Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Tuesday, May 19, 2009

தேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பாராத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.

அம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.

மறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே!

அதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.

பதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்

திடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.

இரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது

*
இது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.

இந்த முறை வேறு ஒரு நண்பர் தேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:

“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன

தேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.

இந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்க ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆகியவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.

எதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்வார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.

இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.

இந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.

Friday, May 01, 2009

தினம் ஒரு தேர்தல் -13

ஓரம் போ! தேர்தல் பஸ் வருது!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் கட்டணத்தை திடீர் எனக் குறைத்துள்ளது. அதாவது டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., எம் சர்வீஸ் என எந்த பஸ்ஸில் பயணம் செய்தாலும் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2 மட்டுமே. இதற்கு முன்னர் முறையே ரூ. 5, ரூ.3, ரூ.2.50 என வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடத்துநர்கள்

இந்தக் கட்டணக் குறைப்பால் ஒவ்வொரு முறையும் டிரிப் கலெக்ஷன் ரு. 1000, ரூ. 800, ரூ. 700 என குறைகிறது. இந்த தொகை பணிமனைக்கு பணிமனை வேறுபடும். தோராயமாக நாள் ஒன்றுக்கு மொத்த வசூலில் சென்னை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்படும். எங்களுக்கும் இதனால் தினப்படி குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கியை கவர, எங்கள் பையில் கை வைப்பதா? .

மருத்துவர் ராமதாஸ்:

கடந்த மூன்று ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறி சாதாரணக் கட்டணத்தைவிட மூன்று நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்தி மக்களை வருத்தி வந்தது திமுக அரசு.

இன்றைக்கு திடீரென்று அனைத்து வகை பஸ்களுக்கும் ஒரே வகையான கட்டணம் என்று கட்டணக் குறைப்பைச் சத்தமின்றி செயல்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.

தேர்தலுக்காகக் கட்டணத்தைக் குறைத்திருப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு உயர்த்திவிடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியைத் தடுத்து நிறுத்தாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் திமுக அரசைக் தண்டிக்க முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்::

சட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் பஸ் கட்டண உயர்வை நியாயப்படுத்தி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து வந்தது திமுக அரசு. ஆனால் தேர்தல் தோல்வி பயம் காரணமாக புதன்கிழமை இரவிலிருந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது. திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் காலத்தில் பஸ் கட்டணத்தைக் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கட்டணத்தை உயர்த்திவிட்டதையும் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நரேஷ் குப்தா:

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக ஃபேக்ஸ், தொலைபேசிகளில் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண குறைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை.

நீங்கள்?:
இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

Thursday, March 26, 2009

பாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

எதிர்பார்த்தபடியே, பாமக அணிமாறி விட்டது. ஆனால் இந்த முடிவை அறிவிக்க அது மேற்கொண்ட அணுகு முறை நயமாக இருந்தது. 1952ல் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகாண அண்ணா கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியது போல, பாமக தனது பொதுக் குழுவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.கை தூக்குவது அல்லது கரவொலி எழுப்புவது என்ற முறையின் மூலம் அல்லாது வாக்குச் சீட்டி வழியே தங்கள் கருத்தைத் தெரிவிக்க செய்து முடிவு செய்திருக்கிறது.

இந்தத் 'தேர்தலை' நடத்த, கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு மூத்த பத்திரிகையாளரை (தினமணியின் முன்னாள் தலமை செய்தி ஆசிரியர் ராயப்பா) தேர்தல் அதிகாரியாகவும், சில முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களை தேர்தல் பார்வையாளராகவும் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. 'இறுதி முடிவு எடுக்கிற அதிகாரத்தை தலைவருக்கே விட்டுவிடுகிற' உள்கட்சி ஜனநாயகமும், 'கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக்
கட்டுப்படுவோம்' என்கிற தொண்டர் விசுவாசமும் நிலவுகிற இன்றைய அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வரவேற்கத்தக்கவை.

டாக்டர் ராமதாசின் முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்கு (dissent) அவர் இடமளித்திருக்கிறார் என்பதும், திமுக கூட்டணியை அவர் கட்சியில் விரும்பும் சிலர் இருக்கிறார்கள் என்பதை பலிரங்கமாக உலகறியச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கவை. அவர் கூட்டணி விஷயத்தில் நிதானமிழக்காமல் இருந்ததைப் போல கருணாநிதி இந்த மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.

இரு தினங்களுக்கு முன் 'கள்ளத் தோணி ஏறிப் போய் சண்டை போடுவதுதானே? யார் தடுக்கிறார்கள்' என்ற எரிச்சல் வெளிப்படும் அவரது அறிக்கை அதைத்தான் காட்டுகிறது.

பாமக ஒரு அணியில் இருப்பது அல்லது அதிலிருந்து மாறுவது என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கேள்வியை விளங்கிக் கொள்ள சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1998ம் ஆண்டு அது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக அணி 28 இடங்களைப் பெற்றது. திமுக அணி 10 இடங்கலைப் பெற்றது. 1999ம் ஆண்டு பாமக திமுக அணிக்கு மாறியது. அந்தத் தேர்தலில் திமுக அணி 25 இடங்களைப் பெற்றது.2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அது அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது அது திமுக அணிக்கு மாறியது தொடர்ந்தது அப்போது அந்தக் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி
கண்டது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அணியிலேயே அது தொடர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது.

அதாவது பாமக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி அதிக இடங்களைப் பெறுகிறது. 'ராசியான டாக்டர்' என்று சில அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கிறேன். கைராசியா, காக்கை உட்கார விழுந்த பனம்பழமா என்பதைக் கண்டு பிடிக்க சில கணக்குகளைப் பார்க்க வேண்டும்


1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்
பெறாமல் பாமக 32 வேட்பாளர்களைக் களமிறக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. மறுபடிய்ம் 1991ல் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை 31 வேட்பாளர்கள். ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மறுபடியும் 5.14 சதவீத வாக்குகள் வாங்கியது. 1991 தேர்தல் ராஜீவ் படுகொலை அலை வீசிய தேர்தல். அப்போதும் அதன் வாக்கு சதவீதம் குறையவில்லை

இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி 5லிருந்து 6 சதவீதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

1996 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அது கூட்டணி பரிசோதனைகளை மேற்கொண்டது. திமுக அதிமுக இவற்றைத் தவிர்த்து வாழ்ப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய திவாரி காங்கிரஸ் என்ற காங்கிரசிலிருந்து
உடைந்த ஒரு சிறு பிரிவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அது தற்கொலை முயற்சியாக முடிந்தது.

வன்னியர்களது வாக்குகள் எல்லாம் அந்த அணிக்கே வந்து விடும் என்ற வாதம் பொய்த்து அது அந்த முறை 2 சதவீத வாக்குகள்தான் பெற்றது. கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. (எனவே ராசித் தத்துவங்கள் முற்றிலும் சரியல்ல.)

