Tuesday, February 17, 2009

வலைப்பதிவிற்கு வந்திருக்கிறார் அத்வானி

இந்தத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் அத்வானியை வலைப்பதிவிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர் முதல் பதிவு தொழில்நுட்பம் தேர்தல் பிரசாரத்தில்
எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுவைபட விவரிக்கிறது.

அத்வானி சொல்வது போல் பிரசாரத்தில் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதா?

உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் எழுதுங்கள்



தேர்தல் பணி: துண்டுப் பிரசுரத்திலிருந்து இணையம் வரை

என் வலைப்பதிற்கு வருகை தந்துள்ள நண்பர்களே, வருக. இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ள என் இளம் சகாக்கள், வலைப்பதிவில்லாத ஒரு
அரசியல் இணைய துறை (portal) கையெழுத்தில்லாத (மொட்டைக்) கடிதம் போல எனச் சொல்கிறார்கள். அவர்கள் கூற்றிலுள்ள மறுக்கவியலாத நியாயத்தை
நான் உடனே ஏற்றுக் கொண்டேன்.


இணையத்தை அரசியல் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, குறிப்பாக தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற
யோசனை எனக்கு உற்சாகமளிக்கிறது.1952ல் நடைபெற்ற முதல் தேர்தலிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பிரசாரகனாகவோ, வேட்பாளராகவோ பங்கேற்கும் ஒரு நல்வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், நான், தகவல் பரிமாற்றத்திற்கான கருவிகள் எப்படி பரிணாம வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். தகவல் பரிமாற்றத்தைப்
பொறுத்தவரை நான் தொழில்நுட்பத்தின் பக்தனுமல்ல, அதை மறுப்பவனுமல்ல (technology-agnostic). இந்த விஷயத்தில் என் தத்துவம் ரொம்ப சிம்பிள்: பயன்படுகிறதா அது வரவேற்கத்தக்கது. அறுபதாண்டுகளுக்கு மேல் நீளும் என் அரசியல் வாழ்வில், ஒவ்வொரு புதிய தகவல் தொழில்நுட்பத்தையும்-ஆதிகாலத்து கேசியோ டிஜிட்டல் டைரி முதல் ஐ-பாட், ஐ-போன் வரை- நான் உற்சாகத்துடன் அரவணைத்துக் கொண்டிருக்கிறேன்.

முதல் பொதுத் தேர்தலின் போது 25 வயது இளம் அரசியல் ஆர்வலனாக, நான் பாரதிய ஜன சங் கட்சிக்கு ராஜஸ்தானில் பிரசாரம் செய்தேன். அதற்கு முந்தைய ஆண்டுதான் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அந்தக் கட்சியை ஆரம்பித்திருந்தார்.

அப்போது ஒரு துண்டுப் பிரசுரம் அச்சிடுவது கூட ஓர் புதுமையாக இருந்தது. ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது.

கோட்புட்லி என்ற இடத்தில் தேர்தல் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்திருந்தது. அந்தப் பகுதியில் இருந்த
பிரசினைகளை அறிந்து கொண்டு, எங்கள் கட்சி வேட்பாளாரைத் தேர்ந்தெடுத்தால் கட்சி அந்தப் பிரசினைகளுக்கு எப்படியெல்லாம் தீர்வு காணும்
என்பதை விளக்கி ஒரு பிரசுரம் தயார் செய்து அச்சிட்டுக் கொண்டேன். ராஜஸ்தானிலிருந்து கட்சியின் தேர்தல் அறிக்கையின் பிரதிகளையும் எடுத்துக் கொண்டேன்

வாக்குப் பதிவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னாதாகத் தொகுதிக்குப் போய்விட்டேன். தேர்தல் முடியும்வரை அங்கேயே தங்கவும் முடிவு செய்திருந்தேன்.

