Saturday, March 21, 2009

பூனைகளான சிறுத்தைகள்

முத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.

"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.

அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).

அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.

இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?

ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?

தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.

இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.

""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.

இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!

'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது

8 comments:

க. தமிழ்ச்செல்வன் said...

விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயர் வைத்துக்கொண்டு திமுக-விடம் அடிமையாக இருக்கிறார் திருமாவளவன். இரண்டு மாதத்திற்கு முன்பு காங்கிரசை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துவிட்டு இன்று காங்கிரசுக்கே வால் பிடித்து வருகிறார். வெட்கக்கேடு.

தமிழர்களுக்கு துரோகம் செய்தாலும் குறைந்தபட்சம் உங்களை நம்பி வந்த கட்சித் தொண்டனுக்காவது துரோகம் செய்யாமல் இருக்கலாம் இல்லையா?

உங்களுக்காக போராடிய தொண்டனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைத்தவன் கூடவே கூட்டணி போட வெட்கமா இல்லையா? தொண்டன் சிறை செல்ல மட்டும்தான். எம்.பி சீட் கிடைத்தால் எல்லாம் போச்சி?

மானங்கெட்ட பொழப்பு.

Anonymous said...

ha ha ha ha ha ha ha ha ha ha .....

oore sirikkuthu karuna va paathu ....

thiruma .... you too brutus ...

தவநெறிச்செல்வன் said...

//""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.//

அற்புதமான வரிகள்

குப்பன்_யாஹூ said...

திருமா தேர்தலின் போது இப்படி செய்வார் என்பது எதிர்பார்த்ததே.

திருமா மட்டும் அல்ல, ராமதாஸ், வீரமணி, சுப வீரபாண்டியன் போன்றோரும் பதவி சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

போன தேர்தல் முன்பு வரை திருமா, ராமதாஸ், சேதுராமன் போன்றோர் தமிழ் பாதுகாப்பு பேரவை என்று சொல்லி கட்சி நடத்தினார்கள்,.

தேர்தல் வந்ததும் அதற்கு மூடு விழா நடத்தி விட்டார்களா, தமிழ் அன்னை தானாகவே பிழைத்து கொள்வாள் என்று.

அதே போல இப்போது இலங்கை தமிழர் பிரச்னைக்கும் இரண்டு மாதம் சம்மர் விடுமுறை.

புதிய ஆட்சி அமைந்ததும் இலங்கை தமிழர் போராட்டம் சூடு பிடிக்கும், பிரபாகரனுக்கும் இது தெரிந்த விஷயம் தான். வருன் காந்தியின் பேரன் தேர்தலில் நிற்கும் வரை இலங்கை தமிழர் பிரச்னை தீராது.

அதிமுக அணி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறாது என்று தெரிந்த உடன், திருமா அணி மாறி விட்டார்.

ஆனால் தமிழக பத்திரிக்கைகள் எழுதும் அளவுக்கு திருமா கட்சி ஒன்றும் தேர்தல் முடிவை நிர்ணயிக்க கூடிய கட்சி இல்லை. அதனால் இவரின் மாற்றம் அதிமுக கூட்டணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை. இன்னமும் கன்னியாகுமரி, திருசெந்தூர், நெல்லை, விருதுநகர் மத்திய சென்னை, சேலம், மதுரை தொகுதிகளில் திருமா கட்சிக்கு ஆறாயிரம் வாக்குகளுக்கு மேல் விழாது.

குப்பன்_யாஹூ said...

என் ஆசை,காங்கிரஸ் கூட்டணிக்கான பிரசாரத்தை திருமா தென் சென்னையில் இருந்து துவங்கலாம். அங்குதான் ராஜபக்சேயின் நண்பர் மணி சங்கர அய்யர் போட்டி இட போகிறார்.

பிரசாரத்தை வட சென்னை தொகுதியில் முடிக்கலாம். அங்குதான் முத்துக்குமாரன் வீடு உள்ளது. அல்லது மத்திய சென்னை தொகுதியில் நுங்கம்பாக்கத்தில் முடிக்கலாம், முத்துக்குமார் ஆன்மா அல்லது ஆவி வந்து காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு சேர்க்கும்.

