Tuesday, February 17, 2009

சோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்

சென்னை, பிப். 16: இலங்கைப் பிரச்னை தொடர்பாக, பாமக மீது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கோபத்தில் உள்ளார். இது குறித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விளக்க, தில்லி விரைந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

முன்னதாக, தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், சென்னையில் ராமதாஸை திங்கள்கிழமை காலை சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, தில்லி பயணத்தை திங்கள்கிழமை பிற்பகல் மேற்கொண்டார் ராமதாஸ்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் இரு அணிகளாகப் பிரிந்து குரல் கொடுத்து வருகின்றன.

அதில், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாமகவும் இணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கின.

முழு அடைப்பு, மனித சங்கிலி என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

அதேசமயம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவையை உருவாக்கியுள்ளன.

பாமகவுக்கு விடப்பட்ட வேண்டுகோள்...

இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலையை விளக்கி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ""இலங்கைப் பிரச்னையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் வேறுபட்டு நிற்கின்றனர். இது ஏன் என்பதை விளக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். சிதம்பரத்தின் பேச்சு, பாமகவுக்கு விடப்பட்ட வேண்டுகோளாகவே கருத வேண்டியிருக்கிறது.

சுதர்சனத்தின் தில்லி பயணம்... மக்களவைத் தேர்தல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், கூட்டணி அடிப்படையிலும் முடிவெடுக்க தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனத்தை கடந்த வாரம் தில்லிக்கு அழைத்தது கட்சி மேலிடம்.

மக்களவைக் கூட்டத் தொடருக்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் தில்லியில் இருக்கிறார்.

சுதர்சனம் மற்றும் தங்கபாலு ஆகியோர் தமிழகத்தின் அரசியல் நிலவரம், மத்தியில் கூட்டணியில் உள்ள தமிழகக் கட்சிகளின் செயல்பாடு ஆகியவற்றை கட்சி மேலிடத்துக்கு தெளிவாக எடுத்துக் கூறினர்.

ராமதாஸýடன் சந்திப்பு:

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாûஸ சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார் சுதர்சனம்.

""மத்தியில் தங்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று சுதர்சனம் அப்போது கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்தே, ராமதாஸ் அவசர அவசரமாக தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி 17.2.2008

இது தொடர்பாக தில்லியில் இந்து நாளிதழ் நிருபர் பாலாஜிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டி:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுக -அதிமுக இரண்டையும் தங்கள் கட்சி சமதூரத்தில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் மற்றும் ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளுடன் தாங்கள் இணைந்திருப்பது இலங்கை ராணுவத்தின் மூலம் தொடர்ந்து துன்பத்திற்குள்ளாகி இருக்கும் தமிழர்களுக்காகப் போராடவே என அவர் தெளிவு படுத்தினார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி அரசிற்குத் தங்கள் கட்சியின் ஆதரவு தொடரும்.

The Hindu 17.2.2009

இந்தப் பின்னணியில் என் கேள்விகள்:

1.'ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு அவமதித்துவிட்டது' 'மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது' எனப் பேசி வந்திருக்கும் மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரசையே தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கோருமா?

2.அல்லது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டங்களில் பங்கேற்று வரும் பா.ஜ.கவுடன் அணி சேருமா?

3.அல்லது தனி ஒரு அணியாக இலங்கை பிரசினையை முன்னிறுத்திக் களமிறங்குமா?

பா.ம.க. என்ன செய்யும்? என்ன செய்ய வேண்டும்? வாசகர்களே உங்கள் கருத்தென்ன?

மாலன்

28 comments:

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

மாலன் சார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை விவகாரம் ஒரு பொருளாக அதாவது வாக்கு வங்கியை நிர்ணயிக்கும் பொருளாக இருக்கும் எனத் தோன்றவில்லை.

கூட்டணிகள் எப்படி அமையும் போதும் எந்தக் கூட்டணியும் இந்தப் பொருளை முன்நிறுத்தும் எனத் தோன்றவில்லை

இலங்கையில் நடக்கும் போராட்டம் தொடர்பாக இங்கே தமிழகத்தில் ஒரு தன்னெழுச்சி உண்டாகிவிட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்

அப்படி நிகழாத ஒரு விஷயம் தேர்தல் பொருளாக இருக்கப் போவதில்லை

குப்பன்.யாஹூ said...

