Wednesday, February 25, 2009

Anti-incumbency Factor தேய்கிறதா?

- நாராயணன்

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் - anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.

1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன? 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.

மேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு "qualified extension" அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும்? பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.

2 comments:

குப்பன்_யாஹூ said...

வாக்கு அளிக்கும் மக்கள் மிக தெளிவாக முடிவு எடுப்பவர்கள். அதுவும் படிக்காத கிராமத்து விவசாய மக்களின் முடிவு எப்போதும் சரியாகவே இருக்கும். இருந்து உள்ளது.

நல்ல முறையில் ஆட்சி செய்தால் மக்கள் வெற்றி அளிக்கின்றனர். நரேந்திர மோடி, ராமன் சிங், ஷீலா தீக்சித், வைத்தியலிங்கம், ஜோதி பாசு, ம பி, சோவான் போன்ற முதல்வர்கள் நல்ல ஆட்சி தந்தனர் . எனவே மக்கள் ஜெயிக்க வைத்தனர்.

இந்த மாதிரி கட்டுரைகள், ஆராய்ச்சிகள் வெறும் பத்திரிக்கை விற்பனைக்கு மாத்திரம் உதவும்.

எப்படி சினிமா துறையில் ஒரு புது படம வெற்றி பெறுமா அடையாதா என்பதை இன்னும் தீர்மானிக்க முடிய வில்லையோ, அதே போல் தான் தேர்தலிளிம் இன்று வரை யாராலும் சரியாக கணிக்க முடிவதில்லை.

தேர்தல் முடிந்த பிறகு நாம ஆயிரம் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதலாம்.

குப்பன்_யாஹூ

enpaarvaiyil said...

ஆளும் கட்சி கூட்டணி: நாற்ப்பதும் நமதே.
எதிரி கட்சி கூட்டணி.நாற்ப்பதும் நமதே
மக்கள்: ஏழு கோடி தமிழர்களின் அன்றாட உணவான அரிசியின் விலை நாற்ப்பதை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வக்கில்லாதவர்கள் நாணமில்லாமல் வாக்கு கேட்டு வருவதுடன் நாற்ப்பதும் நமதே என்கிறார்கள்.

அதுதான்யா தமிழக அரசியல்.