Monday, March 09, 2009

முந்துகிறதா மூன்றாவது அணி?

மாலன்

கடந்த வாரம் நிகழ்ந்த இரு முறிவுகள், (காங்-சமாஜ்வாதி, பாஜக-பிஜூ ஜனதாதளம்) தேர்தல் களத்தை மூன்றாவது அணிக்கு சாதகமாகத் திருப்பியிருக்கின்றன. ஆனால் அந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது இன்னமும் கேள்விக் குறிதான். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் களத்தில் குழப்பம் அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல ஆழமாகியும் உள்ளது.

நாம் தெளிவு பெற யார் யார் எங்கிருக்கிறார்கள், அவர்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் இவற்றை சட்டென்று ஒரு 'கிளான்ஸ்' பார்த்து விடலாம்.

23 கட்சிகளின் துணையோடு ஆண்ட ஐக்கிய முற்போக்கு அணியில் (காங்கிரஸ் கூட்டணியில்) 2004 தேர்தலின் போது அதனுடன் இருந்த சில கட்சிகள் இன்று அதனோடு இல்லை.உதாரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, மறுமலர்ச்சி திமுக, மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்று அதன் அணியில் இருப்பவர்கள்:

திமுக:


எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: பல காரணங்களால் (அவை என்ன என்று எல்லோருக்குமே தெரியும்) இப்போது இருப்பதை விடக் குறைவான இடங்களைப் பெறக்கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 16
கடிவாளம் யார் கையில்?: கருணாநிதி (குடும்பத்தினரிடம்)

ராஷ்ட்ரிய ஜனதா தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? பீகார்
என்ன வாய்ப்பு ? : நிதீஷ் குமார்- பாஜக கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் பாஸ்வானுடன் உரசல்கள் இருக்கின்றன. அவருடனும் காங்கிரசுடனும் உறவு தொடர்ந்தால் இப்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது?: 24
கடிவாளம் யார் கையில்? : லாலு பிரசாத் யாதவ்

தேசியவாத காங்கிரஸ்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? :மகாராஷ்டிரம்
என்ன வாய்ப்பு ? : ஷரத் பவார்தான் அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்து வருவது காங்கிரசிற்கு எரிச்சலைக் கொடுக்கிறது.சிவசேனையுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டியது. காங்- தே.கா உறவு அத்தனை சுமுகமாக இல்லை. எனினும் இருவருக்கும் வேறு வழியில்லை. நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாத சம்பவம் நடந்த போது மாநிலத்தை ஆளும் காங்-தே.கா அரசு அதைக் கையாண்ட விதம் நகர்ப்புறங்களில் அந்த ஆட்சி மீது கடுப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் பாஜக அதை நினைவுபடுத்த முயலும்.கிராமப்புறங்களில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் கை கொடுக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 11
கடிவாளம் யார் கையில் ?: ஷரத் பவார்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: ஜார்க்கண்ட்
என்ன வாய்ப்பு?: உம்ஹூம், நோ சான்ஸ்.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: (இன்ன்மும்) சிபு சோரன் கையில்தான்

திருணாமூல் காங்கிரஸ்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : மேற்கு வங்கம்:
என்ன வாய்ப்பு ?: நந்திகிராம் கை கொடுத்திருப்பதால் தோழர்களுக்கு தண்ணி காட்டும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 1
கடிவாளம் யார் கையில் ?: மம்தா பானர்ஜி

தேசிய மாநாடு

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு & காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியைப் பிடித்தது. அநேகமாக அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 2
கடிவாளம் யார் கையில் ?: ஓமர் அப்துல்லா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், பாஜகவும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அது சாதகமாக பாதகமா என்பது அந்த ஆட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்/அவப் பெயரைப் பொறுத்தது. பிஜு ஜனதாதளத்துடன் உறவு முறிந்ததை அடுத்து, ஒரிசா, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய எல்லா தென் மாநிலங்களிலும் தனித்துத்தான் போட்டியிட வேண்டியிருக்கும். இன்று பாஜக கூட்டணியில் இருப்பவர்கள்:


சிவசேனா

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: மகாராஷ்டிராம்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆளும் காங்-தே கா கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வுகளை நம்பியிருக்கிறது. மத + மாநில உணர்வுகளை உசுப்பிவிட்டு ஆதாயம் பார்க்க முயற்சிக்கும். சரத் பவார் பிரதமருக்குப் போட்டியிட்டால், அத்வானியை கைவிட்டுவிட்டு அவரை ஆதரிக்கக் கூடும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 12
கடிவாளம் யார் கையில்?: பால் தாக்ரே ( ஆஸ்பத்திரியிலிருந்தாலும்)


சிரோண்மணி அகாலி தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பஞ்சாப்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிறது. அதன் பாதகங்களை(யும்) எதிர் கொள்ள வேண்டி வரும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 8
கடிவாளம் யார் கையில் ?: பாதல் குடும்பத்தினர்

ஜனதாதளம் (ஐக்கிய)

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பீகார்.
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தை ஆள்கிறது. ஆட்சிக்கு நல்ல பெயர். அதனால் கணிசமான இடங்களைப் பெறலாம்.
என்ன வாய்ப்பு ? : 8
கடிவாளம் யார் கையில் ? : நிதீஷ் குமார்

ராஷ்டிரிய லோக்தள்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உ.பி.யின் மேற்குப் பகுதியில்
என்ன வாய்ப்பு ? : மேற்கு உ.பி.யில் எப்போதுமே சில இடங்களைக் கைப்பற்றக்கூடிய வலிமை உண்டு
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 3

அசாம் கண பரிஷத்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: அசாம்
என்ன வாய்ப்பு ?: முன்பு காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த மாணவர் கட்சியாக இப்போது இல்லை. பல கூறுகளாக உடைந்து விட்டது.ஆனாலும் அசாமில் சில பகுதிகளில் இடங்களைப் பிடிக்கக் கூடும். உறுதியாகச் சொல்ல இயலாது. தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டது.
2004 எத்தனை இடங்கள் பெற்றது? : 2

மூன்றாவது அணி என்பது சிலநாட்களுக்கு முன்வரை கடவுள் போல இருந்தது. அதாவது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை. இப்போது அது ஆவி மாதிரி தோன்றுகிறது. காலில்லாத ஆவி. அது இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைப் பார்த்ததாக சத்தியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டு உள்ளூற பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பிரதமர்கள் வேண்டுமானாலும் கொடுக்கக் கூடிய ஒரே அணி அதுதான்.

இடது சாரிகள் (மார்க்சிஸ்ட், இந்திய கம். பார்வேர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி)

எந்தப் பேட்டைகளில் பிஸ்தா ? : மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம்,
என்ன வாய்ப்பு ? : மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சியில் இருக்கின்றன. நந்திகிராம், சிங்கூர் பிரசினைகளால் மேற்கு வங்கத்திலும், உட்கட்சிப் பூசலால் கேரளத்திலும் முன்பு பெற்ற அளவு இடங்களைப் பெற இயலாது.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 60

அதிமுக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால், திமுக- காங்-கூட்டணிக்கு கடும் சவாலாக விளங்கும். திமுகவின் குடும்ப அரசியலும், 'அம்மா'விற்கு உள்ள வசீகரமும் கை குடுக்கும். அலை எதுவும் வீசாத பட்சத்தில் 20 -25 இடங்களை எதிர்பார்க்கலாம். தேர்தலுக்குப் பின் 3வது அணியிலேயே இருக்குமா என்பது கேள்விக்குறி.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 0
கடிவாளம் யார் கையில் ?: (சந்தேகமில்லாமல்) ஜெ. கையில்