பாமகாவிர்க்கு இலங்கை தமிழர் பிரச்சனையில் இரு நிலைப்பாடு உண்டு,. தமிழகத்தில் ஒரு நிலை, டெல்லி போனால் வேறு ஒரு நிலை.

உண்மையான அக்கறை இருந்தால், அன்புமணியை கொண்டு மத்திய அரசின் ராணுவ உதவிகளை நிறுத்தி இருக்கலாம், அல்லது வேலுவை கொண்டு பேச செய்து இருக்கலாம்.

முன்பு தினமணிக்கு இப்படித்தான் மண்டல் கமிசன் பிரச்சனையில் இரு நிலைப்பாடு உண்டு.

தமிழகத்தில் தினமணி இட ஒதுக்கீட்டை, மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஆதரித்து எழுதும். வடக்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் மண்டல் கமிசனை எதிர்த்து எழுதும்.

அதே நிலை இன்று பாமகாவிர்க்கு.

குப்பன்_யாஹூ

Narain Rajagopalan said...

உண்மையிலேயே இலங்கை தமிழர் விவகாரத்தில் பாமகவிற்கு முக்கியத்துவம் இருப்பின் அது பாஜகவோடு சேரலாம். இல்லையெனில் மூன்றாவது அணியோடு சேரலாம். காங்கிரஸோடு சமரசம் செய்து கொள்வது என்பது கொள்கைக்கு முரணானது. ஆனாலும், தேர்தல் சமயத்தில் காங்கிரஸோடு ராமதாஸ் முறைத்து கொள்ள மாட்டார் என்று தான் தோன்றுகிறது.

Anonymous said...

யார் பாமகவிற்கு அதிக இடங்கள் தருவார்கள் என்பதையும் அவர் கருத்தில் கொள்வார்.பேரங்கள் இன்னும் துவங்கவேயில்லை, அதற்குள்ளா விலை முடிவாகும் :).
தேர்தலுக்குப் பின் பாமக அணி மாறலாம்.இலங்கைத்தமிழர் பிரச்சினையில் னாடகம் ஆடுவதில்தான் போட்டி நடக்கிறது , தீர்ப்பதில் அல்ல :(.

சிவாஜி த பாஸ் said...

கண்டிப்பாக, அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரும், ஒருவர் கூட வெற்றி பெறபோவதில்லை! இலங்கை பிரச்சினையில் இவர்களின் ஒட்டு மொத்த துரோகம் தமிழர்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்! உங்களுக்குதான் தெரியுமே, ஐயா வெற்றி பெறும் இடத்தில் இருப்பார் என்று!

சிவாஜி த பாஸ் said...

Narain சரியாக சொன்னார், அவருக்கு வாழ்த்துக்கள்!

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ஆயுதம் வழி ஒரு அரசமைப்பு ( தனித் தமிழீழம்) இந்தியாவின் எல்லையில் உருவாகி அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல

அதை உறுதி செய்தது இராஜீவ் மரணம்

ஆக அப்படி ஒரு அரசமைப்பு உருவாவதற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு உதவுவதாக அமைகிறது

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ஆயுதம் வழி ஒரு அரசமைப்பு ( தனித் தமிழீழம்) இந்தியாவின் எல்லையில் உருவாகி அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல

அதை உறுதி செய்தது இராஜீவ் மரணம்

ஆக அப்படி ஒரு அரசமைப்பு உருவாவதற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு உதவுவதாக அமைகிறது

அபி அப்பா said...

மாலன்!

திமுக \அதிமுக இரண்டுமே பாமகவை தன் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என வெளிப்படை அறிக்கை விட்டால் எல்லா பிரச்சனையும் முடிந்து விடும்! ஆனால் அரசியல் அனாதை பாசக கூட பாமக வை சேர்த்து கொள்ள வாய்ப்பு அதிகம்! ஏனனில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 800 வாக்குகள் வைத்திருக்கும் பாசக வடமாவட்டங்களில் சராசரி 2000 வாக்குகள் வைத்திருக்கும் பாமகவோடு கூட்டு சேர்ந்தால் தான் தன் தலைமையிடம் வாங்கிய காசுக்கு ஏதாவது பதில் சொல்லலாம்! அதற்காகவே அந்த கூட்டு குழம்பு எல்லாம் உதவும்.

