்த தேர்தலை விட ஓட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
மொத்தத்தில் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கும், மற்ற பகுதிகளில் காங்கிரசுக்கும் அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தட்ஸ்தமிழ்

1 comment:

Narain Rajagopalan said...

எனக்கென்னமோ இதில் சந்தேகமிருக்கிறது. நேற்றைய ஐபிஎன் தொகுப்பினை நானும் பார்த்தேன். மஹாராஷ்டிராவில் இப்போதிருக்கும் ஆட்சியே என்.சி.பியோடு அதிக பலத்தோடு இருக்கிறது என்றும், ஆந்திராவிலும் காங்கிரஸ் பெரும்பலத்தோடு இருக்கிறது என்றும் சர்வே முடிவுகள் சொல்கிறது என்று ராஜ்தீப் சர்தேசாய் கூறுகிறார். ஆனால், தனிப்பட்ட முறையில் ஹைதராபாத் உள்ளிட்ட ஆந்திராவில் உள்ளவர்களோடு பேசும்போது, எல்லோரும் காங்கிரஸ் மீதான கடுப்பில் தான் இருக்கிறார்கள். இதில் சாம்பிள் சைஸ் தவறா அல்லது நான் பேசும் வர்த்தக உறவுகள் சொல்வது தவறா என்று சரியாக தெரியவில்லை.