எதிர்பார்த்தபடியே, பாமக அணிமாறி விட்டது. ஆனால் இந்த முடிவை அறிவிக்க அது மேற்கொண்ட அணுகு முறை நயமாக இருந்தது. 1952ல் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகாண அண்ணா கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியது போல, பாமக தனது பொதுக் குழுவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.கை தூக்குவது அல்லது கரவொலி எழுப்புவது என்ற முறையின் மூலம் அல்லாது வாக்குச் சீட்டி வழியே தங்கள் கருத்தைத் தெரிவிக்க செய்து முடிவு செய்திருக்கிறது.
இந்தத் 'தேர்தலை' நடத்த, கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு மூத்த பத்திரிகையாளரை (தினமணியின் முன்னாள் தலமை செய்தி ஆசிரியர் ராயப்பா) தேர்தல் அதிகாரியாகவும், சில முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களை தேர்தல் பார்வையாளராகவும் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. 'இறுதி முடிவு எடுக்கிற அதிகாரத்தை தலைவருக்கே விட்டுவிடுகிற' உள்கட்சி ஜனநாயகமும், 'கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக்
கட்டுப்படுவோம்' என்கிற தொண்டர் விசுவாசமும் நிலவுகிற இன்றைய அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வரவேற்கத்தக்கவை.
டாக்டர் ராமதாசின் முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்கு (dissent) அவர் இடமளித்திருக்கிறார் என்பதும், திமுக கூட்டணியை அவர் கட்சியில் விரும்பும் சிலர் இருக்கிறார்கள் என்பதை பலிரங்கமாக உலகறியச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கவை. அவர் கூட்டணி விஷயத்தில் நிதானமிழக்காமல் இருந்ததைப் போல கருணாநிதி இந்த மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.
இரு தினங்களுக்கு முன் 'கள்ளத் தோணி ஏறிப் போய் சண்டை போடுவதுதானே? யார் தடுக்கிறார்கள்' என்ற எரிச்சல் வெளிப்படும் அவரது அறிக்கை அதைத்தான் காட்டுகிறது.
பாமக ஒரு அணியில் இருப்பது அல்லது அதிலிருந்து மாறுவது என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கேள்வியை விளங்கிக் கொள்ள சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1998ம் ஆண்டு அது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக அணி 28 இடங்களைப் பெற்றது. திமுக அணி 10 இடங்கலைப் பெற்றது. 1999ம் ஆண்டு பாமக திமுக அணிக்கு மாறியது. அந்தத் தேர்தலில் திமுக அணி 25 இடங்களைப் பெற்றது.2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அது அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது அது திமுக அணிக்கு மாறியது தொடர்ந்தது அப்போது அந்தக் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி
கண்டது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அணியிலேயே அது தொடர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது.
அதாவது பாமக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி அதிக இடங்களைப் பெறுகிறது. 'ராசியான டாக்டர்' என்று சில அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கிறேன். கைராசியா, காக்கை உட்கார விழுந்த பனம்பழமா என்பதைக் கண்டு பிடிக்க சில கணக்குகளைப் பார்க்க வேண்டும்
1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்
பெறாமல் பாமக 32 வேட்பாளர்களைக் களமிறக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. மறுபடிய்ம் 1991ல் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை 31 வேட்பாளர்கள். ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மறுபடியும் 5.14 சதவீத வாக்குகள் வாங்கியது. 1991 தேர்தல் ராஜீவ் படுகொலை அலை வீசிய தேர்தல். அப்போதும் அதன் வாக்கு சதவீதம் குறையவில்லை
இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி 5லிருந்து 6 சதவீதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
1996 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அது கூட்டணி பரிசோதனைகளை மேற்கொண்டது. திமுக அதிமுக இவற்றைத் தவிர்த்து வாழ்ப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய திவாரி காங்கிரஸ் என்ற காங்கிரசிலிருந்து
உடைந்த ஒரு சிறு பிரிவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அது தற்கொலை முயற்சியாக முடிந்தது.
வன்னியர்களது வாக்குகள் எல்லாம் அந்த அணிக்கே வந்து விடும் என்ற வாதம் பொய்த்து அது அந்த முறை 2 சதவீத வாக்குகள்தான் பெற்றது. கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. (எனவே ராசித் தத்துவங்கள் முற்றிலும் சரியல்ல.)