Sanjai Gandhi said...

//சிவாஜி த பாஸ் said...

கண்டிப்பாக, அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரும், ஒருவர் கூட வெற்றி பெறபோவதில்லை! இலங்கை பிரச்சினையில் இவர்களின் ஒட்டு மொத்த துரோகம் தமிழர்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்! உங்களுக்குதான் தெரியுமே, ஐயா வெற்றி பெறும் இடத்தில் இருப்பார் என்று!
//

இதே போல சிலர் பேசுவது ரொம்ப நகைச்சுவையா இருக்கு. போன வாரம் இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் , இந்த நாட்டிற்கு எந்தக் கட்சி சிறந்தது என்ற கேள்விக்கு காங்கிரசிற்கு சென்னையில் 68% பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இது தேசிய சராசரியை(50%) விட அதிகம். தேர்தல் வரட்டும் பார்க்கலாம்.

Sanjai Gandhi said...

//காங்கிரஸோடு சமரசம் செய்து கொள்வது என்பது கொள்கைக்கு முரணானது.//

அதெல்லாம் கொள்கை உள்ளவர்களுக்கு. :)

அபி அப்பா said...

மிஸ்டர் மாலன்! அடுத்து செய்ய வேண்டியது காங்கிரஸ், ரொம்ப பெரிசில்லை இன்னியும் இல்லை திருமா தானே அதுக்கு தங்கபாலுவை தூக்கிட்டு யசோதா, இல்லாட்டி ஜெயந்தி நடராசனை தமிழக தலைவரா போடலாம்! அப்படி செய்யும் முன்னே தங்க பாலுக்கு அதே தொகுதியும், கானா பீனா தான்னா இனை அமைச்சர் பதவியும் தரப்படும் என சொல்லி வாயடைக்கலாம் இல்லாட்டி மெகா டிவிக்கு எய்ட்ஸ் விளம்பரம், வெளியுறவு துறை விலம்பரம் நிறுத்தப்படும் என சொல்லி சமாளிக்கலாம், அதானால் திருமாவை கூட்டனிக்குள் கொண்டு வரலாம் அது ஈழ தமிழர் பிரச்சனையை அடக்கிடும்.

ஒரு விஷயம்! நெட்ல 200 பேர் சொல்வது தான் கருத்துன்னு யாரும் நெனச்சிக்க கூடாது. ஏன்னா தமிழின தலைவர் = தமிழின துரோகி ன்னு பலர் பதிவு எல்லாம் போட்டு கிட்டு இருக்கங்க! ஆனா அவங்க எல்லாருக்கு தெரியாது 1 கோடி பேர் கலைஞரை தலைவரா ஏத்துகிட்டவங்கன்னு. உலக தமிழ் மக்களிள் 20 லட்சம் பெரிசா ஆதாரபூர்வமா 1 கோடி பெருசா என கேட்டால் கால்குலேட்டரை தேடும் ஆசாமிகள் அவர்கள்!

ஆக இந்த 200 பேர் தான் தமிழன் இல்லை! அங்கே கருப்பு உடம்பிலே சிகப்பு கோவணம் கட்டியவன் கூட திமுக தான் என பொட்டி தட்டும் நண்பர்களுக்கு தெரியாது!

ஆக இதை எல்லாம் வைத்து மாத்திரம் நீங்க ஒரு முடிவுக்கு வந்தா நான் உங்க அறியாமையை நினைத்து வருத்தப்படத்தான் செய்ய முடியும்!!

அபி அப்பா said...

மாலன் ! ஒரு கருத்து! எல்லோருக்கும் அவரவர்கள் பிரச்சனை ஆயிரத்துக்கும் மேல இருக்கு! ஒரு ஓஷோ கதை!

