.
தற்போதைய நாடாளுமன்றம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய அளவில் தேர்தலுக்கு முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகியவை ஆயத்தமாக உள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர் தேர்வு என அக்கட்சிகள் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மாநிலத்தின் ஆளும்கட்சியான திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட பல்வேறு நிலையில் கூட்டங்களை நடத்தி வருகிறது.
தென்மண்டல அமைப்பு செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மு.க. அழகிரி, தென் மாவட்டங்களின் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி, அந்த மாவட்டங்களில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட பணித்துள்ளார்.
கிளைக்கழகம் வரையிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தேர்தல் பணிகளுக்கு அவர்களை தயார்படுத்த மாவட்ட செயலாளர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்தநிலையில் திமுகவின் தேர்தல் பணி செயலாளர்கள் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறினார்கள். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக வியூகங்களை அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணி செயலாளர்கள் கம்பம் செல்வேந்திரன், எஸ்.ரகுபதி, சேடப்பட்டி முத்தையா, செ. அரங்கநாயகம், முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் நாளை கூட்டியுள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல்பணிக்குழு செயலாளர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாளை மறுநாள் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதை அடுத்து அன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது.
மாலைச்சுடர் பிப் 15
No comments:
Post a Comment