தமிழகத்தில் கழகங்களின் துணையில்லாமல் களம் இறங்குவது ஆபத்தில் முடியும் என்று பாடம் கற்றுக் கொண்டதால் அன்றிலிருந்து ஏதேனும் ஒரு கழகத்துடன் அது கூட்டணி காண்கிறது. அப்போதுதான் அதனால்
அங்கீகாரத்திற்குத் தேவைப்படும் 6 சதவீத அளவை எட்ட முடியும். அதை 1998, 1999, 2004ல் பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்(6.5%, 8.21% 6.7%) இந்த வாக்கு விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் அது அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் (மாயாவதியின் BSP அதற்காகத்தான் இந்தியா முழுக்கப் போட்டியிடுகிறது) அப்படிப் போட்டியிட்டாலும் அது அந்த இடங்களில் வெற்றி பெற முடியாது. வாக்கு
விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அது 1999 தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டது ஆனால் 5 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. (ஆனால் அது அதன் வாக்கு விகிதத்தை அதிகரித்துக் கொண்டது) அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் அதிக இடங்களைக் கோருகிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் அது வென்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் அளிக்க மறுக்கின்றன. கூட்டணி மூலம் அதிகாரத்தை ருசி பார்த்து விட்டதால் பாமக கூட்டணியை விட்டு விடவும் தயங்குகிறது. அல்லது நிறையத்
தொகுதிகளில் போடியிட அதனிடம் போதிய பொருளாதார பலம் இல்லாமல் இருக்கலாம்.
பாமக இருக்கும் கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால் பாமக அதே அளவு இடங்களைத்தான் (4 முதல் 6 வரை) பெற முடியும். அதாவது தமிழகத்தின் வட, வட்மேற்குப் பகுதிகளில் உள்ள பாமகவின் செல்வாக்கு பெரிய கட்சிகளுக்கு அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் பாமக ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதால் அதனால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.
சரி. பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் பெரிய கட்சிகளுக்கு என்ன லாபம்?
1. முதலில் சொன்னபடி அது 'வெற்றிக் கூட்டணி' என்ற எண்ணம் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மனங்களில் விதைக்கப்படுகிறது. அது அவர்களுக்கு ஓர் மன எழுட்சியைத் தருகிறது. 'நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வெற்றியை 'உணர' (கலாமின் வார்த்தைகளில் சொன்னால் கனவு காண) வேண்டும் என்பது ஒரு நிர்வாக இயல் தத்துவன்.
2.முன்னர் பார்த்தபடி பாமகவின் வாக்கு வங்கி 5-6 சதவீதம். இது மற்ற கட்ட்சியுடன் சேரும் போது வெற்றி வாய்ப்பு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம்:
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மோதின. தனித் தொகுதி என்றாலும் வன்னியர்கள் நிறைந்த தொகுதி. 1998ல் அதிமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகரத்தினம் என்பவர்தான் 1998லும் திமுக வேட்பாளாராகப் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார். அதிமுக வேட்பாளர் வென்றார். 1999ல் பாமக திமுக அணிக்குப் போனது. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. (சதவீதக் கணக்கெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. தகவல் வேண்டுவோர் தனிப்பட மின்னஞ்சல் அனுப்பலாம்)
ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கூட்டணியை மற்றூம் பொறுத்ததல்ல. வேட்பாளர், அலை, தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பிரசினைகள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. ஆனால் கூட்டணிக் கணக்குகளும் அவசியம்.
பாமகவின் கூட்டணி அறிவிப்பால் யார் யார் எந்த அணி என்பதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் எந்தத் திசையில் போகும் என ஓரளவ்ற்கு ஊகிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 1998ல் ஏற்பட்டதைப் போன்று அணிகள் பிரிந்திருக்கின்றன. அதனால் பெரும்பாலும் முடிவுகள் அதைப் போல அமையலாம். அந்த முறை அதிமுக அணி அதிக இடங்களைப் பெற்றது.
தொகுதிகள் முடிவானதும் அதைப் பற்றி விரிவாக என்னுடைய கணிப்புக்களை எழுதுகிறேன்
Download Eating the Alphabet
5 years ago
13 comments:
good analysis..!!
நல்லாத்தான் அலசியிருக்கீங்க.