ஜெய்ப்பூரிலிருந்து நான் கொண்டுவந்திருந்த பிரசுரங்களை இறக்கிக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த எங்கள்
வேட்பாளர் என்னை விநோதமாகப் பார்ப்பதைக் கவனித்தேன். அப்போது அவர் வயதில் பாதிதான் எனக்கு. ஆனால அவர் என்னை அத்வானிஜி என்று என்னை மரியாதையோடு அழைத்துச் சொன்னார்: "இவற்றையெல்லாம் நானும் என்
தொண்டர்களும் தொகுதியில் விநியோகிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? ஆனால் அதற்கான தேவை என்ன இருக்கிறது. இந்த அறிக்கை, இந்த பிரசுரம் இவற்றால் எல்லாம் நம் பிரசார உத்திக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

இதை விநியோகிக்க நிறைய நேரம் செலவிட வேண்டும். நீங்கள் வற்புறுத்தினால் செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கு விழ இருக்கும் வாக்குகளை விட ஒரு ஓட்டுக் கூட கூடுதலாகக் கிடைக்காது" என்றார்.

"ஒரு விஷயம் சொல்லட்டுமா அத்வானிஜி" என்று கேட்டுவிட்டு அவர் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் என்னை யாரும் தோற்கடிக்க முடியாது. இது குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. இங்கு
போட்டியிடும் வேட்பாளர்களில் நான் ஒருவன் மட்டும்தான் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவன்." அவர் அடுத்துச் சொன்ன வாக்கியம் இந்தியாவில் தேர்தல்களின் யதார்த்தம் குறித்து என் கண்களைத் திறந்தது. முதலில், வாக்குச் சாவடிக்குப் போகும் எந்தவொரு குஜ்ஜரும் எனக்குத்தான் வாக்களிக்கப் போகிறான். ஏனெனில் நான் ஒரு குஜ்ஜர். இரண்டாவதாக குஜ்ஜர் அல்லாதவர்களில்
பெரும்பான்மையானவர்களும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் அநேகமாக நான்தான் ஜெயிப்பேன் என அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தோற்கப் போகிற வேட்பாளருக்கு வாக்களித்து தங்கள் ஓட்டை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்" என்றார்.

பல ஆண்டுகளாக, அநேகமாக 1980 இறுதிவரை, நாளிதழ்கள், பத்திரிகைகள், அகில இந்திய வானொலி, இவைதான் அரசியல் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இருந்த சாதனங்கள். அரசிற்கு சொந்தமானவை அல்ல என்பதால், அச்சு
ஊடகங்கள், சுதந்திரமானவையாகவும், காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுபவையாகவும் இருந்தன. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வானொலியை காங்கிரஸ் கட்சி கூச்சநாச்சமில்லாமல் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்தது.எனக்கு
நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் 1982ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வானொலி என்.டி.ராமராவின் பெயரைச் சொல்லவே இல்லை. ஆனால் அவர் அந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அவரைப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள கவர்னர் அழைத்த போதுதான்
மக்கள் முதன்முதலாக வானொலியில் என்.டி.ராமராவ் பெயரைக் கேட்டார்கள்.

இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்காலக் கொடுங்கோல் ஆட்சி வீழ்ந்த பிறகு ஏற்பட்ட ஜனதாக் கட்சி ஆட்சியில் நான் செய்தி ஒலிப்பரப்புத் துறை அமைச்சராக இருந்த போது அரசு ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் மனோபாவத்தையும், அமைப்பையும் மாற்றும் பெரும் பொறுப்பை நான் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் கருத்தை மக்கள் முன் வைக்க வானொலியில்நேரம் ஒதுக்குவது என நான் எடுத்த முடிவு பெரிதும் வரவேற்கப்பட்டது. எனக்குப்
பெருமிதம் ஏற்படுத்திய முடிவு அது.