ஒரு ஊர்ல ஒரு இளவரசனும் இளவரசியும் ஒரு பார்க்கில் காதல் செய்து கொண்டு இருந்தாங்கலாம். அப்போ ராம சேனா இல்லியாம் அவங்க தாத்தா தான் இருந்தாராம். அவர் ஒரு முனிவர் அந்த பார்கிலே டூயட் பாடிகிட்டு இருந்த ரெண்டு பேரையும் அதே போஸ்ல சிலையா ஆக்கிட்டாராம். அது ஆச்சு 300 வருஷம். இப்ப 2 சிட்டு குருவி வந்து அந்த பார்கிலே காதல் செஞ்சுச்சாம், 2க்கும் என்ன வேலைன்னா ஆளுக்கு ஒருவர் சிலை மேலே உக்காந்து கக்கா போயிட்டு காதலிச்சுகிட்டே இருக்குமாம்.

அப்ப அந்த வழியா வந்த திருந்திய முனிவர் பேர் கல்யாண்சிங்ன்னு வச்சு கோங்க அவர் வந்து "ஆஹா ரெண்டு சிலைக்கும் நாம் உயிர் கொடுத்தா என்ன"ன்னி நெனச்சு உயிர் கொடுத்தாராம். உயிர் வந்த 2 பேரும் ஜாலியா ஒரு புதர்க்குள்ளே போனாங்க!

அப்ப நம்ம கல்யாண்சிங் ஆசையா அவங்க 2 பேரும் என்ன செய்யறாங்கன்னு எட்டி பார்த்தாராம்.

அங்க நடந்தது என்ன தெரியுமா? அந்த 2 சிட்டு குருவியையும் பிடிச்சு அந்த 2 இளவரசனும் இளவரசியும் தனக்கு கீழே வைத்து கொண்டு ஆய் போனாங்கலாம்! ஆக அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க பிரச்சனை இருக்கு! இதிலே யாருக்கு மத்தவங்க பிரச்சனை பார்க்க நேரம் இருக்கு!

தேர்தல்ன்னு வந்துட்டா விசயகாந்து, திருமா, பாமக, பாசக எல்லாம் எல்லாத்தையும் மறந்துட்டு திமுகவா, அதிமுகவான்னு கிளம்பிடும்!பாருங்க! ஆனா தன்னை சேர்த்துக்க வழி இல்லாம நிக்க போறது மதிமுக தான்!

உடன்பிறப்பு said...

//முன்பு தினமணிக்கு இப்படித்தான் மண்டல் கமிசன் பிரச்சனையில் இரு நிலைப்பாடு உண்டு//

தினமணிக்கும் இந்தியன் எக்ஸ்பிரசுக்கும் வெவ்வேறு பொறுப்பாசிரியர்கள் உண்டு அதானால் கூட இருக்கலாம் ஆனால் பா.ம.க.வில் எல்லாமே ராமதாஸ் மட்டும் தானே

ILA (a) இளா said...

//காங்கிரஸோடு சமரசம் செய்து கொள்வது என்பது கொள்கைக்கு முரணானது.//
Narain- உங்க காமெடிக்கு அளவே இல்லையா? கொள்கை இருக்கிற கட்சி இதுவரைக்கு தமிழ்நாட்டுல உருவாகலைங்க

பிருந்தன் said...

காங்கிரசுடன் யார் கூட்டு வைத்தாலும் அவர்கள் தோற்கடிக்கபடுவார்கள். இந்த தேர்தலில் காங்கிரசு வீட்டுக்கு அனுப்பப்படும், ஏழுகோடி தமிழனின் உணர்வை மதிக்காத காங்கிரசிற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க உணவுள்ள தமிழக தமிழன் தனது பலம் மிக்க ஆயுதத்தை வைத்துக்கொண்டு தேர்தலுக்காக காத்திருக்கிறான். காங்கிரஸ் காரனே காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டான், இப்படிபட்ட வரலாற்று தோல்வியை உணர்வுள்ள தமிழர் காங்கிரசுக்கு கொடுப்பர்.

Anonymous said...

