Tuesday, February 10, 2009

காங்கிரஸ் அலை வீசுகிறதா?

இன்றைய எகனாமிக் டைம்ஸ் தினசரியில் எம்.கே.வேணு, காங்கிரஸ் முன்னிறுத்தும் யு.பி.ஏ விற்கு சாதகங்கள் அதிகம் என்று எழுதியிருக்கிறார். அவர் எழுதியதன் சாராம்சமும் என் பார்வைகளும் கீழே.

சாராம்சம்

இந்தியாவின் ஒட்டுப் போடும் மக்கள் தொகை சராசரியாக 67 கோடி. இதில் 55% 6 மாநிலங்களில் இருக்கிறது - உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பீஹார், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு. இந்த 6 மாநிலங்களில் 291 தொகுதிகள் (மொத்தம் 545) இருக்கின்றன. பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட இன்றைக்கு முக்கியமாக தேசிய ஆட்சியினை நிறுவும் அதிகாரத்தில் இருக்கின்றன. இம்மாநிலங்களில் நிலவும் மாநில அரசியல், சர்ச்சைகள், மாநில அளவிலான பிரச்சனைகளை சார்ந்து பார்த்தால், காங்கிரஸிற்கே சாதகமான நிலையுள்ளது.

சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸை நம்பி தான் ஆக வேண்டும். இல்லாவிடில் மாயாவதியினை தூக்கியடிக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில் சமாஜ்வாடி கட்சி 35 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது (மொத்தம் 80/81 தொகுதிகள்). இப்போதிருப்பதை அப்படியே தக்கவைத்து கொண்டு காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றும் சாத்தியங்கள் இருக்கின்றன.மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் என்.சி.பிக்கும் இதே மாதிரியான ஒரு நிலைமை உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையின் மீதும் அசையாத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கிறது.

மன்மோகன் சிங்கினை முன்னிறுத்தி, இப்போதிருக்கும் அரசியல்/பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் என்று காங்கிரஸ் திடமாக நம்புகிறது. ஒரு பொருளாதார வல்லுநரின் தலைமையில் நாடு இருந்தால், இப்போது இருக்கும் உலகளாவிய பொருளாதார சிக்கலிலிருந்து நாட்டினை முன்னேற்ற, சிக்கல்களை களைய முடியும் என்கிற வாதத்தினை காங்கிரஸ் முன்வைக்கிறது. இப்போதே காங்கிரஸ் தன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி உடன்பாடு நடவடிக்கைகளில் இறங்க தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்கிற இரட்டை அஸ்திரங்களில் மூன்றாவது அணி பலவீனமாக இருக்கும். அந்த ஸ்திரத்தன்மை, பாதுக்காப்பினை தான் இரண்டு தேசிய கட்சிகளும் முன்வைக்கின்றன. காங்கிரஸுக்கு இன்னொரு பலமான விஷயம், பா.ஜ.க போல அதற்கு மத சாயம் இல்லாமலிருப்பது. மதச்சார்ப்பின்மை என்பதே காங்கிரஸின் இன்னொரு சீட்டாக முன்வைக்கப்படும்.

கெனிஷிய தியரி தான் இன்றைக்கு உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார விடிவாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஒரு கெனிஷியவாதியாக பார்க்கப்படலாம் கடந்த திட்ட கமிஷன் கலாந்தாய்வில் கலந்து கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிகில்ட்சு சொன்னது “ இன்றைக்கு வலது சாரி என்று யாருமேயில்லை. எல்லோரும் கெனிஷிய தியரியினை எப்படி இடம்பெற செய்யலாம் என்பதில் தான் போட்டி போடுகிறார்கள்”.

ஒரு வேளை, தேர்தல் முடிந்து மீண்டும் கம்யுனிஸ்டுகள் ஒன்றாக சேரலாம் என்கிற பட்சத்தில், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தினை வைத்துக் கொண்டு, காங்கிரஸுக்கு அதுவும் சாதகமாக முடியும்.