தமிழகத்தில் கழகங்களின் துணையில்லாமல் களம் இறங்குவது ஆபத்தில் முடியும் என்று பாடம் கற்றுக் கொண்டதால் அன்றிலிருந்து ஏதேனும் ஒரு கழகத்துடன் அது கூட்டணி காண்கிறது. அப்போதுதான் அதனால்
அங்கீகாரத்திற்குத் தேவைப்படும் 6 சதவீத அளவை எட்ட முடியும். அதை 1998, 1999, 2004ல் பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்(6.5%, 8.21% 6.7%) இந்த வாக்கு விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் அது அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் (மாயாவதியின் BSP அதற்காகத்தான் இந்தியா முழுக்கப் போட்டியிடுகிறது) அப்படிப் போட்டியிட்டாலும் அது அந்த இடங்களில் வெற்றி பெற முடியாது. வாக்கு
விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அது 1999 தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டது ஆனால் 5 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. (ஆனால் அது அதன் வாக்கு விகிதத்தை அதிகரித்துக் கொண்டது) அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் அதிக இடங்களைக் கோருகிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் அது வென்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் அளிக்க மறுக்கின்றன. கூட்டணி மூலம் அதிகாரத்தை ருசி பார்த்து விட்டதால் பாமக கூட்டணியை விட்டு விடவும் தயங்குகிறது. அல்லது நிறையத்
தொகுதிகளில் போடியிட அதனிடம் போதிய பொருளாதார பலம் இல்லாமல் இருக்கலாம்.

பாமக இருக்கும் கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால் பாமக அதே அளவு இடங்களைத்தான் (4 முதல் 6 வரை) பெற முடியும். அதாவது தமிழகத்தின் வட, வட்மேற்குப் பகுதிகளில் உள்ள பாமகவின் செல்வாக்கு பெரிய கட்சிகளுக்கு அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் பாமக ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதால் அதனால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.

சரி. பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் பெரிய கட்சிகளுக்கு என்ன லாபம்?

1. முதலில் சொன்னபடி அது 'வெற்றிக் கூட்டணி' என்ற எண்ணம் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மனங்களில் விதைக்கப்படுகிறது. அது அவர்களுக்கு ஓர் மன எழுட்சியைத் தருகிறது. 'நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வெற்றியை 'உணர' (கலாமின் வார்த்தைகளில் சொன்னால் கனவு காண) வேண்டும் என்பது ஒரு நிர்வாக இயல் தத்துவன்.

2.முன்னர் பார்த்தபடி பாமகவின் வாக்கு வங்கி 5-6 சதவீதம். இது மற்ற கட்ட்சியுடன் சேரும் போது வெற்றி வாய்ப்பு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம்:

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மோதின. தனித் தொகுதி என்றாலும் வன்னியர்கள் நிறைந்த தொகுதி. 1998ல் அதிமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகரத்தினம் என்பவர்தான் 1998லும் திமுக வேட்பாளாராகப் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார். அதிமுக வேட்பாளர் வென்றார். 1999ல் பாமக திமுக அணிக்குப் போனது. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. (சதவீதக் கணக்கெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. தகவல் வேண்டுவோர் தனிப்பட மின்னஞ்சல் அனுப்பலாம்)

ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கூட்டணியை மற்றூம் பொறுத்ததல்ல. வேட்பாளர், அலை, தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பிரசினைகள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. ஆனால் கூட்டணிக் கணக்குகளும் அவசியம்.

பாமகவின் கூட்டணி அறிவிப்பால் யார் யார் எந்த அணி என்பதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் எந்தத் திசையில் போகும் என ஓரளவ்ற்கு ஊகிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 1998ல் ஏற்பட்டதைப் போன்று அணிகள் பிரிந்திருக்கின்றன. அதனால் பெரும்பாலும் முடிவுகள் அதைப் போல அமையலாம். அந்த முறை அதிமுக அணி அதிக இடங்களைப் பெற்றது.

தொகுதிகள் முடிவானதும் அதைப் பற்றி விரிவாக என்னுடைய கணிப்புக்களை எழுதுகிறேன்

Saturday, March 21, 2009

பூனைகளான சிறுத்தைகள்

முத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.

"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.

அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).

அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.

இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?

ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?

தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.

இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.

""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.

இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!

'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது

Thursday, March 19, 2009

எம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.

தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)

Tuesday, March 10, 2009

பா.ம.க யாருடன்? சில ஊகங்கள்

காங்கிரஸ் திமுகவுடன்தான் கூட்டணி என்று அறிவித்துவிட்ட நிலையில், பா.ம.க.வின் நிலை என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரத்ததிற்குப் பின் இந்தக் கேள்வி மேலும் வலுப்பெற்றிருக்கிறது

அதை குறித்த ஊகங்களும் கிசுகிசுக்களும் ஊடங்களில் ஆரம்பித்துவிட்டன. இன்று வந்த ஊகங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் நீங்களே உங்கள் ஊகங்களை மேற்கொள்ளலாம்.

பா.ம.க.,கூட்டணி தொடர்பாக கட்சிக்குள் நடைபெறும் கருத்து வேறுபாடுகள் தான் இதுவரை எந்த முடிவும் எடுக்காததற்குக் காரணம் என்று பா.ம.க ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.பா.ம.க., கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். திருமங்கலம் இடைத் தேர்தலில், பா.ம.க., யாருக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பது தொடர்பாக கூட்டம் நடந்த போது, தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஜெயலலிதா பக்கம் தான் இருந்தது என்கிறார் ஒரு சீனியர் பா.ம.க., தலைவர்.

காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்கிறார் அன்புமணி. ஆனால் ராமதாசோ, தி.மு.க., பக்கம் போனால் பா.ம.க., பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்.இப்படி இரண்டு பட்ட கருத்துகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடுகிறது கட்சித் தலைமை.

அ.தி.மு.க., தரப்பிலிருந்து ஆறு சீட்கள் தருகிறோம். ஆனால், ராஜ்யசபா சீட் தரமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,விடம் ஏழு எம்.பி., சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் பா.ம.க., தரப்பில் கேட்கப்பட்டது. ஆறு எம்.பி., சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்றுதி.மு.க.,வில் கூறினர். பா.ம.க.,வோ ஒன்பது தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் ஏழு தொகுதிகளை தரவேண்டும் என்று கறாராக உள்ளது. இதற்கான பேரம் இன்னும் படியவில்லை. எனவே தி.மு.க., கூட்டணியை பா.ம.க., இன்னமும் இறுதி செய்யவில்லை.