*சந்திரமௌளீஸ்வரன் -
ஆயுதம் வழி ஒரு அரசமைப்பு ( தனித் தமிழீழம்) இந்தியாவின் எல்லையில் உருவாகி அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல*

இலங்கை தமிழர் நலனுக்கும் உகந்தது அல்ல.புலிகளின் தாகம் தான் தமிழீழம். அதை இலங்கை தமிழர் தலையில் கட்டிவிட தமிழகத்தில் சிலர் முயற்ச்சிக்கிறார்கள்.

Osai Chella said...

உங்களைப்போன்றவர்களெல்லாம் சிண்டுமுடிய முடியும் என்றால் இன்று பாமக எம்பிக்கள் பாராளுமன்றத்தையே கலக்கிவிட்டார்களே! இந்த முறை கொரில்லா தாக்குதல்கள் தமிழக அரசியலிலும் இடம்பெறும். உங்கள் யூகங்களை கொஞ்சம் பொறுத்திருக்கச்சொல்லுங்களேன் நண்பரே!

Anonymous said...

//கேள்விக்கு காங்கிரசிற்கு சென்னையில் 68% பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். //

சஞ்சய் காந்தி,
சென்னையில் இருப்பது மூன்று தொகுதிகள். போனவாட்டி மூன்றிலுமே திமுக தான் போட்டியிட்டது. ஆகையால் சென்னையில் 68% என்ன 100% காங்கிரசுக்கு ஓட்டு போடப்போறதா சொன்னாலும் அப்படி சொல்ல மட்டும் தான் முடியும், போட முடியாது. Good luck.

Anonymous said...

சந்திரமவுலீச்வரன்.,1990க்குப்பிறகு ஏன் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சமும் ஏற்படவில்லை? உங்கள் வாதப்படி பார்த்தாலும் ராஜீவுக்கு பின் ஏன் எந்த மரணங்களும் நிகழவில்லை? சும்மா பூச்சாண்டி காட்டவேண்டாம். இன விடுதலையை எதிர்க்கும் எல்லா நடைப்பிணம்களும் இன்னும் தின்று பேன்று காற்றை மாசு படுத்திக்கொண்டுதானே உள்ளார்கள்?

ஈழம் மட்டுமல்ல ஈராக் உட்பட மக்களை நிம்மதியாக வாழ விடாத எந்த முண்டங்களும் தன் மறு பிறவியில் இது போன்ற அழிப்பு நாடுகள் ஏதோ ஒன்றில் அப்பாவி மக்களாக பிறந்து இது போன்ற துன்பங்களையும் இன்னல்களையும் அனுபவித்தே ஆகவேண்டும். இப்போதே சப்ரமணி சாமியிடம் அதன் ஆரம்பத்தை பார்க்கிறோம்.

Osai Chella said...

நண்பர் மாலன் அவர்களே.. இன்று கூட சோனியாவின் கோபத்தைக் கண்டு பயந்து நாடாளுமன்றத்தில் பாமக எம்.பிக்கள் ஈழப்பிரச்சினைக்காக குரல்கொடுத்து ஒரு ஒத்திவைப்பை சாத்தியப்படுத்தியுள்ளார்கள் என்று சி.என்.ன்.இ.பி.என். ல் சற்று முன் படித்தேன். ஒருவேளை உங்கள் கட்டுரைப்படி பார்த்தால் இதெல்லாம் சோனியாவின் கோபத்தை குறைக்க உதவுமென்றால்.. என்னமோ போங்க.. உங்க கணிப்புகளுக்கும் (அல்லது உண்மையை சொன்னால் ) விருப்பங்களுக்கும்... நேரமே சரியில்லை போல இருக்கு!

Osai Chella said...

இணைப்பை பின்னூட்டத்தல் போட மறந்து விட்டேன். செய்தியின் சுட்டி இங்கே உள்ளது.

மாலன் said...

அன்பிற்குரிய செல்லா,

சோனியா கோபம் என்படு என் தலைப்பல்ல; என் கணிப்பல்ல; என் விருப்பமல்ல. அது தினமணி தந்த தலைப்பு.

