Tuesday, February 24, 2009

தேவையா இப்படி ஒரு பட்டன்?

புதுடெல்லி, பிப்.24: தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தனியிடம் ஒதுக்கக் கோரி தொடர்ந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

டெல்லியை சேர்ந்த மக்கள் உரிமை சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

இப்போதைய வாக்களிப்பு முறையில் எந்த கட்சிக்கும் அல்லது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்களது எண்ணத்தை பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடமில்லை. இவ்வாறு விருப்பம் இல்லாதவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

இப்படி முன்நிபந்தனை விதிப்பது அரசியல் சட்டம் 19 (2) விதிக்கு எதிரானது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது.
மேலும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று பகிரங்கமாக தெரிவிப்பவர்கள் அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.

எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 'மேலே உள்ள யாருக்கும் எனது வாக்கு இல்லை' என்பதற்கு அடையாளமாக தனி பட்டன் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை பரிசீலனை செய்தது. இது மக்களின் அடிப்படை உரிமை பற்றிய விவகாரம் என்பதால் இந்த மனுவை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் பரிந்துரை செய்தது.


தினகரன் 24.2.09


யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கலாம். சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது . இந்தியாவில் அப்படி இல்லை. இந்த நிலைமையில் இப்படி ஒரு தனிபட்டன் தேவையா?


அதே நேரம்

வாக்குச் சாவடிக்கு வராதவர்களின் வாக்குகளை கடைசி சில மணி நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாகப் பதிவு செய்து கொண்டுவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒரு பட்டன் இருந்தால் வாக்க்ளிக்க விருப்பமில்லாதவர்கள் கூட் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்யவும் அதன் காரண்மாக கள்ள் ஓட்டுக்கள் பதிவாவதைத் தவிர்க்கவும் முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

தனிபட்டன் தேவையா? உங்கள் கருத்தை அருகில் உள்ள வாக்கெடுப்புப் பெட்டியில் தெரிவியுங்கள்.

8 comments:

ஆண்ட்ரு சுபாசு said...

நமது இந்திய அரசியல் நிர்ணயசட்டத்தின் 1969 ஆம் ஆண்டு சட்டத்தின் 49 -O பிரிவின் படி,ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர் "தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை" என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு விரல் அடையாள மை பெற்றுக்கொண்டு வரலாம்.

"யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லை" என்று தெரிவிப்பதால் என்ன பயன்? ஒரு தொகுதியில் ஒருவர் 500 வாக்குகளில் வெற்றிபெறுகிறார் என கொள்வோம்.அதே தொகுதியில் இந்த 49 -O 500 விழுந்து இருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கபட்டு மறு தேர்தல் நடத்த படவேண்டுமாம்.அது மட்டும் அல்லாது அப்போது தேர்தலில் நின்றவர்கள் மறுபடியும் தேர்தலில் நிற்க முடியாது.ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.

Namakkal Shibi said...

அந்த வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பது ஜனநாயக உரிமையே! அதற்காக தேர்தலை புறக்கணிக்கத் தேவையில்லை!

என்னுடைய கருத்தை/விருப்பத்தை வாக்குச் சாவடிக்குச் சென்று பதிவு 49-ஓ மூலம் பதிவு செய்யப் போகிறேன்!

ஆனால் மற்ற வேட்பாளர்களுக்கான பொத்தான்கள் வைப்பது போல இதற்கும் தனியே ஒரு பொத்தான் வைப்பதுதான் சிறந்தது!

யாருக்கு வாக்களித்தேன் என்பதை பிறரறியா வண்ணம் பதிவு செய்வதற்கு உள்ள உரிமை இதற்கும்தான் உள்ளது!

இதற்கு மட்டும் நான் ஏன் அதிகாரிகளிடம் சென்று விண்ணப்பம் பெற்று எழுதித்தர வேண்டி இருக்கிறது?

சந்திரமௌளீஸ்வரன் said...