பாமக/ராமதாஸ் பற்றிய மாலனின் முந்தைய பதிவையும், அதில் உள்ள பின்னூட்டங்களையும் சேர்த்து வாசிக்கவும். வாசித்துவிட்டு இக்கட்டுரைகளில் ஏதாவது நுண்ணரசியல், உள்மன ஆசைகள் வெளிப்படுவதாகத் தெரிந்தால் அதை விவாவதிப்பது தேர்தலை விவாதிப்பதைவிட சுவாரசியமாக இருக்கும்.
நல்ல அலசல்.
விட்டு போனது, விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட தேர்தல் முதல் பெற்ற வாக்கு சதவிகிதம் (1999 முதல்?). இதைத்தான் மிகவும் நம்பியிருக்கிறார் கலைஞர்.
மற்றும் விஜயகாந்த் பிரிக்கும் வாக்கு வித்தியாசம்.
எதிர்பார்த்த வெற்றி (சுமார் 30 இடங்கள்) கிடைக்காது போனால் பா ம க தனது பேரம் பேசும் வலுவை இழந்துவிடும்.
இந்த ஒப்பீடுகள் நன்றாக இருந்தது. குறிப்பாய் பா.ம.க இடம் பெறும் அணி வெற்றிபெறும் அணியாக மக்களிடமும், கூட்டனிக் கட்சிகளிடமும், வேட்பாளர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.. அல்லது இருப்பதாக கருத்து விற்பனை செய்யப்படுகிறது.
நல்ல அலசல், பாமகவின் முக்கியத்துவம் குறித்து. தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
\\தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகாண அண்ணா கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு \\
அட இது புது செய்தியா இருக்கே!
ஆனா எனக்கு தெரிஞ்சவரை 1951ம் ஆண்டு டிசம்பர் 13, 14 15 , 16 தேதியில் சென்னை எஸ்.ஐ.ஏ. ஏ திடலில் நடந்தது.
கண்ணீர் துளிகளே அப்படினு அண்ணா பேசினது அப்ப எங்க எல்லாருக்கும் 1966ல் தாலாட்டு.
1951ல் மாநாட்டு கடைசி நாளில் எதிர் வரும் பொது தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி அண்ணா நிபந்தனை அளித்தார். அதிலே 400 வேட்பாளர் கையெழுத்து போட்டும் அதிலே அண்ணா 45 வேட்பாளரை தேர்வு செஞ்சார், அதிலே 40 பேர் ஜெயிச்சாங்க!
வழக்கம் போல கம்யூனிஸ்ட் கட்சிகள் பழிவாங்கின திமுகவுக்கு.
அது போல ராசாசி கொல்லை பக்கமா வந்து முதல்வரா ஆக ராமசாமி படையாச்சி உட்பட 12 பேர் அமைச்சர்! நல்ல வேளை பக்தவத்த் சலம் தோத்து போனார் அதனால மினிஸ்டர் ஆகலை.
இதிலே அண்ணா என்ன கட்சியிலே தேர்தல் வச்சாரு???
மாலன் சாரே எனக்கு புரியலை!!!
நல்ல அலசல்! நன்றி!
அன்புள்ள அபி அப்பா.
'1952 தேர்தலில்' எனச் சொன்னது தவ்றுதான். மன்னிக்கவும்.1957 தேர்தலில் என்று இருந்திருக்க் வேண்டும்.