செய்தின் மூலம் தினமணி என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிதானமாக (வேறு எந்த அர்த்தத்திலும் அல்ல, கோபம் கண்ணை மறைக்காமல் என்ற அர்த்தத்தில்தான் சொல்கிறேன்) படித்தால் அது உங்களுக்குத் தெரியும்.

என் கேள்வியெல்லாம் இத்தனைக்கும் பிறகு பா.ம.க. காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளுமா? அல்லது தமிழர்களின் மானம் காக்க, 'மதவாத', 'பண்டார, பரதேசி' கட்சிகளோடு சேர்ந்து கொள்ளுமா? (பெரியார் மன்னிப்பாராக)அல்லது அம்மாவிடம் அடைக்கலமா? அல்லது திருமாவுடன் கை கோர்க்குமா? என்பதுதான்
மாலன்

Anonymous said...

//என் கேள்வியெல்லாம் இத்தனைக்கும் பிறகு பா.ம.க. காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளுமா? அல்லது தமிழர்களின் மானம் காக்க, 'மதவாத', 'பண்டார, பரதேசி' கட்சிகளோடு சேர்ந்து கொள்ளுமா? (பெரியார் மன்னிப்பாராக)அல்லது அம்மாவிடம் அடைக்கலமா? அல்லது திருமாவுடன் கை கோர்க்குமா? என்பதுதான்//

மாலன்
வழக்கமான புத்திசாலித்தனம். தோசையை திருப்பிப் போட்டு உங்களை கூட கேட்கலாம். தமிழரை அழிக்க இலங்கை அரசுக்கு உதவி செய்யும் அரசுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி புலிகளை ஆதரிக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கூட்டணியில் இருக்கும் பாமகவுடன் கூட்டு வைக்குமா அல்லது புலிகளை எதிர்க்கும் அதிமுகவுடன் கூடு வைக்குமா? அதேபோல பெரியாரைப் போற்றும் பாமகவுடன் இந்துத்துவ பாஜக கூட்டு வைக்குமா? பெரியாரை போற்றாதவர்களுடன் மட்டும் பாஜக தான் கூட்டு வைக்குமா? அதாவது தனியாக நிற்குமா? தேர்தல் கூட்டணிகள் கொள்கை அளவில் ஏற்படுவதில்லை. எண்ணிக்கையின் அடிப்படையில் அமைவது என்பது நீங்கள் அறியாததால்ல. சும்மா மன அரிப்பை சொறிந்துகொண்டு சுகம் காணுகின்றீர்கள். அவ்வளவு தான்.

மாலன் said...

முகமறியாத நண்பரே,

>>தோசையை திருப்பிப் போட்டு உங்களை கூட கேட்கலாம். தமிழரை அழிக்க இலங்கை அரசுக்கு உதவி செய்யும் அரசுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி புலிகளை ஆதரிக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கூட்டணியில் இருக்கும் பாமகவுடன் கூட்டு வைக்குமா அல்லது புலிகளை எதிர்க்கும் அதிமுகவுடன் கூடு வைக்குமா?<<
என்று கேட்டிருக்கிறீர்கள்.

1.காங்கிரசும் பாஜகவும், அவர்கள் பெறப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களளின் எண்ணிக்கையில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள். தங்கள் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள அவர்கள்,சமரசம் செய்து கொண்டாவது கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆறு இடங்களை (புதுச்சேரியையும் சேர்த்து)க் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு கட்சி கொள்கையை சமரசம் செய்து கொள்வது எதைக் காட்டுகிறது?
2.அனைத்துக் கட்சி எம்.பி.களின் தூதுக்குழு, சட்டமன்றத் தீர்மானங்கள், திமுக்- பாமகவின் ஆர்ப்பாட்டங்கள் பாராளுமன்ற அமளிகள், இத்தனைக்குப் பிறகும் காங்கிரஸ் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. நாடாளும்னறத் தேர்தலை சந்திக்கப் போகிறோம், தமிழ்நாட்டின் 40 இடங்கள் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடியவை என்பதும் அதற்குத் தெரிந்திருக்கும். என்ற போதும் அது தனது நிலையை சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதை கவனியுங்கள்
3.பாம்க தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது இருக்கட்டும். குறைந்தபட்சம் தனது அமைச்சர்களைக் கூட அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளவில்லை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.

