வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சியமைப்பார்கள் என்பது குறித்த வாதங்களும் ஊகங்களும் கற்பனைகளும் வரத் துவங்கி விட்டன.
அதிலொன்றுதான் காங்கிரஸ் அலை வீசுகிறது என்ற எகனாமிக் டைம்சின் கட்டுரை.
'உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பீஹார், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு. இந்த 6 மாநிலங்களில் 291 தொகுதிகள் (மொத்தம் 545) இருக்கின்றன....இம்மாநிலங்களில் நிலவும் மாநில அரசியல், சர்ச்சைகள், மாநில அளவிலான பிரச்சனைகளை சார்ந்து பார்த்தால், காங்கிரஸிற்கே சாதகமான நிலையுள்ளது'. என்ற எகனாமிகஸ் டைம்ஸ் கட்டுரையின் சாராம்சத்தை முன் வைத்த நாராயண், ஆள்வோருக்கு எதிரான மனநிலை (Anti incumbancy) என்பதைக் கணக்கில் கொண்டு தனது அபிப்பிராயங்களைத் தெரிவித்து இருந்தார். (அவரது பதிவு கிழே)
ஆறு மாநிலங்களின் முடிவுகள் ஆட்சியைத் தீர்மானிக்கின்றன என்பது உண்மைதான். அது குறித்து 1998ம் ஆண்டுத் தேர்தலிலிருந்து நான் பேசி வருகிறேன். ஆனால்-
1.இந்த ஆறு மாநிலங்களில் ஐந்தின் முடிவுகள் ஒற்றைத் திசையில் இல்லாமல் பலவாறாகப் பிரிந்து பல கட்சிகளால் பங்கிட்டுக் கொள்ளக் கூடிய (Fractured Mandate) என்ற நிலைதான் இன்று நிலவுகிறது. இந்த நிலைதான் தேர்தலுக்குப் பிறகு மத்தியிலும் பிரதிபலிக்கும்.
2. வங்கத்தில் மார்க்க்சிஸ்ட்கள் சில இடங்களில் பின்னடைவை சந்திக்கலாம். ஆனால் அதன் பலன் முற்றிலுமாகக் காங்கிரசிற்குக் கிடைத்து விடாது. அதை திரிணாமூலுடன் அது பங்கிட்டுக் கொள்ள நேரிடும்
3.காங்கிரஸ் தனது வெற்றிக்கு மாநில அளவில் செல்வாக்குக் கொண்ட கட்சிகளைச் சார்ந்திருக்கிறது. ஆனால் தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கு உண்டா என்பதைத் தெளிவாகச் சொல்ல மறுக்கிறது. 'தேசிய அளவில் கூட்டணி இல்லை, மாநில அளவில் தொகுதிப் பங்கீடுகள்தான்' என்ற அதன் நிலைப்பாடு மாநிலக்கட்சிகளுக்கு உற்சாகமளிக்கவில்லை(உதாரணம் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்)
4.தேர்தலுக்குப் பின் தொங்கு நாடாளுமன்றமோ, காங்கிரஸ்-பிஜேபி இடையே சம நிலையோ ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் மாநிலக் கட்சிகள் போட்டியிட அதிக இடங்களைக் கோரும். அதற்கு இணங்கினால் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெறுவது சிரமம். இணங்காவிட்டால் வலுவான கூட்டணிகள் உருவாகாமல் போகலாம்
5.பா.ஜ.கவின் ராமர் கோவில் தொடர்பான அறிவிப்பு உ.பி.யில் தீவிர இந்து நம்பிக்கை கொண்டவர்களின் வாக்குகளை அதற்கு ஆதரவாகத் திருப்பும். நடு நிலை இந்து வாக்காளர்களின், வாக்குகளுக்காக காங்கிரஸ்+சமாஜ்வாதி, மயாவதியின் பகுஜன் சமாஜ், பாஜக ஆகியவை போட்டியிடும். அப்போது வாக்குகள் ஜாதி அடிப்படையில் பிரிய நேரிடும். இந்தத் தேர்தலிலும் மாயாவதி தலித் + பிராமணர் கூட்டணியைத் தொடர்ந்தால் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு கிட்டிய வெற்றிக்கு சமீபத்தில் அவர் செல்லக் கூடும். இந்த முறை, இந்தக் கூட்டிற்குள் அவர் இஸ்லாமிய வாக்காளர்களையும் கொண்டுவர முயற்சிப்பார் என்பது என் எதிர்பார்ப்பு. தேர்தலுக்குப் பின் தன்னை ஒரு பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த அவர் முயற்சிப்பார் என்பதால் அவர் உ.பியில் காங்கிரசிற்குக் கடும் போட்டியைக் கொடுப்பார்
6.மகாராஷ்டிராவில் சரத்பவாரின் கட்சி எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பது அங்கு அதற்குக் காங்கிரஸ் ஒதுக்கப் போகும் இடங்களைப் பொறுத்தது.