ஜனதாதளம் (மதச்சார்பற்ற)

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: கர்நாடகம்
என்ன வாய்ப்பு ? :சட்டமன்றத் தேர்தலில் அடி வாங்கியது. ஆட்சியிலிருக்கும் பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இராது. காங்கிரசோடு ஏதேனும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 3
கடிவாளம் யார் கையில் ?: தேவகவுடா

தெலுங்கு தேசம்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: மாநிலச் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடப்பதால், மாநில காங்கிரஸ் ஆட்சியின் மீதான கோபதாபங்களும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாதகமான அம்சம். தெ.தே+இடதுசாரிகள்+ TRS என்பது ஆந்திரத்தில் வலுவான கூட்டணி. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிரஞ்சீவி அள்ளிக் கொண்டு போகாத வரையில் பிரசினை இல்லை.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: சந்திரபாபு நாயுடு

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஆந்திரத்தில் உள்ள தெலுங்கான பகுதி
என்ன வாய்ப்பு ? : தெலுங்கு தேசத்திற்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 5
கடிவாளம் யார் கையில் ? : சந்திரசேகர் ராவ் (இவ்ரை எதிர்த்து அசாரூதீன் களமிறக்கப்படக்கூடும்)

மதிமுக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: தமிழ்நாட்டின் சில தொகுதிகள்
என்ன வாய்ப்பு ?: இலங்கைப் பிரசினையில் காங்-திமுகவிற்கு எதிரான வாக்குகள் கை கொடுக்கும்.அதிமுக அணியில் இருப்பது ஒரு பலம். கட்சியை உடையாமல் காப்பாற்றும் சவாலை தேர்தலுக்கு முன்னும் பின்னும் சமாளிக்க வேண்டியிருக்கும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 4
கடிவாளம் யார் கையில்: (இன்றுவரை) வைகோ கையில்

3வது அணிக்கு வரக்கூடியவர்கள்:

பிஜூ ஜனதா தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஒரிசா
என்ன வாய்ப்பு ? : பாஜகவுடன் உறவு முறிந்ததால் இடதுசாரிகளின் உதவியை நாடுகிறது. 'நவீன் பாபு'வின் செல்வாக்கைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 11
கடிவாளம் யார் கையில் ? நவீன் பட்நாயக்

பகுஜன் சமாஜ் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உத்தரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ? : காங்-சமாஜ்வாதி பூசல் இவருக்கு சாதகம். சட்டமன்றத் தேர்தலில் ஜமாய்த்திருந்தாலும் ஆட்சியில் இருப்பதால் அதற்கு எதிரான வாக்குகளையும் சந்திக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலைப் போலவே இப்போதும் இடங்களைப் பிடித்தால், பிரதமராக முயற்சிப்பார். ஏற்கனவே இடதுசாரிகள் இவரை வரவேற்றிருக்கின்றார்கள்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது? 19
கடிவாளம் யார் கையில் ?: மாயாவதி

சமாஜ்வாதி கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: உத்தரப்பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: தேர்தலுக்குப் பின் மாயாவதி இடதுசாரிகளை நோக்கிப் போகவில்லை என்றால் இந்தக் கட்சி அந்தப் பக்கம் சாயும்.ஆனால் 2004ல் பெற்ற அளவு இடங்களைப் பெறுவது சிரமம்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 36
கடிவாளம் யார் கையில் ? : முலாயம் சிங் யாதவ்

மக்கள் ஜனநாயகக் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு &காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அதிகமில்லை. தேசிய மாநாடு + காங். என்பது ஜ&கா வில் வலுவான கூட்டணி.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 1
கடிவாளம் யார் கையில் ? : முப்தி முகமது குடும்பத்திடம்