அ.தி.மு.க., பக்கமே போய்விடலாம் என்றால் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிகிறது. அதற்கு பிறகு என்ன செய்வது? என பா.ம.க., யோசிக்கிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடலாம் என்று கட்சியினர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அன்புமணி. ராஜ்யசபா மூலமாகவே, வெயிலில் பிரசாரம் செய்யாமல் எம்.பி.,யாக ஆசைப்படுகிறார் அன்புமணி.சமீபத்தில் சோனியாவை சந்தித்த பிறகு, மத்திய அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அன்புமணியின் ஆசை அதிகமாகிவிட்டது. இப்படி அப்பா - மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பா.ம.க., எங்கு போய்ச்சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை

தினமலர்

‘‘இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கும் பாமக கருத்து (ஜெ.யின் உண்ணாவிரதம் குறித்து) என்னவாம்...’’‘
‘உண்ணாவிரதம் நடந்த அன்னிக்கு ஜப்பான் தூதரகத்துல மனு கொடுக்க போயிருந்தாங்க... அந்த தலைவர்கள் ராமதாசிடம் நைசா பேச்சுக் கொடுத்து பாத்திருக்காங்க... ஆனா அவர் வாய திறக்கவே இல்லையாம்...’’
‘‘அப்ப எதுக்கு... இன்னைக்கு நடக்குற உண்ணாவிரதத்தை கேன்சல் பண்ணாளாம்...’’
‘‘மருத்துவரின் தந்திரத்துல இதுவும் ஒண்ணுனு சொல்றாங்க... ஜெயலலிதா ‘தனி நாடு’ என்பதை ஏத்துக்கிட்டதால அவங்களுக்கு போட்டியா உண்ணாவிரதத்தை நடத்த வேண்டாமுனு கேன்சல் பண்ணிட்டதா சொல்றாங்க...’’‘
‘இதை முதல்லயே செய்திருக்கலாமே...’’ ‘‘அப்படி விட்டுக் கொடுத்தா, அதிமுக கூட்டணியில கூடுதலா சீட் கேட்க முடியாதுல்ல...’’ என்று சொன்ன பீட்டர் மாமா, காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

தினகரன்

“Ramadoss is bargaining hard with us,” revealed a DMK leader. “He says the AIADMK is offering him seven seats. He wants us to give him eight seats, plus a Rajya Sabha berth for his son.”
Hindustan Times
Being the chief architect of the Democratic Progressive Alliance, DMK president M Karunanidhi is back in business and has offered PMK founder Dr S Ramadoss, the eternal fence-sitter, six LS seats plus one Rajya Sabha seat for his son Dr Anbumani Ramadoss, according to political sources.

DMK sources said Ramadoss Sr wanted seven Lok Sabha seats and an RS nomination, as the AIADMK had apparently offered him eight Lok Sabha seats. However, Karunanidhi has stuck to the 6+1 formula.

After kicking out the PMK from the state-level alliance, Democratic Progressive Alliance (DPA), Karunanidhi has been shrewd enough to let the Congress woo back Ramadoss, a partner in the UPA at the Centre, for the LS polls.

For over a month, the Congress has been negotiating with the PMK and Vijayakanth's DMDK, as both the parties have far too much bitterness with the DMK to be directly holding parleys. As the Congress is keen on repeating its 2004 success, AICC president Sonia Gandhi, herself talked to Ramadoss Sr a fortnight ago to retain him in the alliance but the PMK leader is yet to make up his mind.

The AIADMK is keen to get the PMK by its side to add to its numberical strength. "PMK has been offered eight seats, including two reserved constituencies and no guarantee of a Rajya Sabha seat,'' said a source in AIADMK. As only three of the seats offered by AIADMK are said to be winnable', Ramadoss is in a dilemma, said sources close to him, hinting that the DMK offer looks better.

Times of India
என்னுடைய ஊகம் (இன்னொரு கோணத்தில்)
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. கடந்த முறை போட்டியிட்டது. கடந்த முறை கடும் எதிர்ப்பிற்கிடையே அது காங்கிரசிடமிருந்த அந்தத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை காங்கிரஸ் அந்தத் தொகுதியைத் திரும்பப் பெற முயற்சித்து வருகிறது. கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்ற புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு சோனியாவை அணுகி முறையிட்டிருக்கிறார்கள்.
பாமக காங்கிரஸ் கூட்டணியில் தொடர இந்தத் தொகுதியைக் கோரும். கிடைக்காத பட்சத்தில் இதைக் காரணமாகச் சொல்லி அதிமுக அணிக்குப் போகும். அதாவது இலங்கையைவிட புதுச்சேரி பாமகவின் முடிவைத் தீர்மானிக்கும்.
கொசுறு: விடுதலைச் சிறுத்தைகள் பற்றியும் ஒரு கிசுகிசு:
""திருமாவளவன் தன்னோட தொகுதியை உறுதி செய்துட்டாருங்க...'' எனக் கூறியபடி விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய். "
"அவர் முதல்ல, கூட்டணியை உறுதி செய்துட்டாராங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி."
"அதுக்காகத் தான், சமீபத்துல முதல்வரை சந்திச்சப்ப, காங்கிரசோட எதிர்ப்பு பத்தி பேசியிருக் காரு... "அதை விடுங்க... முதல்ல நீங்க என்னோடு இருப்பீர்களா, மாட்டீங்களான்னு மட்டும் சொல்லுங்க'ன்னு முதல்வர் கேட்டாராம்..."இதை எதிர்பார்க்காத திருமாவளவன், "கூட்டணியில இருக்கேன்'னு பதில் சொல்லியிருக்காரு... அவருக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்கறது உறுதியாயிடுச்சுன்னு, கட்சிக்காரங்க பேசுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்."
"காங்கிரசை ஒழிப்பது தான் எங்கள் முதல் பணின்னு திருமாவளவன் சொன்னது எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரலைங்க...'' என சிரித்தார் அந்தோணிசாமி.
தினமலர்

Monday, March 09, 2009

முந்துகிறதா மூன்றாவது அணி?

மாலன்

கடந்த வாரம் நிகழ்ந்த இரு முறிவுகள், (காங்-சமாஜ்வாதி, பாஜக-பிஜூ ஜனதாதளம்) தேர்தல் களத்தை மூன்றாவது அணிக்கு சாதகமாகத் திருப்பியிருக்கின்றன. ஆனால் அந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது இன்னமும் கேள்விக் குறிதான். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் களத்தில் குழப்பம் அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல ஆழமாகியும் உள்ளது.

நாம் தெளிவு பெற யார் யார் எங்கிருக்கிறார்கள், அவர்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் இவற்றை சட்டென்று ஒரு 'கிளான்ஸ்' பார்த்து விடலாம்.