7பீகாரில் ஆட்சியில் இல்லாததால் லாலுக்கு வாய்ப்பு அதிகம் (anti incumbancy theoryயின் படி) ஆனால் அது அவருக்கும் பாஸ்வானுக்குமிடையே எத்தகைய உறவு தொடரும் என்பதைப் பொறுத்தது. நிதீஷ் அரசு மீது மக்களுக்குக் கசப்பு இருப்பதாகத் தெரியவில்லை.anti incumbancy என்பதை விட ஒரு அரசு அடிப்படை வசதிகளைத் தருகிறதா என்ற அடிப்படையிலே மக்கள் வாக்களித்து வருவதை அண்மைக்கால ஐந்து மாநில தேர்தல்கள் காட்டுகின்றன. இருந்தாலும் பீகாரில் வாக்குகளைத் தீர்மானிப்பது கட்சி அரசியலை விட ஜாதி அரசியல்தான்
8.ஆந்திராவில் தெலுங்கானா பிரசினையில் காங்கிரஸ் எடுத்த பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் பாணியிலான முடிவு அதற்கு அந்தப் பகுதியில் பின்னடைவை ஏற்படுத்தும். தெலுங்கு தேசம் + தெலுங்கானா ராஷ்டிய சமிதி + மார்க்சிஸ்ட்கள்+ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் 'கிராண்ட் அலையன்ஸ்' ஒரு புறம் இருக்க, காங்கிரசிற்குப் பெரும் சவால் சிரஞ்சீவியின் பிராஜாராஜ்யமாக இருக்கும்.'காங்கிரசிற்கு வாக்களிக்காதீர்கள்' எனப் பேசி வரும் சிரஞ்சீவி, ஜெயிக்கிறாரோ இல்லையோ, வாக்குகளைப் பிரிப்பார்.
9.தமிழகத்தில் காங். கூட்டணியில் திமுகவைத் தவிர வேறு யார் இருப்பார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. விஜயகாந்த் இணைந்து கொள்ளக் கூடும். ஆனால் அவரது வாக்குத்தளமாக இருந்த இளைஞர்கள் இலங்கைப் பிரசினையில் அவரது மந்த நிலையை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. இலங்கைப் பிரசினையின் காரணமாக புதிய தலைமுறை வாக்காளர்களின் ஓட்டுக்கள் காங்-திமுக விற்கு எதிராகப் போகும் என நினைக்கிறேன். காங்கிரஸ், திமுக, அதிமுக இந்தப் பிரசினையின் உணர்ச்சி வேகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வடிந்து விட வேண்டும் என விரும்பினாலும், 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தங்களது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையில், பாமகவும் மற்ற கட்சிகளும் இதை நீறு பூத்த நெருப்பாகப் பேணி வரும் இந்தக் கட்சிகளுக்கு நாடாளுமன்ற இடங்களை விட சட்ட மன்றத் தேர்தலில் பேரம் பேச உதவும் பலம் முக்கியமானது.
இது போன்ற சூழ்நிலையில் இந்த ஆறு மாநிலங்களில் காங்கிரசின் கை ஓங்கிக் காணப்படும் எனச் சொல்வதற்கில்லை.
காங்கிரசிற்கு சாதகமாக அமையக்கூடியது பா,ஜ.கவின் உட்கட்சிப் பூசல்களும், அதன் மதவாத அணுகுமுறையும், ஆங்காங்கு மாநிலக் கட்சிகளின் காரணமாகப் பிரியக் கூடிய வாக்குகளும்தான். உட்கட்சிப் பூசல்களை RSS பஞ்சாயத்து செய்து கட்டுக்குள் கொண்டு வரும்.மற்ற அம்சங்களின் தாக்கம் கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டவை.
பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய அம்சங்களைவிட தொகுதி அல்லது மாநிலம் சார்ந்த பிரசினைகள் சார்ந்துதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது என் கணிப்பு.
எனவே இன்னொரு திரிசங்குப் பாராளுமன்றத்தை எதிர்பார்க்கலாம்
Download Eating the Alphabet
5 years ago
2 comments:
பாராளுமன்றம் திரிசங்காக அமையப்போவது என்னவோ உண்மாதான் ஆனால், அதன் தலைமையில் யார் இருக்கப்போகிறார்கள், என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு, அது பாஜக வின் மாநிலத்தேர்தல் வெற்றிகள் அப்படியே மத்திய தேர்தலுக்கும் கிடைக்கும் என்று தோன்றவில்லை,
அந்த விஷ்யத்தில் காங்கிரஸ் நிலமை சற்று சாதகமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
தற்போதைய நிலைமையில் பா.ஜ.கவின் மீதான தேசிய அளவிலான நம்பிக்கை குறைவு. தொங்கு பாராளூமன்றம் தான் என்பது சாத்தியமான ஒரு விஷயம். ஆனாலும், கம்யுனிஸ்டுகள் எந்தளவிற்கு கூட்டணியினை பலப்படுத்துகிறார்கள் என்பதும், மாநிலங்களில் (தமிழ்நாட்டுக்கு விஜயகாந்த், ஆந்திராவுக்கு சிரஞ்சீவி)காங்கிரஸின் ஒட்டினை சிதறடிக்க ஆட்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறார்கள்.
காங்கிரஸின் இப்போதைய கூட்டணி கொள்கை, கூட்டணி அரசியல் பங்கு பேரத்தில் எந்தளவிற்கு பயன்படும் என்பது தெரியவில்லை. நீங்கள் சொன்ன சரத் பவார் ஒரு பக்கம் இருக்க, சிபிஜ தொந்தரவுகள் அதிகமானால் முலாயம் சிங்/அமர்சிங் சடாலென கம்யுனிஸ்டுகளோடு போக வாய்ப்பிருக்கிறது. கல்யாண் சிங்கினையே அனுமதித்தவர்கள் அவர்கள் ;)
ஆக காங்கிரஸிற்கு பேப்பர் அளவில் ஒரு சாதகமான பார்வை இருக்கிறது.
Post a Comment