என் பார்வை

மேற்சொன்ன வகையில் பார்க்கும் போது கண்டிப்பாக காங்கிரஸிற்கு சாதகமே. ஆனால், மக்களின் மனதில் தொடர்ச்சியாக ஒரு anti-incumbency விஷயம் ஒடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு சிக்கலான மனநிலை.

மாநிலங்களின் பலத்தினை வைத்து கொண்டு தான் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன்சிங் வரையிலான கூட்டணி அரசுகள் ஆட்சிபுரிந்திருக்கின்றன. மாநிலங்கள் / பிராந்திய கட்சிகள் இன்றைக்கு தேசிய அளவிலான அரசியல்/சமூகம்/பொரூளாதாரம் ரீதியிலான அச்சுறுத்தல்களையும், சாதகங்களையும் அளிக்கின்றன. முக்கியமாக தெற்கில் பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட அசுர பலத்தோடு இருக்கின்றன. கர்நாடகாவில் பா.ஜ.கவும், ஆந்திராவில் காங்கிரஸும் ஆண்டாலும், அதற்கு இணையான பலம் பிராந்திய கட்சிகளால் மட்டுமே பெற முடிகிறது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தேசிய கட்சியும் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவில் காங்கிரஸும், கம்யுனிஸ்டுகள் மாறி மாறி ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே நிலை. அப்படி பார்க்கையில், பா.ஜ.கவினை விட காங்கிரஸிற்கு தெற்கில் செல்வாக்கு அதிகம். ஆக இது ஒரு சாதகமான பார்வை. தற்போதைய ராஜஸ்தான்,டெல்லி வெற்றிகளும் காங்கிரஸிற்கு ஊக்கத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் தெற்கில் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி அரசுகள் மீது கடுங்கோவமும், எரிச்சலோடும் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை (உ-ம் ஆந்திரா, தற்போதைய தமிழ்நாடு). பா.ஜ.க தெற்கிலிருக்கும் செல்வாக்கு மிகக் குறைவு. பா.ஜ.கவினை விட கம்யுனிஸ்டுகளுக்கு தெற்கில் செல்வாக்கு அதிகம்.

ஆகவே சாதகங்கள் அதிகமிருந்தாலும் its too early to predict the voters’ mind.

இந்த பதிவு தேர்தல் 2009லிருந்து மறுவெளியீடு செய்யப்பட்டது.

3 comments:

butterfly Surya said...

its too early to predict the voters’ mind.
Absolutely right..

We have to wait a little bit to predict..

Nice post. Thanx

Vijay said...

பா.ஜா.கா கோவில் கட்டுவோம், கோவில் கட்டுவோம் என்று புலம்பலி விட்டாலே அவர்கள் முன்னேற வழி செய்தாகிவிடும். இந்த 5 ஆண்டுகளை 2004-2009 பா.ஜா.க தென்னிந்தியாவில் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கலாம். தி.மு.க / அல்லது அதிமுக கூட கூட்டணி தான் வைப்போம் என்றில்லாமல், விஜய்காந்த் போன்றவர்களோடு நேசக்கரம் நீட்டி, கட்சியையும் பலப்படுத்தியிருக்கலாம். ஏனோ அவர்களுக்கு தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டனர் போலும்.

குப்பன்.யாஹூ said...

எனக்கும் பீ ஜெ பி வரத்தான் ஆசை, ஆனால் திரும்பவும் காங்கிரஸ் தான் வரும் போல.

அத்வானியை பீ ஜெ பி தொண்டர்கள் விரும்புகின்றனர் ஆனால் பொது மக்கள் விரும்ப வில்லை.

தமிழகத்தில் கூட நெல்லை, தூத்துக்குடி, பெரியகுளம், நாகர்கோவில், கோவை, சிவகாசி (விருதுநகர்) , பொள்ளாச்சி, சேலம், தருமபுரி, தஞ்சை, மத்திய சென்னை போன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெல்லும் போல.

நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளுக்கு கொண்டாட்டம், வ்யாபாரம் பெருக்க தேர்தல் சர்வே பெருமளவு உதவும.

குப்பன்_யாஹூ