Tuesday, March 03, 2009

ரஜினிகாந்த் கடிதம்: யாருக்கு என் ஆதரவு

நன்றி: மக்களவைத் தேர்தல் 2004

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது பாராளுமன்றத் தேர்தல் ஆகட்டும் அல்லது சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்குஇஅதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது.

இந்த முறையும் அந்த கேள்வி எழுந்துள்ளது.
நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. 
 ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழக மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்சினை தண்ணீர் பிரச்சினை. ஏழைகளிலிருந்து பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்சினை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்துவரும் எந்த ஜீவநதியும் இல்லை.

நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயம். மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களை சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக தெளிவாக தெரிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்க போகிறதோ எனக்கு தெரியாது.
ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது (பாஜக) வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசுதான். இது உறுதி.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய நாட்டின் முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்.

திரு. அத்வானி அவர்களே அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆக, இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் என் ஓட்டு.

தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டு போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். நான் இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவதாலே என் ரசிகர்களும், இந்த கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள்இ உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன்.

ஆனால் சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவஇமாணவிகளே, படித்தவர்களே, நீங்கள் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்போட போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை தண்ணீ வேணும்னு ஓட்டு போட போறீங்களா? நீங்களே முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள். செயல்படுங்கள்.

வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு!

நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்!

- ஜெய் ஹிந்த்.

2 comments:

Unknown said...

நல்ல வேளை தேர்தல் 2004 ன்னு போட்டீங்க, கொஞ்ச நேரம் தலையே சுத்திட்டிது, சாமி கொஞ்சம் இன்னும் தெளிவா இது போன தேர்தல் வாய்ஸ்னு போடுங்க இல்லைனா
நிறைய பேருக்கு பெரிய குயப்பாமா பூடும்.

Boston Bala said...

:)

சாரி ஃபார் தி கன்ஃப்யூசன்