வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை விட்டுத்தர திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியிலிருந்து வெளி யேற்றப்பட்ட பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தொகுதி பங்கீடு செய்வது குறித்து கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக கூட்டணி யிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக கூட்டணியில் அண்மையில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் மக்களிடம் செல்வாக்கு குறைந் துள்ளது என்றும், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான போராட்டங் களின் போது வன்முறையை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கருதினார்கள். இதனால் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்த விலகி அதிமுகவுடன் சேர வேண்டும் என்று விரும்பினார்கள்.
இத்தகைய எண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரிடம் மட்டுமின்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களிடமும் ஏற்பட்டது. மற்றொரு பிரிவினர் வளர்ந்து வரும் கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால்தான் காங்கிரசுடன் தாங்கள் தொகுதி உடன்பாடு வைத்து கொள்ள முடியும் என்று தேமுதிக தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது.
இது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. திமுக நிலைமையை சரிசெய்ய தீவிர முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.தமிழ்நாடு பொறுப்பு வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தை, தயாநிதி மாறன் இருமுறை சந்தித்து பேசியுள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதால் அந்த தொகுதிகளில் கணிசமான வற்றை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக விட்டுத்தர திமுக தரப்பில் முன்வந்ததாக கூறப்படுகிறது.இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தாமாக வெளியேறின. ஆனால் பாமகவை திமுக தான் வெளியேற்றியது. இதனால் திமுக அணிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர திமுக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி சமரச முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். மதச்சார்பற்ற சக்திகளின் ஓட்டு பிரியக்கூடாது என்பதை அவரிடம் வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கு நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் சகோதரர் தமிழரசுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். தமிழரசின் மகள் திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்றதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்ட போதிலும், அரசியல் பேசப்பட்டதாகவும் கூறப்படு கிறது. இதன் தொடர்ச்சியாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே. மணியுடன் நேற்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
எனவே திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சங்கமம்/பிப்ரவரி 28
முன்னர் வந்த செய்தி:
முன்னர் வந்த செய்தி:
(பிப்ரவரி 26/ தட்ஸ் தமிழ்)
சென்னை: தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்பதாகத் தெரிகிறது.
நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.
புதுச்சேரியின் ஒரு தொகுதியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக-16 (இதில் ஒன்றில் திமுக சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடது), காங்கிரஸ்-10, பாமக-6 (இதில் ஒன்று புதுச்சேரி தொகுதி), மதிமுக-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட்-2 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்த அனைத்து இடங்களிலும் இந்தக் கூட்டணி வென்று மாபெரும் சாதனை படைத்தது. அந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக (33 இடங்களில் நின்றது), பாஜகவுக்கு (7 இடங்களில் போட்டியிட்டது) ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.ஆகிய இடங்களில் போட்டி யிட்டன.
ஆனால், இப்போது திமுக கூட்டணி கலகலத்துப் போயுள்ளது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டன. இப்போது இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன.
இவர்களுக்கு முன்பே மதிமுக விலகி அதிமுக கூட்டணிக்குப் போய்விட்டது.
பாமகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க விரும்பினாலும் திமுகவுடன் மோதல் போக்கில் உள்ளது. திமுகவுடன் உறவை சீர் செய்தால் மட்டுமே கூட்டணியில் நீடிக்க முடியும் என அக் கட்சியின் தலைவர் ராமதாசிடம் கடந்த வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனால் பாமக திமுக கூட்டணியில் சேருமா அல்லது வழக்கம்போல் பல்டி அடித்து அதிமுக பக்கம் போகுமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் விலகி விட்டதால் திமுக கூட்டணியில் திமுக கூட்டணியி்ல் 8 இடங்கள் கூடுதலாக உள்ளன. பாமகவும் விலகிவிட்டால் திமுக, காங்கிரசுரக்கு மேலும் 6 இடங்கள் கூடுதலாக இருக்கும்.
இப்படியாக மொத்தம் 8 அல்லது 14 இடங்கள் வரை கிடைப்பதால் திமுக அதிக இடங்களில் போட்டியிட முயல்கிறது. அதே போல காங்கிரசும் கூடுதல் இடங்களைக் கேட்க முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே எஞ்சியிருந்தால் இருவருமே சரி சமமாக இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறுவதாகத் தெரிகிறது.
அதாவது புதுச்சேரியையும் சேர்த்து திமுக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் நிற்கலாம் என்கிறது.
பாமக கூட்டணிக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு 6 இடங்களைத் தந்துவிட்டு நாம் தலா 17 இடங்களில் போட்டியிடலாம் என்பது காங்கிரஸ் சொல்லும் கணக்கு.
ஆனால், கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால் 10 இடங்கள் வரை கேட்டு கடைசியில் 8 இடங்களுக்கு ஒப்புக் கொள்வார் ராமதாஸ் என்று திமுக கருதுகிறது.
அப்படி நடந்தால், மிச்சமிருக்கும் 32 தொகுதிகளில் தான் 20 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு 12 இடங்களையும் (கடந்த தேர்தலை விட 2 இடம் ஜாஸ்தி) தர திமுக நினைப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கூட்டணிக்குள் யார் வந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இடங்களை சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் நச்சரிப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைகள் தான் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்- திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு வலைவீசுவதை காங்கிரஸ் இன்னும் நிறுத்தவில்லை. அவர் கூட்டணிக்குள் வந்தால் பாமகவை வெட்டிவிடுவது என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது.
அப்படி ஒரு நிலை வந்தால் தேமுதிகவுக்கும் சேர்த்து திமுகவிடம் காங்கிரஸ் இடங்களைக் கேட்கும். அதாவது தேமுதிக-காங்கிரஸ் இடையே தான் கூட்டணியாம். திமுகவுடன் தேமுதிகவுக்கு நேரடியாக கூட்டணி இல்லையாம்.
இதைச் சொல்லித்தான் விஜய்காந்துக்கு காங்கிரஸ் வலை வீசிக் கொண்டுள்ளது. அவர் ஒப்புக் கொண்டுவிட்டால் திமுகவிடம் 25 இடங்கள் வரை காங்கிரஸ் கேட்கும் என்று தெரிகிறது. அதி்ல் 5 முதல் 8 இடங்களை விஜய்காந்துக்கு ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது.
1 comment:
மு க விற்கு ரொம்பவே பயம் வந்து விட்டது. மதுரையில் மேகம் கருத்த உடன் நெல்லையில் குடை பிடிப்பது போல, தி மு க இப்போதே ஆட்சியை காப்பற்றுங்கள் மக்களே என பிச்சை விளம்பரத்தை நாளேடுகளில் ஆரம்பித்து விட்டது.
இலவச டி வி, ஒரு ரூபாய் அரிசி எதுவும் காங்கிரஸ் அதிமுக கூட்டணி முன்னால் எடுபடாது என்று தெரிந்து விட்டது.
வைகோவும் தி மு க கூட்டணிக்கு வந்து விட்டால், திமுக தோல்வியை இப்போதே எழுதி விடலாம்.
இப்போதே மத்திய அமைச்சர்கள் பட்ட்யியால் தயார் போல:
பீ எச் பாண்டியன்= சட்ட அமைச்சர்
மைத்ரேயன் = சுகாதார அமைச்சர்
தினகரன் = சாலை போக்குவரத்து, கப்பல் அமைச்சர்.
குப்பன்_யாஹூ
Post a Comment