Saturday, March 07, 2009

ஜெயலலிதா உண்ணாவிரதம் எதற்காக?


மாலன்

இலங்கை உள்நாட்டுப் போர் அநேகமாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில் போர் நிறுத்தம் கோரி, வரும் திங்களன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் கூட 'இது காலம் கடந்த முயற்சி' என்று சொன்னாலும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.

காலம் கடந்த முயற்சி என்பதை ஜெயலலிதாவும் அறிந்திருப்பார்.அவர் இந்த உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர் நலனை மனதில் கொண்டல்ல, அதற்குப் பின்னால் வேறேதோ அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பதை ஊகிப்பது கடினமல்ல. இந்த அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி பகிரங்கமாகக் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகியிருப்பதைக் கவனிக்கும் போது, இந்த உண்ணாவிரதம் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றிற்காக இருக்கலாம் எனத் தோன்றுகிறது:

  • இலங்கைப் பிரசினை வாக்காளர்களிடையே, வெளியே புலப்படாத ஓர் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்து, தன் கட்சியின் வாக்ககுகளைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி

  • இலங்கைப் பிரசினையை ஓர் தேர்தல் பிரசினையாக மாறி விடாமல் அதை neutralize செய்யும் ஒரு தந்திரம். எல்லாக் கட்சிகளும் ஏறத்தாழ ஒரே நிலை எடுத்துவிட்டால், அதில் விவாதத்திற்கும், பிரசாரத்திற்கும் அதிக இடமில்லாது போய் விடும்.

  • காங்கிரசுடன் கூட்டணி இனி சாத்தியமில்லை என்ற நிலையில், பா.ம.கவைத் தன் அணிக்குக் கொண்டுவர வீசப்படும் தூண்டில்

  • அதிமுக+ மதிமுக+பா.ம.க+இந்தியக் கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் உள்ள கூட்டணி, 'இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டணி' என்ற தோற்றத்தை உருவாக்கி, இலங்கைத் தமிழர் பிரசினை காரணமாக திமுக-காங்கிரஸ் அரசுகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை கூட்டணிக்கு வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் உத்தி

இவற்றில் ஏதோ ஒன்றுதான் உண்ணாவிரத்தின் பின்னுள்ள நோக்கமாக இருக்க வேண்டும். நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..

உண்ணாவிரதத்தோடு உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவது சந்தேகத்தை வலுவாக்குகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டிய போது, அதை அங்கு எப்படி அனுப்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா. இப்போது காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.

எப்படி இருந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல், அடிக்கடி தன் நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது நடுநிலை வாக்காளர்களுக்கு அவர் மீதுள்ள நம்பகத்தன்மையை பலவீனமடையச் செய்யுமே அன்றி அவருக்கு அரசியல் ரீதியாக உதவாது.

7 comments:

ரவி said...

:))

ஆர். முத்துக்குமார் said...

//காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.//

காசோலை வழியாகவோ அல்லது உண்டியல் மூலமாகவோ என்று எப்படி நிதி திரட்டினாலும் அது கட்சிக்கோ அல்லது கட்சியின் தேர்தல் வேலைகளுக்கோ பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை. இதில் கறுப்பை வெளுப்பாக்கும் முயற்சி எங்கே வந்தது என்று புரியவில்லை

Anonymous said...

உங்கள் ஊகங்களை ஏற்பதானால்,
அது தமிழக வாக்காளரின் அறிவை ஜெயலலிதா எப்படி எடைபோட்டிருக்கிறார் என்பதை யோசிக்கலாம்.
இன்று அது எங்களுக்கு முக்கியமில்லை.

நீங்கள் எழுதியது போன்று 'போராட்டம் இறுதிக்கட்டத்தை அடையவில்லை.'
உங்களைப் போன்றவர்கள் யாராவது அப்படி நினைத்தால் ஒரு ஈழத் தமிழனுடன் மிக அந்தரங்கமாக மனம்விட்டுப் பேசிப்பாருங்கள்.

ஈழ‌த்திற்கு வெளியேதான் போராட்ட‌த்தின் உயிர் இருக்கின்ற‌து.

அதிக‌ம் வேண்டாம்.

ஒரு ஈழ‌த் தமிழ‌ன்

கோவி.கண்ணன் said...

காரணங்களை நானும் எழுதி இருக்கிறேன். அனேகமாக உண்மையான காரணங்கள் தான் எழுதி இருக்கிறேன்

Boston Bala said...

போர் நிறுத்தம் வேண்டி ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது [189 votes total]

இனவுணர்வை தேர்தலில் அறுவடை செய்யும் முயற்சி (72) -- 38%

வரவேற்கப்பட வேண்டியது (26) -- 14%

அவரது அரசியல் நாடகங்களில் ஒன்று (91) -- 48%

enRenRum-anbudan.BALA said...

மாலன் சார்,
//நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல.
//
இதை வாசித்தவுடன் மற்ற திராவிடக் கட்சிகளின் ஏமாற்று வேலையை வைத்துப் பார்க்கும்போது இதென்ன பெரிய விஷயம் என்று சொல்ல வந்து உங்களின் அடுத்த வரியை

" தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல.."

பார்த்தவுடன் சமாதானமாகி விட்டேன் :-)

Anonymous said...

உண்ணாவிரதம் அல்ல... இது "பசி ஏப்பம்""..

அம்மாவின் எந்த நாடகமும் செல்லாது...