குப்பன்_யாஹூ

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாலே தலைவர் தன் வெற்றியைப் பற்றி மட்டும் தான் கவலைபடுவார். தொண்டர்கள் அந்த நேரத்தில் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களைத் தான் பார்ப்பர்.

இங்கு உணர்வு , உப்பு மூட்டை எல்லாம் மேடையில் முழங்கவும் செய்திகளில் அடிபடவும் த்ஞ்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளவும் தான்.

திமுக சின்னத்தில் கிடைத்த சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட தூக்கி எறிந்துவிட்டு சென்ற கொள்கை மாவீரர் , பின் கருணாநிதி காலடியில் வந்து விழுந்த போதே தெரியவில்லையா இவர் எவ்வளவு பெரிய பச்சோந்தி என்று?

இவரை பற்றி எல்லாம் எதற்கு இவ்வளவு பெரிய பதிவு மாலன்? நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

தமிழ் said...

திருமா மட்டுமில்லை, பல்ட்டி அடிப்பதில் அம்மாவும் ஐயாவும் கூட சளைத்தவர்களா? என்ன!

அவ்வளவு ஏன், இப்ப நம்மளையே எடுத்துக்குங்க, வருண்காந்தெய பத்தி மறந்துட்டு திருமாவத்தான பேசறோம்!

saamakodanki said...

சிறுத்தை அண்ணன் திருமாவளவன் சொன்னதை கொஞ்சம் கேட்போமா...காங்கிரஸை தமிழகத்திலிருந்து முற்றாக அழித்து விட வேண்டும் என்ற நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காங்கிரசை விமரிசிக்காமல், தனிமைப்படுத்தாமல் இந்திய அரசின் ஈழத்துரோகப் போக்கை கட்டுப்படுத்த முடியாது.காங்கிரசின் நெருக்கடியால் திமுக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் கவலையில்லை. எங்கள் தனித்தன்மையை இழக்காமல் தேர்தலை சந்திப்போம். பல லட்சம் ஈழத்தமிழர்கள் அழிவதற்கு காரணம், காங்கிரசும், அதன் ஆட்சியும் தான் என்பதை தமிழ்இனம் அறிந்துள்ளது. எனவே தமிழினம் முற்றாக அழிவதற்குள் காங்கிரஸ் அல்லாத ஒரு அணியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும்.அண்ணா..சிறுத்தைங்கண்ணா..இது திருமாவளவன் வீராவேசமாக ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டடி.
இப்போது இதே காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற சிதம்பரம் தொகுதியில் நிற்கிறார். இது போன்ற அவசர புத்தி அம்புலிமாமாக்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டியது மக்களின் கடமை. ஊசலாடும் திருமாவளவனுக்கு வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி எந்த இலக்கும் கிடையாது என்பதை அவரது கடந்த காலங்களை கூர்ந்து பார்த்தால் தெரியும். இவரா.....சிதம்பரம் மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்? நிச்சயம் கூடாது. மார்க்ஸ், சேகுவரா போன்ற புரட்சியாளர்களையும் உதாரணம் சொல்லிக் கொண்டு, சாதியை சொல்லி காலத்தை ஓட்டும் திருமாவளவன் போன்றவர்கள் தமிழக அரசியலிலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். காரணம், சாதிமதங்களை தாண்டி நல்ல அரசியலமைப்பை உருவாக்க சித்தாந்தங்கள் இருக்கிறது என்று தெரிந்தும் சாதி ரீதியான அமைப்புகளை வைத்துக் கொண்டு கலைஞர் போன்றவர்களிடம் பேரம் பேசும் இது போன்ற சிறுத்தை என்ற பெயரில் உலாவரும் சிறுநரிகளை அப்புறப்படுத்த வேண்டியது சிதம்பரம் மக்களின் கடமை. இவருக்கு ஓட்டு போட்டால் சிதம்பரம் நடராஜர் கூட மன்னிக்க மாட்டார்.