"1956ல் தி.மு.கழகம் திருச்சியில் தன்னுடைய மாநில மாநாட்டை நடத்தியது....அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் நாட்டு மக்களைப் பார்த்து ஒரு புதிய கேள்வ்யை எழுப்பினார்.ஏழாண்டுகாலக் குழந்தையாக இருக்கிற இந்தக் கழகம் பொதுத் தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்ப் பொதுமக்களே தீர்ப்பளிக்க வேண்டும் எனறு கூறிப் போட்டியிடலாம் அல்லது போட்டியிட வேண்டாம் என்ற தீர்ப்பை வாக்குச் சீட்டுக்களின் மூலம் மாநாட்டிற்கு வந்த பொதுமக்கள் அளிக்க வேண்டும் என்பது அண்ணாவின் கருத்தாகும். அந்தக் கருத்தின் அடிப்படையில் மாநாட்டுப் பந்தலைச் சுற்றிப் பல்வேறு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன.இரண்டு பெட்டிகள் நுழைவாயிலருகே வைக்க்ப்பட்டன. தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கு ஒரு பெட்டியும், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பதற்கு ஒரு பெட்டியும் இடம் பெற்றன.மாநாட்டிற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கள் எண்ணங்களை வாக்குச் சீட்டின் மூலம்தெரிவித்தனர். குறிப்பிட்ட நாளில் வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்டன. சில ஆயிரம் பேர்தான் கழகம் பொதுத் தேர்தலில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி வாக்களித்திருந்தனர். இலட்சத்திற்கு மேற்பட்டோர் கழகம் பொதுத் தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்"
- மு.கருணாநிதி, நெஞ்சுக்கு நீதி, முதல் பாகம், பக்கம் 276 முதல் பதிப்பு டிசம்பர் 1975
>>1951ல் மாநாட்டு கடைசி நாளில் எதிர் வரும் பொது தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி அண்ணா நிபந்தனை அளித்தார்.அதிலே 400 வேட்பாளர் கையெழுத்து போட்டும் அதிலே அண்ணா 45 வேட்பாளரை தேர்வு செஞ்சார், அதிலே 40 பேர் ஜெயிச்சாங்க!<<
மாநாடு நடந்தது உண்மை. ஆனால் 1952 பொதுத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு 1951ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. "திராவிடர்களின் கருத்தையறியாமலும், திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும், ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை திமுகழகம் கண்டிப்பதின் அறிகுறியாக 1951ல் நடைபெறும் முதல் பொதுத் தேர்தலில் திமுகழகம் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்துவதில்லை" இது பொதுக்குழு தீர்மானம்.
அந்தத் தேர்தலில் தங்களுடைய ஆதரவு கோரி விண்ணப்பித்து திமுகவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பவர்களை ஆதரிப்பது என்று திமுக முடிவு செய்தது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் இதை ஏற்க மறுத்து விட்டனர். என்ற போதும் திமுக அவர்களை ஆதரித்தது.
மாலன்
அன்புள்ள தஞ்சாவூர்க்காரன்.
தொகுதிப் பங்கீடு முடியட்டும். அணிவாரியான வாய்ப்புக்களை அலசலாம்.
மாலன்
பொதுக்குழுவில் பாமக நடத்திய தேர்தல் , மக்களிடமிருத்து பமாக மீது விழுந்த அருவருப்பான பார்வையை நீக்குவதற்காகத்தான், அந்த பார்வை மக்களிடமிருத்து நீங்கியதா இல்லையா என்பது மக்களவை தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்
good analysis. like this only i expecting from you malan sir. your hands are not tied like before. give us diffrent angle analysis.
2. why karuna wants tiruma? i heard the news he somuch convinced congeress for thirma. what is your view regarding this matter?
பாமக அதிமுகவோடு கூட்டணி கண்டிருப்பதால் கட்டுரையாளர் மெத்த மகிழ்ச்சி அடைந்திருப்பதை இக்கட்டுரையின் ஒவ்வொரு வரியும் எடுத்துக் காட்டுகிறது :-)
98ல் அதிமுக கூட்டணியில் மதிமுக, பாமக, பாஜக கட்சிகள் இருந்தன. அப்போது மதிமுகவும், பாமகவும் இருந்த பலத்தில் இப்போதும் அவை இருக்கின்றனவா?
98ல் பஸ் கட்டண உயர்வு காரணமாக திமுக ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருந்தது. அதுபோன்ற ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை மக்களிடம் இப்போதும் இருக்கிறதா?
இவற்றையெல்லாம் அலசாமல் மிக சுலபமாக 98 தேர்தல் முடிவுகள் திரும்ப வருமென்று சொல்லுவது மாலனின் உள்மன ஆசையே அன்றி, கள யதார்த்தம் அல்ல.
***
98ல் பஸ் கட்டண உயர்வு காரணமாக திமுக ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருந்தது. அதுபோன்ற ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை மக்களிடம் இப்போதும் இருக்கிறதா?
***
தேர்தல் முடிந்தவுடன தான் சொல்லமுடியும். திமுக தோற்றால் மின்வெட்டுக்கு எதிராக அலை இருந்ததுன்னு சொல்லிக்க வேண்டியது தான்.
ஆனா தே.மு.தி.க வினால் பாமக உள்ள பாதிப்பை பற்றி குறிப்பிடாமல் விட்டது ஏனோ ?
Post a Comment