23 கட்சிகளின் துணையோடு ஆண்ட ஐக்கிய முற்போக்கு அணியில் (காங்கிரஸ் கூட்டணியில்) 2004 தேர்தலின் போது அதனுடன் இருந்த சில கட்சிகள் இன்று அதனோடு இல்லை.உதாரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, மறுமலர்ச்சி திமுக, மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்று அதன் அணியில் இருப்பவர்கள்:

திமுக:


எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: பல காரணங்களால் (அவை என்ன என்று எல்லோருக்குமே தெரியும்) இப்போது இருப்பதை விடக் குறைவான இடங்களைப் பெறக்கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 16
கடிவாளம் யார் கையில்?: கருணாநிதி (குடும்பத்தினரிடம்)

ராஷ்ட்ரிய ஜனதா தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? பீகார்
என்ன வாய்ப்பு ? : நிதீஷ் குமார்- பாஜக கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் பாஸ்வானுடன் உரசல்கள் இருக்கின்றன. அவருடனும் காங்கிரசுடனும் உறவு தொடர்ந்தால் இப்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது?: 24
கடிவாளம் யார் கையில்? : லாலு பிரசாத் யாதவ்

தேசியவாத காங்கிரஸ்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? :மகாராஷ்டிரம்
என்ன வாய்ப்பு ? : ஷரத் பவார்தான் அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்து வருவது காங்கிரசிற்கு எரிச்சலைக் கொடுக்கிறது.சிவசேனையுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டியது. காங்- தே.கா உறவு அத்தனை சுமுகமாக இல்லை. எனினும் இருவருக்கும் வேறு வழியில்லை. நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாத சம்பவம் நடந்த போது மாநிலத்தை ஆளும் காங்-தே.கா அரசு அதைக் கையாண்ட விதம் நகர்ப்புறங்களில் அந்த ஆட்சி மீது கடுப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் பாஜக அதை நினைவுபடுத்த முயலும்.கிராமப்புறங்களில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் கை கொடுக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 11
கடிவாளம் யார் கையில் ?: ஷரத் பவார்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: ஜார்க்கண்ட்
என்ன வாய்ப்பு?: உம்ஹூம், நோ சான்ஸ்.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: (இன்ன்மும்) சிபு சோரன் கையில்தான்

திருணாமூல் காங்கிரஸ்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : மேற்கு வங்கம்:
என்ன வாய்ப்பு ?: நந்திகிராம் கை கொடுத்திருப்பதால் தோழர்களுக்கு தண்ணி காட்டும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 1
கடிவாளம் யார் கையில் ?: மம்தா பானர்ஜி

தேசிய மாநாடு

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு & காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியைப் பிடித்தது. அநேகமாக அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 2
கடிவாளம் யார் கையில் ?: ஓமர் அப்துல்லா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், பாஜகவும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அது சாதகமாக பாதகமா என்பது அந்த ஆட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்/அவப் பெயரைப் பொறுத்தது. பிஜு ஜனதாதளத்துடன் உறவு முறிந்ததை அடுத்து, ஒரிசா, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய எல்லா தென் மாநிலங்களிலும் தனித்துத்தான் போட்டியிட வேண்டியிருக்கும். இன்று பாஜக கூட்டணியில் இருப்பவர்கள்:


சிவசேனா

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: மகாராஷ்டிராம்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆளும் காங்-தே கா கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வுகளை நம்பியிருக்கிறது. மத + மாநில உணர்வுகளை உசுப்பிவிட்டு ஆதாயம் பார்க்க முயற்சிக்கும். சரத் பவார் பிரதமருக்குப் போட்டியிட்டால், அத்வானியை கைவிட்டுவிட்டு அவரை ஆதரிக்கக் கூடும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 12
கடிவாளம் யார் கையில்?: பால் தாக்ரே ( ஆஸ்பத்திரியிலிருந்தாலும்)


சிரோண்மணி அகாலி தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பஞ்சாப்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிறது. அதன் பாதகங்களை(யும்) எதிர் கொள்ள வேண்டி வரும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 8
கடிவாளம் யார் கையில் ?: பாதல் குடும்பத்தினர்

ஜனதாதளம் (ஐக்கிய)

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பீகார்.
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தை ஆள்கிறது. ஆட்சிக்கு நல்ல பெயர். அதனால் கணிசமான இடங்களைப் பெறலாம்.
என்ன வாய்ப்பு ? : 8
கடிவாளம் யார் கையில் ? : நிதீஷ் குமார்

ராஷ்டிரிய லோக்தள்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உ.பி.யின் மேற்குப் பகுதியில்
என்ன வாய்ப்பு ? : மேற்கு உ.பி.யில் எப்போதுமே சில இடங்களைக் கைப்பற்றக்கூடிய வலிமை உண்டு
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 3

அசாம் கண பரிஷத்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: அசாம்
என்ன வாய்ப்பு ?: முன்பு காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த மாணவர் கட்சியாக இப்போது இல்லை. பல கூறுகளாக உடைந்து விட்டது.ஆனாலும் அசாமில் சில பகுதிகளில் இடங்களைப் பிடிக்கக் கூடும். உறுதியாகச் சொல்ல இயலாது. தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டது.
2004 எத்தனை இடங்கள் பெற்றது? : 2

மூன்றாவது அணி என்பது சிலநாட்களுக்கு முன்வரை கடவுள் போல இருந்தது. அதாவது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை. இப்போது அது ஆவி மாதிரி தோன்றுகிறது. காலில்லாத ஆவி. அது இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைப் பார்த்ததாக சத்தியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டு உள்ளூற பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பிரதமர்கள் வேண்டுமானாலும் கொடுக்கக் கூடிய ஒரே அணி அதுதான்.

இடது சாரிகள் (மார்க்சிஸ்ட், இந்திய கம். பார்வேர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி)

எந்தப் பேட்டைகளில் பிஸ்தா ? : மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம்,
என்ன வாய்ப்பு ? : மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சியில் இருக்கின்றன. நந்திகிராம், சிங்கூர் பிரசினைகளால் மேற்கு வங்கத்திலும், உட்கட்சிப் பூசலால் கேரளத்திலும் முன்பு பெற்ற அளவு இடங்களைப் பெற இயலாது.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 60

அதிமுக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால், திமுக- காங்-கூட்டணிக்கு கடும் சவாலாக விளங்கும். திமுகவின் குடும்ப அரசியலும், 'அம்மா'விற்கு உள்ள வசீகரமும் கை குடுக்கும். அலை எதுவும் வீசாத பட்சத்தில் 20 -25 இடங்களை எதிர்பார்க்கலாம். தேர்தலுக்குப் பின் 3வது அணியிலேயே இருக்குமா என்பது கேள்விக்குறி.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 0
கடிவாளம் யார் கையில் ?: (சந்தேகமில்லாமல்) ஜெ. கையில்

