தினமணி
சென்னை, பிப். 22: மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இலங்கைப் பிரச்னையை மையமாக வைத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் நிலை எடுத்துள்ளன.
கண்ணப்பன் சந்திப்பு: இந்த நிலையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வரும் முதல்வர் கருணாநிதியை, ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
விடுதலைப் புலிகள்: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதிமுக ஒரு போதும் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.
கூட்டணியில் நீடிக்கும் நிர்பந்தம் காரணமாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு தனது நிலைப்பாட்டை மதிமுக பொதுச் செயலர் வைகோ இதுவரை வெளிப்படுத்தவில்லை.
அதிமுக - மதிமுக இடையே நிலவும் இந்த மறைமுக அரசியல் கருத்து வேறுபாடு ஓசையின்றித் தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் பகிரங்க அழைப்பை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்தார்.
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே அதிமுகவும் கொண்டுள்ளதாக சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
குலாம் நபி ஆசாத்: 2001-ம் ஆண்டு பொதுத் தேர்தலை அதிமுக - காங்கிரஸ் இணைந்து சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் குலாம் நபி ஆசாத், இப்போது அதே பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வேளை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேரும் நிலையில், அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க. நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும்.
அரசியல் முக்கியத்துவம்: ""கடந்த காலத்தில் வேலூர் சிறை வாயிலில் காத்திருந்து வைகோவை சென்று சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால், பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் முதல்வரைச் சந்தித்து நலம் விசாரிக்கும் சாதாரண பண்புகூட வைகோவுக்கு இல்லை'' என்று அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அரசியல் பின்னணியில் வைகோவின் ஒப்புதலுடன், மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
நலம் மட்டுமே...: ""ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் 50 ஆண்டுகள் அவருடன் பழகியவன் என்ற முறையிலும் முதல்வரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்வர் விளக்கினார்'' என்றார் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன்.
Download Eating the Alphabet
5 years ago
1 comment:
காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவதொரு திராவிட கட்சியின் மேல் சவாரி செய்தால்தான் பிழைப்பு நடக்கும் .விஜயகாந்த் சொல்லுவதுபோல் ஒவ்வொரு கட்சியும் தனி தனியாக தேர்தலில் நின்றால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் .செய்வார்களா? இல்லாவிடில் இந்த அரசியல் வியாபாரிகள் சமயத்திற்கு ஏற்றாற்போல் கூட்டணி அமைத்து மக்களை சுரண்டி பிழைப்பு நடத்திகொண்டிருப்பார்கள். இந்த நிலை என்றுதான் மாறுமோ?
Post a Comment