Friday, February 20, 2009

அஞ்சாநெஞ்சரா உங்கள் எம்.பி ?


அரசியலுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள உறவு புலிகளுக்கும் சயனைட் குப்பிகளுக்கும் உள்ள உறவைப் போல. ஒருவேளை தேவைப்பட்டால் இருக்கட்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் அவர்களைத் தங்களுடனேயே வைத்திருக்கின்றன.

முன்காலத்தில் அஞ்சா நெஞ்சன் என்றால் பகத் சிங். இப்போது அஞ்சாநெஞ்சன் அழகிரி. முன்பு மாவீரன் சுபாஷ் சந்திர போஸ். இன்று மாவீரர்கள் நம் வக்கீல்கள்

'யார் ஜெயிக்கிறானோ அவனை நிப்பாட்டு' என்று ஜெயிக்கிற வெறியில் அஞ்சாநெஞ்சர்களையும் மாவீரர்களையும் அரசியல் கட்சிகள் வேட்பாளராகக் களம் இறக்குகின்றன.

உங்கள் தொகுதியில் நிற்பவர் அஞ்சாநெஞ்சனா? அவரது கிரிமினல் ரெகார்ட் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலா?

ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தகவல் உங்கள் கைக்கு வந்து விடும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் NC <உங்கள் பின்கோடு> என்று டைப் செய்து, 567678 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும்.

அல்லது http://www.nocriminals.org/. என்ற இணையதளத்தில் போய் பெயர் தொகுதி கொடுத்தால் தகவல்களைக் காணலாம்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் அது இப்போதுள்ள MP கள் குறித்த தகவல்களைத் தருகிறது

நான் இந்த இணையதளத்திற்குச் சென்று ஒரு Check செய்து பார்த்தேன். தமிழக எம்.பிக்களில் செகுப்புசாமி (திமுக) ஈ.வி.கே.எஸ், இளங்கோவன் (காங்) எம்.அப்பாதுரை (சிபி.ஐ)தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) எஸ்.ரகுபதி (திமுக) எல்.கணேசன் (மதிமுக) கே.வெங்கடபதி (திமுக) ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக இணையதளம் தெரிவிக்கிறது.

ரகுபதி, இளங்கோவன், வெங்கடபதி ஆகியோர் துணை அமைச்சர்களாக இருக்கிறார்கள்!

மாலன்

9 comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

மாலன் சார்

கட்சி லிஸ்டிலே அதிமுக பேரே இல்லையே

மாலன் said...

சந்திரமெள்லி,

நீங்கள்தான் அதிமுகவின் மாவீரர்கள் எவரையும் மக்களவைக்கு அனுப்பி வைக்கவே இல்லையே?

பிரபு ராஜதுரை said...

அன்பார்ந்த மாலன்,

இது மேட்டிமைத்தனம்!

இந்த உங்கள் பதிவிற்கு (1)கலைஞரா உங்கள் எம்பி? (2) புரட்சித் தலைவியா உங்கள் எம்பி? (3) அத்வானியா உங்கள் எம்பி? என்று தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இம்மூவர் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் நீங்கள் தலைப்பு வைத்தவர் மீது இல்லை!

நரசிம்மராவை இந்தியாவில் சிறந்த பிரதமர் என்கிறார்கள். கிரிமினல்களை தேர்ந்தெடுக்க கூடாது என்றால் அவர் நமக்கு பிரதமராக வந்திருக்க மாட்டார்.

லஞ்சம் கொடுப்பதும், போர்ஜரி கையெழுத்திடுவதும், சாட்சிகளை கலைப்பதும் கிரிமினல் வேலைகள்தானே!

முதலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளம் 'கிரிமினல்' என்பதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்பதை கூற முடியுமா?

வேடிக்கை! இந்தியன் பீனல் கோடுபடி நீங்கள் அழகிரிக்கு எதிர் உதாரணமாக காட்டியுள்ள பகத்சிங்கும் சுபாஷும் கிரிமினல்களே!

நேரம் கிடைப்பின் விரிவான விளக்கம் கொடுத்தால் மகிழ்வேன்.

மாலன் said...

அன்புள்ள பிரபு ராஜதுரை,

>>முதலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளம் 'கிரிமினல்' என்பதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்பதை கூற முடியுமா?<<

என் பதிவில் ஓர் உதாரணமாக திரு.ரகுபதி பற்றிய தகவல்கள் எப்படிக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் படமாக வெளியிட்டிருக்கிறேன். அதை நீங்கள் பெரிதுபடுத்திப் பார்த்தாலே தெரியும். (அதைப் பெரிதாக்க அதன் மீது சொடுக்கவும்) அதில் எந்த IPC பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அந்தப் பிரிவுகளின் கீழ் வரும் குற்றங்கள் என்ன என்பவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அதைக் கொண்டு அந்த இணையதளம், IPCயின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் 'கிரிமினல்' என்று சொல்கிறது என நான் நினைக்கிறேன்.

>>லஞ்சம் கொடுப்பதும், போர்ஜரி கையெழுத்திடுவதும், சாட்சிகளை கலைப்பதும் கிரிமினல் வேலைகள்தானே<<

ஆமாம். சட்டமியற்றும் பொறுப்பிற்கு (legislators)செல்லும் ஒருவர் இதையெல்லாம் செய்திருக்கலாம், தப்பில்லை என்று கருதுகிறீர்களா?