ஜனதாதளம் (மதச்சார்பற்ற)

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: கர்நாடகம்
என்ன வாய்ப்பு ? :சட்டமன்றத் தேர்தலில் அடி வாங்கியது. ஆட்சியிலிருக்கும் பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இராது. காங்கிரசோடு ஏதேனும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 3
கடிவாளம் யார் கையில் ?: தேவகவுடா

தெலுங்கு தேசம்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: மாநிலச் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடப்பதால், மாநில காங்கிரஸ் ஆட்சியின் மீதான கோபதாபங்களும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாதகமான அம்சம். தெ.தே+இடதுசாரிகள்+ TRS என்பது ஆந்திரத்தில் வலுவான கூட்டணி. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிரஞ்சீவி அள்ளிக் கொண்டு போகாத வரையில் பிரசினை இல்லை.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: சந்திரபாபு நாயுடு

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஆந்திரத்தில் உள்ள தெலுங்கான பகுதி
என்ன வாய்ப்பு ? : தெலுங்கு தேசத்திற்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 5
கடிவாளம் யார் கையில் ? : சந்திரசேகர் ராவ் (இவ்ரை எதிர்த்து அசாரூதீன் களமிறக்கப்படக்கூடும்)

மதிமுக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: தமிழ்நாட்டின் சில தொகுதிகள்
என்ன வாய்ப்பு ?: இலங்கைப் பிரசினையில் காங்-திமுகவிற்கு எதிரான வாக்குகள் கை கொடுக்கும்.அதிமுக அணியில் இருப்பது ஒரு பலம். கட்சியை உடையாமல் காப்பாற்றும் சவாலை தேர்தலுக்கு முன்னும் பின்னும் சமாளிக்க வேண்டியிருக்கும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 4
கடிவாளம் யார் கையில்: (இன்றுவரை) வைகோ கையில்

3வது அணிக்கு வரக்கூடியவர்கள்:

பிஜூ ஜனதா தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஒரிசா
என்ன வாய்ப்பு ? : பாஜகவுடன் உறவு முறிந்ததால் இடதுசாரிகளின் உதவியை நாடுகிறது. 'நவீன் பாபு'வின் செல்வாக்கைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 11
கடிவாளம் யார் கையில் ? நவீன் பட்நாயக்

பகுஜன் சமாஜ் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உத்தரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ? : காங்-சமாஜ்வாதி பூசல் இவருக்கு சாதகம். சட்டமன்றத் தேர்தலில் ஜமாய்த்திருந்தாலும் ஆட்சியில் இருப்பதால் அதற்கு எதிரான வாக்குகளையும் சந்திக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலைப் போலவே இப்போதும் இடங்களைப் பிடித்தால், பிரதமராக முயற்சிப்பார். ஏற்கனவே இடதுசாரிகள் இவரை வரவேற்றிருக்கின்றார்கள்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது? 19
கடிவாளம் யார் கையில் ?: மாயாவதி

சமாஜ்வாதி கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: உத்தரப்பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: தேர்தலுக்குப் பின் மாயாவதி இடதுசாரிகளை நோக்கிப் போகவில்லை என்றால் இந்தக் கட்சி அந்தப் பக்கம் சாயும்.ஆனால் 2004ல் பெற்ற அளவு இடங்களைப் பெறுவது சிரமம்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 36
கடிவாளம் யார் கையில் ? : முலாயம் சிங் யாதவ்

மக்கள் ஜனநாயகக் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு &காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அதிகமில்லை. தேசிய மாநாடு + காங். என்பது ஜ&கா வில் வலுவான கூட்டணி.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 1
கடிவாளம் யார் கையில் ? : முப்தி முகமது குடும்பத்திடம்

பாட்டாளி மக்கள் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாட்டின் சில தொகுதிகளில்
என்ன வாய்ப்பு? : காங்கிரசோடு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டால் திமுகவே இதனை பலவீனப்படுத்த மறைமுகமாக முயற்சிக்கும் என்ற சந்தேகத்தில் அதிமுகவோடு சேரலாம்.தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ எந்த அணிக்கும் போகலாம்..
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 6
கடிவாளம் யார் கையில்?: மருத்துவர் ராமதாஸ்

கறுப்புக் குதிரை: பிரஜா ராஜ்யக் கட்சி

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள்
என்ன வாய்ப்பு? : சிரஞ்சீவின் சினிமா கவர்ச்சி. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் மீதுள்ள அதிருப்தி வாக்குகள், இளைய தலைமுறையின் வாக்குகள் ஆகியவற்றைக் கவர்ந்து கொள்ளக் கூடும். சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகம் கவனம் செலுத்தும். ஆனால் அது நாடாளுமன்ற இடங்களுக்கும் கை கொடுக்கும். ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்: சிரஞ்சீவி

தேமுதிக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: யாருக்கும் தெரியாது
என்ன வாய்ப்பு?: ஹி ஹி
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்?: விஜயகாந்த் குடும்பத்தினர்

இந்தப் பட்டியல் தரும் சித்திரத்தைப் பார்த்தால் மூன்றாவது அணி முந்துவது போல் தோன்றலாம். அது அநேகமாக 160லிருந்து 180 இடங்களைப் பிடிக்கும் என நான் நினைக்கிறேன். அப்படியானால் ஆட்சிஅமைக்க அதற்கு 100லிருந்து 120 இடங்கள் வரை தேவைப்படும்.அப்போதும் 1996ல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியைப் போல ஒன்று சாத்தியமே.

ஆனால் கட்சிகளிடம் உள்ள உள் முரண்பாடுகளை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயலும் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு மாயாவதியை ஜெ.பிரதமராக ஏற்பாரா? தேவகவுடாவை மாயாவதி ஏற்பாரா? அந்த மாதிரி சூழலில் பவாரை முன்நிறுத்தி காங்கிரஸ் (சந்திரசேகர் பிரதமர் ஆனது போல) ஆதரவளிக்கக் கூடும். சிவசேனாவும் பவார் மராட்டியர் என்பதால் ஆதரிக்கலாம். ஆனால் இடதுசாரிகள் ஆதரிப்பார்களா? இடதுசாரிகள் ஆதரித்தால் மம்தா ஆதரிக்கமாட்டார்; மாயாவதி ஆதரித்தால் முலாயம் ஆதரிக்க மாட்டார். ஜெயலலிதா ஆதரித்தால் கருணாநிதி ஆதரிக்க மாட்டார். இந்தக் குழப்பங்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும்.

தேர்தலைவிட தேர்தலுக்குப் பின்னர்தான் குழப்பங்களும் சுவாரஸ்யங்களும் காத்திருக்கின்றன.