இப்படி இருக்கையில் இவர்கள் தமிழினத்திற்குப் போராடுகிறார்கள் என்பதை எப்படி ஏற்பது?

இவர்கள் தங்கள் பிள்ளைகள் அமைசார்களாக இருப்பதற்கு கொள்கையை விட்டுக் கொடுத்தாவது தேர்தல் உடன்பாடு காண்பார்கள்; அதே நேரம் இங்கிரு்க்கும் இளைஞர்களின் உணர்ச்சிகளை, அவர்கள் உயிர்த் தியாகம் செய்யுமளவிற்கு கொதிநிலைக்குக் கொண்டு செல்வார்கள்.

நல்லாயிருக்குயா உங்க நியாயம்.

நண்பரே தோசையைத்தான் திருப்பிப் போட முடியும். இட்லியை அல்ல. நீங்கள் இட்லியைத் திருப்பிப் போட முயற்சிக்கிறீர்க்ள்.

அடுத்த முறையாவது பெயரோடு எழுதுங்கள்.
அன்புடன்
மாலன்

Anonymous said...

மாலன் சார்,
//அடுத்த முறையாவது பெயரோடு எழுதுங்கள்.//

ஒரு பக்கம் அனாமதேயமாக எழுத அனுமதிக்கும் பெருந்தன்மை. இன்னொரு பக்கம் பெயரோடு எழுதச் சொல்லி சவால் விடும் தாதாத்தனம். பெயரோடு தான் எழுதவேண்டும் என்று விரும்பினால் அனமதேயாமாக எழுதும் வசதியை சாத்த வேண்டியது தானே? எதற்கு இரட்டை வேஷம்?

நீங்கள் திருப்பிய தோசைகளுக்கு பதில்:
//1.காங்கிரசும் பாஜகவும், அவர்கள் பெறப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களளின் எண்ணிக்கையில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள்.//

இல்லை என்பது சமீபகால வரலாறு. தற்போதைய நடைமுறை. பாஜக அரசு ஒரு ஓட்டில் விழுந்தது என்பதை நீங்கள் மறந்திருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. ஆட்சியைப் பிடிக்கும் வசதி இருந்தால் ஆறு எம்பிக்கள் உள்ள ஒரு கட்சிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு ஸ்டேட் மந்திரி பதவியும் கொடுக்க காங்கிரஸ்கார்கள் என்ன இளிச்சவாயர்களா? அமைச்சர் பதவிக்கு ஆளாய்ப் பறப்பவர்களுக்கு காங்கிரசில் பஞ்சமா என்ன? ஆறு இடங்களை தக்கவைத்துக்கொள்வது முக்கியமென்றால் காங்கிரசுக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதும் முக்கியம். இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் அமளி செய்து ஸ்தம்பிக்க வைக்கும் ஆறு எம்பிக்களை கொண்ட ஒரு கட்சியை சகித்துக்கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ்காரர்கள் ஞானிகளல்ல.

//இத்தனைக்குப் பிறகும் காங்கிரஸ் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. நாடாளும்னறத் தேர்தலை சந்திக்கப் போகிறோம், தமிழ்நாட்டின் 40 இடங்கள் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடியவை என்பதும் அதற்குத் தெரிந்திருக்கும். என்ற போதும் அது தனது நிலையை சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதை கவனியுங்கள்//

ஆமாம் தற்போது ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதை. எந்த மாநிலக் கட்சியின் முதுகிலேறியாவது பத்து இடங்களைப் பிடித்துவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை. தனியாக நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று தெரியும். ஒருமுறை ஆப்பு வாங்கினால் தானாக வழிக்கு வருவார்கள். ஆப்பு வாங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

//குறைந்தபட்சம் தனது அமைச்சர்களைக் கூட அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளவில்லை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.//

ஏன் காங்கிரஸ் பாமகவை விலக்கவேண்டியது தானே. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. எது மிஞ்சப்போகிறது என்று இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடப்போகிறது.

மாலன் said...