இணையத்திற்குப் பல சிறப்புகள் உண்டு.அவற்றில் முக்கியமானது அது அரசுக்கோ, அல்லது எந்தவொரு தனியார் ஊடகக் குழுமத்திற்கோ சொந்தமானதல்ல என்பதாகத்தானிருக்க முடியும்.அது எல்லோருக்கும் பொதுவானது. அந்தவகையில், இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த தகவல் பரிமாற்ற சாதனங்களிலேயே இதுதான் ஜனநாயகமானது என்ற பெருமைக்குரியது. அரசியில் செய்திகளைத் தணிக்கை செய்வது என்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவும் முடியாதது (கம்யூனிஸ்ட் நாடுகள், சர்வாதிகார அரசுகள் நீங்கலாக)

1952ல் துவங்கிய இந்தியத் தேர்தல்கள் வெகுவாக மாறிவிட்டன.இந்திய
வாக்காளர்கள், ஒட்டு மொத்தமாகவும் சரி, தனியாகவும் சரி, முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டுக்கு உள்ள சக்தி பற்றி ஜனநாயக ரீதியில் ஏற்பட்டிருக்கும் பிரஞ்கையும், விழிப்புணர்வும் அளவிடமுடியாத வண்ணம் வளர்ந்திருக்கின்றன.
எந்த ஒரு அரசியல்கட்சியும், எந்த ஒரு வேட்பாளரும் அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட முடியாது. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை வாக்காளர்கள் அதன் செயல் திறனைக் கொண்டு அளவிடுகிறார்கள். ஆட்சியைப் பிடிக்க எண்ணுபவர்களை அவர்களது சொல்வது தங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருந்திப் போகிறதா என எடை போடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், கோட்புட்லியில் எங்கள் வேட்பாளர், அச்சிட்ட பிரசுரம் எல்லாம் தேவையில்லை என்று சொன்ன அந்த நாட்களை விட, இன்று, தேர்தல் பிரசார வெளியீடுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியத்துவம்
பெற்றிருக்கிறது

கையால் ஈய எழுத்துக்களை அடுக்கிச் சிறிய அச்சகங்களில் (இவை இன்று அநேகமாக மறைந்து விட்டன) அச்சிடும் துண்டுப் பிரசுரங்களிலிருந்து என் சொந்தத் தளத்தில் வலைப்பதிவு எழுதுவதுவரை நானும் தேர்தல் பிரசாரத்திற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வெகு தூரம் வந்து விட்டேன்.

என் முதல் வலைப்பதிவைப் படிக்க உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டதற்கு நன்றி. விரைவிலேயே இன்னொரு பதிவோடு வருவேன்.
அதுவரை நல்வாழ்த்துகள்.


அத்வானியின் வலைப்பதிவுகளைப் படிக்க:

http://blog.lkadvani.in/

3 comments:

குப்பன்.யாஹூ said...

அத்வானியும் ஒபாமா ஆகலாம் என்று நினைக்கிறார் போல.

அத்வானி (அவர் மகள் பூர்ணிமா) இதில் செலுத்தும் ஆர்வத்தை, பிரசாரத்தில் செலுத்தினால் இன்னும் பயனாக இருக்கும். காங்கிரஸின் மோசமான விலைவாசி கொள்கை, அணு ஒப்பந்த விவகாரம், நட்வர் சிக்ன், சிபு சோரன், டி ஆர் பாலு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றை தெளிவாக பிரச்சாரம் பண்ணினாலே ஆட்சியை பிடிக்கலாம்.

நல்ல வாய்ப்பு, பயன் படுத்தி கொள்ள தெரிய வில்லையே என்ற வருத்தம் எனக்கு.

குப்பன்_யாஹூ

Anonymous said...

http://churumuri.wordpress.com/2009/02/17/only-a-third-alternative-can-truly-liberate-india/

Please post the translation of above (Devegowda article/interview) in your therthal blog.

thanks.
Mahesh

Anonymous said...

ADVANI DAUGHTER'S NAME IS PRATHIPA