>>நரசிம்மராவை இந்தியாவில் சிறந்த பிரதமர் என்கிறார்கள். கிரிமினல்களை தேர்ந்தெடுக்க கூடாது என்றால் அவர் நமக்கு பிரதமராக வந்திருக்க மாட்டார்<<

யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் உரிமை. கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை என்று வாக்காளர்கள் கருதுவார்களானால் என்ன செய்யமுடியும்? ஆனால் ஒரு வாக்காளருக்குத் தன் தொகுதியில் நிற்பவர் மீது வழக்குகள் இருக்கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ள உரிமை உண்டா இல்லையா?

இந்தக் கேள்விக்குரிய இன்னொரு விளக்கம் அடுத்த கேள்விக்கும் பொருந்தும் என்பதால் அது கீழே:

>>வேடிக்கை! இந்தியன் பீனல் கோடுபடி நீங்கள் அழகிரிக்கு எதிர் உதாரணமாக காட்டியுள்ள பகத்சிங்கும் சுபாஷும் கிரிமினல்களே<<
"When you get into the semantics, it means you want to circumvent the issue. The people know through their conscience and their common sense who a criminal is," இந்த இணைய தள துவக்க விழாவில் ஜாவித் அக்தர் சொன்னது இது.

இதன் இன்னொரு பக்கத்தை நரிமன் சொல்கிறார்:
"If you have been charged in a court of law under the Indian Penal Code, you are a criminal. You may still be innocent in the eyes of the law, but in the eyes of the people, you are a criminal,"

சரி உங்கள் நிலைதான் என்ன? கிரிமினல்கள் சட்டமியற்றும் அதிகாரம் பெறலாமா?

அன்புடன்
மாலன்

பிரபு ராஜதுரை said...

"கிரிமினல்கள் சட்டமியற்றும் அதிகாரம் பெறலாமா?"

பதிலுக்கு நன்றி மாலன்,

நேரம் கிடைக்கையில் விரிவாக எழுத முயல்கிறேன். இனி நிறைய நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன்:-)

மேற்கண்ட தங்கள் கேள்விக்கு பெறக்கூடாது என்று நான் பதிலளித்தால் நான் ஒரு ஜனநாயகவாதியல்ல என்பது எனது கருத்து.

ஆயினும் நரிமனின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டால், பொது வாழ்வில் ஈடுபடும் எவரும் தப்ப முடியாது...எனவே கிரிமினல் யார் என்பது, இந்திய பீனல் கோடை வைத்தும், காவல் நிலையங்களில் தாக்கல் செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையினை வைத்தும் தீர்மானிக்க இயலாது.

எனவே இதனை மக்களிடம் விட்டுவிடுதலே நலம்.

ஜாவித் அக்தர் குறிப்பிட்டது போல, மனசாட்சிக்கு விட்டு விடுவோம். இல்லை கிரிமினல் என்ற பதத்தில் அத்வானிதான் அடங்குவார், நீங்கள் குறிப்பிடும் அஞ்சா நெஞ்சர் அல்ல!

ஆழ படித்து விட்டு எழுதுகிறேன். நன்றி!

சந்திரமௌளீஸ்வரன் said...

//கிரிமினல்கள் சட்டமியற்றும் அதிகாரம் பெறலாமா?//

திருடனை நம்ம வீட்டிலே வேலைக்கு வச்சிப்போமா . திருடன் என தெரிந்த பின்

இதிலெங்கே ஜனநாயகவாதி என்கிற கான்சப்ட் வந்தது ?

சந்திரமௌளீஸ்வரன் said...

//சந்திரமெளலி,

நீங்கள்தான் அதிமுகவின் மாவீரர்கள் எவரையும் மக்களவைக்கு அனுப்பி வைக்கவே இல்லையே?//

சில நேரம் செய்த புண்ணியங்கள் மறந்துடுது

பிரபு ராஜதுரை said...

"மேற்கண்ட தங்கள் கேள்விக்கு பெறக்கூடாது என்று நான் பதிலளித்தால் நான் ஒரு ஜனநாயகவாதியல்ல என்பது எனது கருத்து"

நான் கூற வருவது, நமது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மக்களாட்சி முறையில் அனைத்து குடிமகன்களுக்கும் பங்கு உண்டு. கிரிமினல்கள் என்று யாராவது இருப்பினும் அவர்களை விலக்கி வைக்க முடியாது.

குடிமகன்களை எம்ஜிஆர் படத்தில் வரும் வரும் கதாபாத்திரங்கள் போல ஹீரோ, வில்லன் என்று கருப்பு அல்லது வெள்ளையில் சித்தரிக்க முடியாது என்பதே என் எண்ணம்.

சந்திரமௌளீஸ்வரன் said...

//நமது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மக்களாட்சி முறையில் அனைத்து குடிமகன்களுக்கும் பங்கு உண்டு. கிரிமினல்கள் என்று யாராவது இருப்பினும் அவர்களை விலக்கி வைக்க முடியாது.//

Constitution ensures rights but with reasonable restrictions

Only with reasonable restrictions a right become a real right