Friday, February 20, 2009

ஜெயலலிதாவின் காங்கிரஸ் கலாட்டா

-நாராயணன்

நேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம் அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-காங்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.

தமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் - திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் - அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.

1 comment:

Indian Voter said...

>> தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது

- எதனால் இப்படி கூறுகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா? உங்கள் கருத்தை நான் மறுக்க வில்லை... மேலும் விளக்கிக் கூற வேண்டுகிறேன்.