Sunday, March 08, 2009

Tamilnadu Therthal Gossips, Cartoons: 'சொல்றாங்க', கேலிச் சித்திரம் & ஊர் வம்பு

இரண்டு முத்து

நடிகர் மன்சூரலிகான்: "அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்."



கருணாநிதி: 'எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!'

இரண்டு கருத்துப் படம்



இரண்டு கிசுகிசு

  • தலைவரின் மருத்துவமனைக் காட்சிகளை வைத்து ஒரு பிரசாரப் படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதாம். அவர் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை, இந்தக் காட்சிகளை வைத்துச் சரிக்கட்டும் முயற்சியாம்!
  • மத்திய உளவுத் துறை ஒரு ரகசிய சர்வே எடுத்தது. மத்திய ஆளுங்கட்சிக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் இது தென் மாவட்டங்களில்தான் இன்னும் கூடுதல் என்றும் தெரிய வந்துள்ளது!

Saturday, March 07, 2009

ஜெயலலிதா உண்ணாவிரதம் எதற்காக?


மாலன்

இலங்கை உள்நாட்டுப் போர் அநேகமாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில் போர் நிறுத்தம் கோரி, வரும் திங்களன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் கூட 'இது காலம் கடந்த முயற்சி' என்று சொன்னாலும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.

காலம் கடந்த முயற்சி என்பதை ஜெயலலிதாவும் அறிந்திருப்பார்.அவர் இந்த உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர் நலனை மனதில் கொண்டல்ல, அதற்குப் பின்னால் வேறேதோ அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பதை ஊகிப்பது கடினமல்ல. இந்த அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி பகிரங்கமாகக் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகியிருப்பதைக் கவனிக்கும் போது, இந்த உண்ணாவிரதம் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றிற்காக இருக்கலாம் எனத் தோன்றுகிறது:

  • இலங்கைப் பிரசினை வாக்காளர்களிடையே, வெளியே புலப்படாத ஓர் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்து, தன் கட்சியின் வாக்ககுகளைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி

  • இலங்கைப் பிரசினையை ஓர் தேர்தல் பிரசினையாக மாறி விடாமல் அதை neutralize செய்யும் ஒரு தந்திரம். எல்லாக் கட்சிகளும் ஏறத்தாழ ஒரே நிலை எடுத்துவிட்டால், அதில் விவாதத்திற்கும், பிரசாரத்திற்கும் அதிக இடமில்லாது போய் விடும்.

  • காங்கிரசுடன் கூட்டணி இனி சாத்தியமில்லை என்ற நிலையில், பா.ம.கவைத் தன் அணிக்குக் கொண்டுவர வீசப்படும் தூண்டில்

  • அதிமுக+ மதிமுக+பா.ம.க+இந்தியக் கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் உள்ள கூட்டணி, 'இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டணி' என்ற தோற்றத்தை உருவாக்கி, இலங்கைத் தமிழர் பிரசினை காரணமாக திமுக-காங்கிரஸ் அரசுகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை கூட்டணிக்கு வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் உத்தி

இவற்றில் ஏதோ ஒன்றுதான் உண்ணாவிரத்தின் பின்னுள்ள நோக்கமாக இருக்க வேண்டும். நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..

உண்ணாவிரதத்தோடு உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவது சந்தேகத்தை வலுவாக்குகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டிய போது, அதை அங்கு எப்படி அனுப்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா. இப்போது காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.

எப்படி இருந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல், அடிக்கடி தன் நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது நடுநிலை வாக்காளர்களுக்கு அவர் மீதுள்ள நம்பகத்தன்மையை பலவீனமடையச் செய்யுமே அன்றி அவருக்கு அரசியல் ரீதியாக உதவாது.

Friday, March 06, 2009

BJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்

பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 46 பா.ஜனதா வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்துடன் சேர்த்து, இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருக்கிறது.

இந்தப்பட்டியலில் பெரும்பாலோர் நடப்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களவையில் பணத்தை கொண்டு வந்து காட்டிய 3 எம்.பி.க்களில் ஒருவரான பக்கான்சிங் குலாஸ்தேவும் (Fagan Singh Kulste) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இதில்
  • கர்நாடகம் - 11 வேட்பாளர்கள்
  • சத்தீஸ்கர் மாநிலம் - 11
  • மத்தியப்பிரதேசம் - 12
  • ராஜஸ்தான் - 12
வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  • கர்நாடக மாநிலத்தின் தற்போதைய எம்.பி.க்கள் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. 
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தற்போதைய எம்.பி.க்கள் 5 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப் பட்டுள்ளது.
  • மத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்தப்படுகின்றனர்.
வேட்பாளர் பட்டியல்
  • சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் நிறுத்தப்படு கிறார்.
  • அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தி (பெல்லாரி)
  • பொதுப் பணித்துறை மந்திரி சி.எம். உதாழியின் மகன் சிவ்குமார் உதாதி (ஹலேரி)
  • சுகாதாரத் துறை மந்திரி உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டி (சிக்கொடி)
  • கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ரெவு நாயக் பெலமகி (குல்பர்கா)
  • ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே குவாலியர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • பிகானீர் தொகுதியின் உறுப்பினரான நடிகர் தர்மேந்திராவின் பெயர் இந்த பட்டியலில் இல்லை. தற்போது ரிசர்வ் தொகுதியாக உள்ள இது அர்ஜூன் மேக்வால் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார்.
  • ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் ஜலவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • முன்னாள் மந்திரி பக்கன் சிங் லோவ்தே (மண்டியா)
  • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் (ராஜ்கார்)
  • பா.ஜனதா கட்சி யின் பொதுச்செயலாளர் தவார் சந்த் கெலாட் (டெவாஷ்)
  • முன்னாள் மத்திய மந்திரி சத்யநாராயண் ஜடியா (உஜ்ஜயினி)

பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண்ஜேட்லி ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவ தில்லை என்றும், அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள் என்றும் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தற்போது ராஜ்யசபா எம்.பி.களாக இருந்து வருகின்றனர்.

அருண் ஜேட்லி
  • பீகார்,
  • உத்தரபிரதேசம்,
  • டெல்லி,
  • பஞ்சாப்,
  • சண்டிகார்
ஆகிய மாநிலங்களின் தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுப்புகளையும் அருண்ஜேட்லி கவனித்துக் கொள்கிறார்.

சுஷ்மா சுவராஜ்
  • மத்திய பிரதேசம்,
  • சட்டீஸ்கர்,
  • ஜார்கண்ட்
மாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும்

சாந்த குமார் மற்றும் பகத்சிங் கொசூரி
  • ஜம்முகாஷ்மீர்,
  • இமாச்சல் பிரதேசம்,
  • உத்தரகாண்ட்,
  • அரியானா
மாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
  • குஜராத்,
  • மகாராஷ்டிரா,
  • கோவா,
  • டையூ,
  • டாமன் உள்ளிட்ட மேற்கு மண்டல மாநிலங்களின்
தேர்தல் பொறுப்புகளை கவனித்துக்கொள்கிறார்.

