புது தில்லி, பிப். 8: அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (அசோசேம்) வலியுறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இத்தகைய கோரிக்கையை அசோசேம் முன் வைத்துள்ளது. அத்துடன் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் தேர்தல் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதன் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் தொகை வெளிப்படையானதாக இருக்கும் என்றும் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் அசோசேம் சுட்டிக் காட்டியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு செலவிடும் தொகைக்கான உச்ச வரம்பை நீக்கிவிடலாம். ஏனெனில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு தொகை செலவிட்டது என்பதை கணக்கிடுவது இயலாத காரியமாக உள்ளது. இந்நிலையில் உச்ச வரம்பு நிர்ணயிப்பது தேவையில்லாத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தேர்தல் செலவுக்கான வரம்பு, உண்மையிலேயே சாத்தியமில்லாதது. தற்போது வைத்துள்ள வரம்பை, பல்வேறு வகைகளில் வேட்பாளர்கள் மீறுவது கண்கூடாகத் தெரிகிறது. இந்நிலையில் செலவு வரம்பை நிர்ணயிப்பது தேவையில்லாதது. மேலும் தேர்தல் செலவாக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் கணக்கு வெறும் ஊசி முனையளவுதான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலவிடுகிறது என்பது இதுவரை எவருமே அறியாத ஒன்று. தேர்தல் செலவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அத்தொகையின் ஒரு பகுதியை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் மூலம் ஈடு செய்யலாம் என்றும் அசோசேம் பரிந்துரைத்துள்ளது. தற்போது சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ரூ. 10 லட்சமும், மக்களவைத் தேர்தலுக்கு தொகை ரூ. 25 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் வரம்பு நிர்ணயித்துள்ளது. இத்தகைய வரம்பு காரணமாக ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் செய்யும் செலவைக் குறைத்துக் காட்டுவதோடு, அதிக செலவு செய்தது தெரியவந்தால் தாங்கள் தகுதியிழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் செயல்படுகின்றனர். இது அநாவசியமானது என்றும் அசோசேம் தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தாங்கள் பெறும் நன்கொடை விவரத்தை கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம். ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட நன்கொடையை வேண்டுமானால் பரிசீலனைக்கு உட்படுத்தலாம். இதன் மூலம் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.
செய்திக்கு நன்றி: தினமணி
Download Eating the Alphabet
5 years ago
No comments:
Post a Comment