அன்புள்ள நண்பருக்கு,

1.காங்கிரசோ பாஜகவோ தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்பது இன்றைய நடமுறை. அவற்றின் ஆட்சி நிலைக்க சிறு கட்சிகளின் ஆதரவும் முக்கியம் எனச் சொல்லி அதற்கு ஒரு ஓட்டில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததையும் உதாரணமாகச் சொல்கிறீர்கள்.

அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதை இந்த வலைப்பூவில் உள்ள வேறு பதிவுகளிலும், நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள வரிகளுக்கு அடுத்துள்ள " தங்கள் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள அவர்கள்,சமரசம் செய்து கொண்டாவது கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது" என்ற என் வரிகளிலும் காணலாம்.

ஆனால் என் கேள்வி, நீங்கள் குறிப்பிடும் கட்சிகள் சம்ரசத்தின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால் பா.ம.க சமரசத்தின் மூலம் எதைத் தக்க வைத்துக் கொள்கிறது என்ப்தே.

நிச்சியம் அதிகாரத்தை அல்ல. ஏனெனில் அதனிடம் மத்திய அரசை, அதன் நிலையை மாற்றிக் கொள்ளச் செய்யுமளவு அதிகாரம்/ செல்வாக்கு/வலிமை இல்லை என்பது இலங்கைப் பிரசினையில் அம்பலமாகிவிட்டது. இன்றைக்கு அது அங்கு ஒரு டம்மி. அலங்கார பொம்மை. அவ்வளவுதான்.

சமரசத்தின் மூலம் அது தக்க வைத்துக் கொள்வது அரசில் தனது பதவிகளை.நிறுவனரது மகனது அமைச்சர் பதவியை.

அதாவது அதற்குக் கொள்கைகளை விட பதவி முக்கியம். இலங்கையில் படுகொலைக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான தமிழர்களை விட, அதன் பிரசாரத்தால் உந்தப்பட்டு தீக்குளிக்கும் அதன் பத்திரிகை ஊழியரை விட், தனது நிறுவனரின் மகன் முக்கியம்.

இதைப் புரிய வைத்ததற்கு, மறைமுகமாக ஒப்புக் கொண்டதற்கு, நன்றி

ஏன் ராஜினாமா செய்ய வேண்டும், அவர்கள் வெளியே பிடித்துத் தள்ள்ட்டுமே என்கிறீர்கள். ஆகா! என்ன அருமையான வாதம்! இதை ப்கிரங்கமாக பா.ம.க. மேடைகளில் சொல்லுமா?

சுயமரியாதை, சுயமரியாதை என்று ஒன்றிருக்கிறது, கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அது பாமகவிற்கு இருக்குமானால் அது அங்கு ஒட்டிக் கொண்டிருக்காது.

அது விலகினால் என்ன ஆகும்? அரசு விழுந்து விடுமா? சரி விழட்டுமே அதைப் பற்றி அவர்கள் ஏன் அக்கறைப்ப்ட வேண்டும்?

பாமக அமைச்சர்க்ளை வெளியே அனுப்பக் காங்கிரசுக்கு தைரியம் இல்லை எனக் கூட நீங்கள் வாதிடக் கூடும். அதற்கு பதில் காண முதல் கேள்விக்கு நீங்கள் திரும்ப வேண்டும். அதாவது காங்கிரசிற்கு சமரசம் செய்து கொண்டாவது தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற் அவசியம் உண்டு. ஆனால் பாமகவிற்கு என்ன அவசியம்?

நீங்கள் முகமற்றவராகவே இருங்கள் எனக்கு ஆட்சேபணை இல்லை. அதனால் உங்கள் கருத்துக்கள் வெளியிடப்படாமலோ, தணிக்கை செய்யவோபடாது. நீங்கள் என் கேள்விகளுக்கு உள் நோக்கம் கற்பித்ததால் உங்களை அறிந்து கொள்ள ஆர்வமிருந்தது.மதகுக்குப் பின் மறைந்து கொண்டுதான் க்ல்வீசுவேன் என்றால் தாரளமாகச் செய்யுங்கள்.
அன்புடன்
மாலன்

Anonymous said...

ayaa who is this annonymous sonthappeer illaatha pandy