ஒரிசா மாநில தேர்தல் பொறுப் பாளராக வி.சதீஷும், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சி தலைவர் சவுதன்சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாமில் தேர்தல் பொறுப்புகளை பார்த்துக் கொள்கின்றனர்.

முந்தைய செய்தி: நாராயணன்: பாஜகவின் தேர்தல் முகங்கள்

Telugu Desam & DMK: இலவச கலர் டிவி

ஆந்திர மாநிலத்தில், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
  • சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம், 
  • காங்கிரஸ், 
  • தெலுங்கு தேசம் & தெலுங்கானா ராஷ்டிர சமிதி
  • பாஜக 
என நான்கு முனை போட்டி ஆந்திராவில் நிலவுகிறது.

~oOo~

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:
  • கேபிள் இணைப்புடன் கூடிய இலவச வண்ணத் தொலைக்காட்சி
  • பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில், வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ. 2000 ரொக்கப்பணம்
    • பரம ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரமும்,
    • ஏழைகளுக்கு ரூ.1500-ம்,
    • வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படும்.
  • ஏழைக்குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின்விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  • மக்களின் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • விளிம்பு நிலையாளர்களுக்கு இலவச மருத்துவ சேமநல நிதி, காப்பீடு
  • முதியவர்களுக்கு உதவித் தொகை
  • கணவனை இழந்த பெண்களுக்கு மாதாந்திர பென்சன்
  • வெள்ளை ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 25 கிலோ இலவச அரிசி

~oOo~


மாநில காங்கிரஸ் தலைவர் கக்ரபாணி தங்கள் ஆட்சியின் ஆரோக்யஸ்ரீ மற்றும் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போன்ற திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்தாலே தங்களின் வெற்றி எளிதாகும் என்றிருக்கிறார்.


~oOo~


சிரஞ்சிவியின் பிரஜா ராஜியம் 
  • கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசியலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும்
  • ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்றும்
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்திருக்கிறார்.
"வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது, மோசடி மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என ஜனாதிபதி பிரதிபா பட்டீலிடம், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


~oOo~


சந்திரபாபு நாயுடு செய்த ஊழல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாளில் வெளியிட்டதில் இருந்து:

  • சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் செய்துள்ள முறைகேடுகளில் ஹெரிடேஜ் புட் லிட்., தொடர்பான ஊழல் குறிப்பிடத்தக்கது.
  • ஒரே நிறுவனத்திற்குள் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுவது,
  • கூட்டுச் சேர்ந்து சதியில் ஈடுபடுவது ஆகிய முறைகேடுகள் நடந்துள்ளன.
  • அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்துவதற்கு எதிராக கோர்ட்டில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.
  • தனது ஆட்சிக் காலத்தில் நடந்த எலுரு ஊழல் தொடர்பான விசாரணைக்கும் தடை வாங்கியுள்ளார்.
  • சந்திரபாபு நாயுடுவின் ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
  • வேலைக்காக உணவுத் திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது.
  • போலி முத்திரைத் தாள் தொடர்பான விஷயத்தை ஊக்குவித்துள்ளார்.
  • ஸ்டான்போர்டு பல்கலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் சீட் பெறுவதற்காக சத்யம் நிறுவனம் சார்பில் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தெலுங்கு தேசம் கட்சியின் அடையாள அட்டை குறித்த விஷயத்திற்காகவும் சத்யம் நிறுவனத்திடம் இருந்து 80 கோடி ரூபாயை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.


~oOo~


மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி அல்லாத
மூன்றாவது அணியில்
  • தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்
  • 4 இடதுசாரி கம்யூனிஸ்ட்/மார்க்சிஸ்ட் கட்சிகள்
  • அ.தி.மு.க
  • தெலுங்கு தேசம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி
ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளன.

மாயாவதியும் இந்த அணியில் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, March 01, 2009

காங்கிரசுக்கு அதிக இடம், திமுக தாராளம்?

தமிழகத்தில் இந்த முறை காங்கிரஸ் அதிகத் தொகுதிகளைக் கேட்கும் என இரு தினங்களுக்கு முன் செய்திகள் வந்தன. அந்தக் கோரிக்கையை திமுக ஏற்கும் என்பது இன்றைய செய்தி. விவரங்கள் கீழே:

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை விட்டுத்தர திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியிலிருந்து வெளி யேற்றப்பட்ட பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தொகுதி பங்கீடு செய்வது குறித்து கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக கூட்டணி யிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக கூட்டணியில் அண்மையில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் மக்களிடம் செல்வாக்கு குறைந் துள்ளது என்றும், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான போராட்டங் களின் போது வன்முறையை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கருதினார்கள். இதனால் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்த விலகி அதிமுகவுடன் சேர வேண்டும் என்று விரும்பினார்கள்.

இத்தகைய எண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரிடம் மட்டுமின்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களிடமும் ஏற்பட்டது. மற்றொரு பிரிவினர் வளர்ந்து வரும் கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால்தான் காங்கிரசுடன் தாங்கள் தொகுதி உடன்பாடு வைத்து கொள்ள முடியும் என்று தேமுதிக தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது.
இது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. திமுக நிலைமையை சரிசெய்ய தீவிர முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.தமிழ்நாடு பொறுப்பு வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தை, தயாநிதி மாறன் இருமுறை சந்தித்து பேசியுள்ளார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதால் அந்த தொகுதிகளில் கணிசமான வற்றை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக விட்டுத்தர திமுக தரப்பில் முன்வந்ததாக கூறப்படுகிறது.இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தாமாக வெளியேறின. ஆனால் பாமகவை திமுக தான் வெளியேற்றியது. இதனால் திமுக அணிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர திமுக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி சமரச முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். மதச்சார்பற்ற சக்திகளின் ஓட்டு பிரியக்கூடாது என்பதை அவரிடம் வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கு நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் சகோதரர் தமிழரசுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். தமிழரசின் மகள் திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்றதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்ட போதிலும், அரசியல் பேசப்பட்டதாகவும் கூறப்படு கிறது. இதன் தொடர்ச்சியாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே. மணியுடன் நேற்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

எனவே திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சங்கமம்/பிப்ரவரி 28

முன்னர் வந்த செய்தி:
(பிப்ரவரி 26/ தட்ஸ் தமிழ்)

