Thursday, February 19, 2009

பாஜகவின் தேர்தல் முகங்கள்

- நாராயணன்

BJPs Poll calculations

நாக்பூரில் நடந்து முடிந்த பா.ஜ.கவின் 3 நாள் தேர்தலுக்கான சந்திப்பின் இறுதியில் குழப்பத்தினை தவிர பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் உண்மை. அத்வானியினை பிரதம மந்திரி வேட்பாளாராக பறைசாற்றிக் கொண்டாலும், பெரியதாய் போட்டியிட அவர்களிடத்தில் விஷயமில்லை. அந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு விதிவிலக்கு. தொடர்ச்சியாக பேசி கொண்டிருந்தாலும், மக்களை முன்னிறுத்தும் ஒரு பிரச்சனையை, வாகனத்தை, வாசகத்தை இன்னமும் பாஜக கண்டறியவில்லை என்பது தான் நிதர்சனம்.

அவுட்லுக் மற்றும் இந்தியா டுடே பத்திரிக்கைகளில் வெளியான நாக்பூர் கூட்டம் சம்பந்தமான செய்திகளை படித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவுட்லுக் பத்திரிக்கை பாஜக தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறது. இந்தியா டுடேயோ குழப்பத்தில் இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஒரு விஷயத்தில் பாஜக காங்கிரஸை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது - அது அவர்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள். வாரிசு அரசியலையை வழிப்படுத்துணையாக கொண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை விட, இது மேல். நடந்து முடிந்த கூட்டத்தில், அவர்கள் இதுவரை கைவசம் வைத்திருக்கும் 138 தொகுதிகளை காபாற்றுவதே மிக முக்கியமான இலட்சியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதற்கு முன்னால் இருந்த மாதிரி இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு தலைவரிடமும் சில மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சாந்த குமாரும் பகத் சிங் கொஷியாரியும் ஜம்மு & காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அரியானாவினை பார்ப்பார்கள். தேசிய தேர்தல் மேலாளராக நினைத்த அருண் ஜெட்லியின் நினைப்பில் வீழ்ந்தது மண்.அவர் இப்போது உத்தரபிரதேசம்,பிஹார்,பஞ்சாப்,டெல்லி மற்றும் அரியானாவினை கவனிப்பார். முக்கியமான விஷயமென்னவெனில், மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. நரேந்திர மோடி என்றால் குஜ்ராத் என்றாகிவிட்டது. அது தவிர மஹாராஷ்டிரா, கோவா, டாமன் & டையு போன்ற மாநிலங்களையும் கவனிப்பார். சுஷ்மா சுவராஜ் போபாலிருந்து போட்டியிடுவார் என்று தோன்றுகிறது. அவர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டினை கவனிப்பார். தெற்கில் கர்நாடகா தவிர வேறெங்கும் சொல்லி கொள்ளும்படி பாஜக இல்லை, ஆகவே வெங்கயா நாயுடு தெற்கினை பார்த்துக் கொள்வார்.இது தவிர சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ராமன் சிங் (சத்தீஸ்கர்), ஷிவ்ராஜ் சிங் சவுஹான் (மத்தியபிரதேசம்) அவரவர்கள் மாநிலங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள். காங்கிரஸை போல அல்லாமல், இரண்டாம் நிலை தலைவர்கள் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

அவுட்லுக்கின் கூற்றுப்படி பார்த்தால் 4 விஷயங்களில் பாஜக தெளிவாக இருக்கிறது.

  1. 70,000 மக்களிடம் பாஜக ஒரு ரகசிய சர்வே எடுத்திருக்கிறது, அதன் படி பார்த்தால் பாஜக நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் தெரிகின்றன

  2. பாஜக / தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களான - பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் மிக குறைவான anti-incumbency அலை தெரிகிறது

  3. anti-incumbency அலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் அரியானாவில் அதிகமாக இருக்கிறது.இந்த மாநிலஙகளில் பாஜக கூட்டணியினை பலப்படுத்தி, மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி தன்னுடைய வாக்கு வங்கியினை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன

  4. மாயாவதி மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளா / மேற்கு வங்காளத்தில் பெரிய அலைகள் என்று ஒன்றுமில்லை


பார்க்க: அவுட் லுக் | இந்தியா டுடே

2 comments:

Vijay said...

1992’விலிருந்து, பா.ஜா.கா’வும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்திருந்தும் அதை கோட்டை விட்டிருப்பது தான் உண்மை. இந்தத் தேர்தலில் அவர்களுக்கு பிரமோத் மஹாஜன் இல்லாதது ஒரு பெரிய குறை.

கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தாலும், Anti-incumbency அவ்வளவு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சட்டம் ஒழுங்கு ரொம்பவே கெட்டுக் குட்டிச் சுவராகப் போய்விட்டது. தினமும் குறந்த பட்சம் ஒரு கொலை. மக்கள் பீதியில் இருக்கிறார்கள். வீட்டில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது. இது பா.ஜா.கா வுக்கு எந்தளவிற்கு பாதகமாக அமையும் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை என்பதைப் பார்க்கும் போது, தமிழகத்தௌ மறந்தே போய் விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இல. கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லை போலும்.

கடந்த 5 பொதுத் தேர்தலில், தமிழகத்தில் எந்தக் கூட்டணி ஜெயிக்கிறதோ, அந்தக் கூட்டணியைச் சார்ந்தவர்கள் தான் மத்தியில் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. தனியாக நின்றால், வேட்பாளரின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் ஓட்டுப் போடுவார்களா என்பதே சந்தேகம்.

Narain Rajagopalan said...

பிரமோத் மஹாஜன் வேலையை தான் அருண் ஜெட்லீ செய்வதாக இருந்து கடைசியில் கைமாறியது. தெற்கில் பாஜக பெரியதாக இல்லை. அவர்களுடைய குறி 130 தொகுதிகள் அவர்களிடமிருந்தும், மீதம் 142 தொகுதிகள் கூட்டணி கட்சிகளிலிருந்தும் வரவேண்டுமென்பது. ஆனால் கணக்கு போட்டால் அப்படி வருவது கஷ்டமென்று தான் தோன்றுகிறது.