49 ஓ வின் படி ஒரு வாக்காளர் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்றூ
பதிவு செய்ய இயலும். இது அவரது வாக்கினை வேறொருவர் போடாத நிலையில் இனி ஒருவரும் போடாதிருக்க மட்டுமே பயன் படும்


49 ஓவின் படி ஒருவர் தனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்ற தகவலையே பதிவு செய்கிறார். இது வாக்காகாது

அதனாலேயே இந்த 49 ஓ ஆப்ஷன் வாக்குச் சீட்டிலோ வாக்கு இயந்திரத்திலோ இடம் பெறவில்லை
ஒரு தொகுதியில் குறைந்த பட்சம் இத்தனை வாக்குகள் அல்லது இத்தனை வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது

பதிவான வாக்குகளில் அதிகம் பெற்றவர் வெல்கிறார்

தேர்தல் என்பதே People Representative யார் என்பதை தெரிந்து கொள்ள
யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான் Representation of People Act ன்
Doctrine

யாரை நிராகரிக்கிறோம் என்பதல்ல

ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் மற்றவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர் .
This is supplementary not the prime cause

49 ஓவின் படி ஒரு வாக்காளர் பதிவு செய்யும் தகவல் வாக்கு என்ற
அந்தஸ்த்தினை பெறாமல் இருப்பது இந்தக் காரணங்களால் தான்.

இந்த 49 ஓ வில் பதிவாகும் கருத்து வாக்கு அந்தஸ்த்து பெறாது

யார் 49 ஓ வின் கீழ் வாக்களிக்க விருப்பமில்லை என பதிவ செய்கிறாரோ அவர்
பெயருடன் தகவல் பதிவு செய்யப்படுகிறது

Representation of Peoples Act பிரிவு 94 ந் படி ஒருவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்ற தகவல் ரகசியமாக இருக்க வேண்டும்

இதன் காரணமாகவும் இந்த யார்க்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற ஆப்ஷன் வாக்கு என்ற அந்தஸ்த்தினைப் பெறவில்லை

வாக்கு இயந்திரம் வந்த பின் செல்லாத ஒட்டு போட வழியில்லை. செல்லாத ஒட்டு மாதிரி ஒன்றை கொண்டு வர ரொம்பவே பிரயத்தனப்படுகிறார்கள்

சந்திரமௌளீஸ்வரன் said...

//இந்திய அரசியல் நிர்ணயசட்டத்தின் 1969 ஆம் ஆண்டு சட்டத்தின் 49 -O //

Andrew t

hat is not Constitution of India (அரசியல் நிர்ணயச் சட்டம்)

அது Representation of People Act Section 49 O

வான்முகிலன் said...

நிச்சயம் தேவை இந்த பொத்தான். வாக்களித்தாலும் வாக்களிக்காமல் போனாலும் ஏற்படுகின்ற நிலையை இதற்கு முன்னர் நடந்த தேர்தல்கள் சாமானிய மக்களுக்கு தெரிவித்துவிட்டது. அதை அரசியல்வாதிகளும் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இந்தப் பொத்தான் பயன்படுத்தப்படுமாயின் வாக்களிப்பதன் அவசியம் அதனால் ஏற்படப் போகும் நன்மை வேட்பாளர்களின் உண்மை நிலை குறித்த தெளிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே நிச்சயம் இந்த பொத்தான் அவசியம்.

Anonymous said...

நிச்சயம் தேவை இந்த பொத்தான்

Boston Bala said...

இந்த பொத்தான் வேண்டுகோள், தேர்தல் கட்சி நடத்தும் அரசை விட ஆளுநர் ஆட்சியே சிறந்தது என்பது போல் இருக்கிறது.

எதிலுமே நம்பிக்கை கொள்ளாதவருக்கு 49ஓ பயன்படும்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவருக்கு 'எவரையும் தேர்ந்தெடுக்காத' கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியில் நம்பிக்கை இருக்கும்.

அந்தக் காலத்தில் 'எவன் ஆண்டாலென்ன' என்னும் விட்டேத்தி மனப்பான்மை. இன்று, 'எவ ஆண்டாலும் உருப்டுருவோமா?' என்னும் புத்திவிசாலம்.

enpaarvaiyil said...

ஆண்டுக்காண்டு கட்டுக்கடங்காமல் பெருகிவரும் தேர்தல் வன்முறைகளும்,பழிவாங்கும் அரசியல் கொலைகளும் , வாக்கு சாவடிகளை கைப்பற்றும் செயல்களும்,வாக்காளர்களை வாக்கு சாவடிக்கு பயமில்லாமல் வந்து தங்கள் ஜனநாயக கடமைகளை சமூக விரோதிகள் செய்யவிடாமல் தடுப்பதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. தேர்தலுக்கு ஆகும் செலவை விட பாதுகாப்பிற்கு செலவிடப்படும் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இவைகளை சரி செய்ய எந்த அரசும் தயார் இல்லை. கள்ள வோட்டு போடுவதும் தங்கு தடையின்றி நடந்துவருகிறது. இதற்க்கு முதலில் பரிகாரம் தேடட்டும். பிறகு வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு தனி பட்டன் வைப்பதை பற்றி சிந்திக்கலாம்.