பாட்டாளி மக்கள் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாட்டின் சில தொகுதிகளில்
என்ன வாய்ப்பு? : காங்கிரசோடு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டால் திமுகவே இதனை பலவீனப்படுத்த மறைமுகமாக முயற்சிக்கும் என்ற சந்தேகத்தில் அதிமுகவோடு சேரலாம்.தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ எந்த அணிக்கும் போகலாம்..
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 6
கடிவாளம் யார் கையில்?: மருத்துவர் ராமதாஸ்

கறுப்புக் குதிரை: பிரஜா ராஜ்யக் கட்சி

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள்
என்ன வாய்ப்பு? : சிரஞ்சீவின் சினிமா கவர்ச்சி. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் மீதுள்ள அதிருப்தி வாக்குகள், இளைய தலைமுறையின் வாக்குகள் ஆகியவற்றைக் கவர்ந்து கொள்ளக் கூடும். சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகம் கவனம் செலுத்தும். ஆனால் அது நாடாளுமன்ற இடங்களுக்கும் கை கொடுக்கும். ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்: சிரஞ்சீவி

தேமுதிக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: யாருக்கும் தெரியாது
என்ன வாய்ப்பு?: ஹி ஹி
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்?: விஜயகாந்த் குடும்பத்தினர்

இந்தப் பட்டியல் தரும் சித்திரத்தைப் பார்த்தால் மூன்றாவது அணி முந்துவது போல் தோன்றலாம். அது அநேகமாக 160லிருந்து 180 இடங்களைப் பிடிக்கும் என நான் நினைக்கிறேன். அப்படியானால் ஆட்சிஅமைக்க அதற்கு 100லிருந்து 120 இடங்கள் வரை தேவைப்படும்.அப்போதும் 1996ல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியைப் போல ஒன்று சாத்தியமே.

ஆனால் கட்சிகளிடம் உள்ள உள் முரண்பாடுகளை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயலும் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு மாயாவதியை ஜெ.பிரதமராக ஏற்பாரா? தேவகவுடாவை மாயாவதி ஏற்பாரா? அந்த மாதிரி சூழலில் பவாரை முன்நிறுத்தி காங்கிரஸ் (சந்திரசேகர் பிரதமர் ஆனது போல) ஆதரவளிக்கக் கூடும். சிவசேனாவும் பவார் மராட்டியர் என்பதால் ஆதரிக்கலாம். ஆனால் இடதுசாரிகள் ஆதரிப்பார்களா? இடதுசாரிகள் ஆதரித்தால் மம்தா ஆதரிக்கமாட்டார்; மாயாவதி ஆதரித்தால் முலாயம் ஆதரிக்க மாட்டார். ஜெயலலிதா ஆதரித்தால் கருணாநிதி ஆதரிக்க மாட்டார். இந்தக் குழப்பங்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும்.

தேர்தலைவிட தேர்தலுக்குப் பின்னர்தான் குழப்பங்களும் சுவாரஸ்யங்களும் காத்திருக்கின்றன.

3 comments:

Machi said...

\\அதிமுக:
என்ன வாய்ப்பு ?: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால், திமுக- காங்-கூட்டணிக்கு கடும் சவாலாக விளங்கும். திமுகவின் குடும்ப அரசியலும், 'அம்மா'விற்கு உள்ள வசீகரமும் கை குடுக்கும். அலை எதுவும் வீசாத பட்சத்தில் 20 -25 இடங்களை எதிர்பார்க்கலாம். \\
ஈழ தமிழர் விதயத்தில் காங்கிரசு நிலைக்கு சற்றும் குறையாத நிலையை இவர் கொண்டிருந்தாலும் ஈழ தமிழர் விதயத்தில் ஆட்சியிலுள்ள காங்கிரசு \ திமுக மீது உள்ள கோபம் இவருக்கு சாதகமாகும். அதை பயன்படுத்திக்கொள்ளவே இப்போது உண்ணா விரதம் மேற்கொள்கிறார்.

Anonymous said...

நல்ல அலசல். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

Boston Bala said...

கலக்கல் அலசல்!