சென்னை: தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்பதாகத் தெரிகிறது.
நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.
புதுச்சேரியின் ஒரு தொகுதியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக-16 (இதில் ஒன்றில் திமுக சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடது), காங்கிரஸ்-10, பாமக-6 (இதில் ஒன்று புதுச்சேரி தொகுதி), மதிமுக-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட்-2 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்த அனைத்து இடங்களிலும் இந்தக் கூட்டணி வென்று மாபெரும் சாதனை படைத்தது. அந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக (33 இடங்களில் நின்றது), பாஜகவுக்கு (7 இடங்களில் போட்டியிட்டது) ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.ஆகிய இடங்களில் போட்டி யிட்டன.
ஆனால், இப்போது திமுக கூட்டணி கலகலத்துப் போயுள்ளது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டன. இப்போது இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன.
இவர்களுக்கு முன்பே மதிமுக விலகி அதிமுக கூட்டணிக்குப் போய்விட்டது.
பாமகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க விரும்பினாலும் திமுகவுடன் மோதல் போக்கில் உள்ளது. திமுகவுடன் உறவை சீர் செய்தால் மட்டுமே கூட்டணியில் நீடிக்க முடியும் என அக் கட்சியின் தலைவர் ராமதாசிடம் கடந்த வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனால் பாமக திமுக கூட்டணியில் சேருமா அல்லது வழக்கம்போல் பல்டி அடித்து அதிமுக பக்கம் போகுமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் விலகி விட்டதால் திமுக கூட்டணியில் திமுக கூட்டணியி்ல் 8 இடங்கள் கூடுதலாக உள்ளன. பாமகவும் விலகிவிட்டால் திமுக, காங்கிரசுரக்கு மேலும் 6 இடங்கள் கூடுதலாக இருக்கும்.
இப்படியாக மொத்தம் 8 அல்லது 14 இடங்கள் வரை கிடைப்பதால் திமுக அதிக இடங்களில் போட்டியிட முயல்கிறது. அதே போல காங்கிரசும் கூடுதல் இடங்களைக் கேட்க முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே எஞ்சியிருந்தால் இருவருமே சரி சமமாக இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறுவதாகத் தெரிகிறது.
அதாவது புதுச்சேரியையும் சேர்த்து திமுக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் நிற்கலாம் என்கிறது.
பாமக கூட்டணிக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு 6 இடங்களைத் தந்துவிட்டு நாம் தலா 17 இடங்களில் போட்டியிடலாம் என்பது காங்கிரஸ் சொல்லும் கணக்கு.
ஆனால், கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால் 10 இடங்கள் வரை கேட்டு கடைசியில் 8 இடங்களுக்கு ஒப்புக் கொள்வார் ராமதாஸ் என்று திமுக கருதுகிறது.
அப்படி நடந்தால், மிச்சமிருக்கும் 32 தொகுதிகளில் தான் 20 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு 12 இடங்களையும் (கடந்த தேர்தலை விட 2 இடம் ஜாஸ்தி) தர திமுக நினைப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கூட்டணிக்குள் யார் வந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இடங்களை சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் நச்சரிப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைகள் தான் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்- திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு வலைவீசுவதை காங்கிரஸ் இன்னும் நிறுத்தவில்லை. அவர் கூட்டணிக்குள் வந்தால் பாமகவை வெட்டிவிடுவது என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது.
அப்படி ஒரு நிலை வந்தால் தேமுதிகவுக்கும் சேர்த்து திமுகவிடம் காங்கிரஸ் இடங்களைக் கேட்கும். அதாவது தேமுதிக-காங்கிரஸ் இடையே தான் கூட்டணியாம். திமுகவுடன் தேமுதிகவுக்கு நேரடியாக கூட்டணி இல்லையாம்.
இதைச் சொல்லித்தான் விஜய்காந்துக்கு காங்கிரஸ் வலை வீசிக் கொண்டுள்ளது. அவர் ஒப்புக் கொண்டுவிட்டால் திமுகவிடம் 25 இடங்கள் வரை காங்கிரஸ் கேட்கும் என்று தெரிகிறது. அதி்ல் 5 முதல் 8 இடங்களை விஜய்காந்துக்கு ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Saturday, February 28, 2009

பிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா ?

பிரதமராக பதவியேற்பவர் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது கட்டாயமாக்கப்படவேண் டும். அதற்காக அரசிலயமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியிருந்தார்.

இந்த யோசனை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. திறமை மற்றும் கொள்கையின் அடிப்படையில்தான் பிரதமரை தீர்மானிக்க வேண்டும் என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி.

இந்த விஷயத்தில் உங்கள் வாக்கு அத்வானிக்கா? சோம் நாத்திற்கா?

அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்.

Monday, February 23, 2009

நெருக்கடியால் வந்த நெருக்கம்?

தினமணி

சென்னை, பிப். 22: மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைப் பிரச்னையை மையமாக வைத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் நிலை எடுத்துள்ளன.

கண்ணப்பன் சந்திப்பு: இந்த நிலையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வரும் முதல்வர் கருணாநிதியை, ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள்: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதிமுக ஒரு போதும் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.

கூட்டணியில் நீடிக்கும் நிர்பந்தம் காரணமாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு தனது நிலைப்பாட்டை மதிமுக பொதுச் செயலர் வைகோ இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அதிமுக - மதிமுக இடையே நிலவும் இந்த மறைமுக அரசியல் கருத்து வேறுபாடு ஓசையின்றித் தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் பகிரங்க அழைப்பை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே அதிமுகவும் கொண்டுள்ளதாக சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

குலாம் நபி ஆசாத்: 2001-ம் ஆண்டு பொதுத் தேர்தலை அதிமுக - காங்கிரஸ் இணைந்து சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் குலாம் நபி ஆசாத், இப்போது அதே பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வேளை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேரும் நிலையில், அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க. நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

அரசியல் முக்கியத்துவம்: ""கடந்த காலத்தில் வேலூர் சிறை வாயிலில் காத்திருந்து வைகோவை சென்று சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால், பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் முதல்வரைச் சந்தித்து நலம் விசாரிக்கும் சாதாரண பண்புகூட வைகோவுக்கு இல்லை'' என்று அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அரசியல் பின்னணியில் வைகோவின் ஒப்புதலுடன், மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

நலம் மட்டுமே...: ""ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் 50 ஆண்டுகள் அவருடன் பழகியவன் என்ற முறையிலும் முதல்வரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்வர் விளக்கினார்'' என்றார் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன்.

Saturday, February 21, 2009

அதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி

தில்லியிலிருந்து ரேணு மிட்டல்

அரசியல் என்பது சாத்தியமாவதைச் செய்யும் கலை.அரசியலில் நிரந்த பகைவர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. தெற்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எதையாவது சுட்டிக் காட்டுகின்றன என்றால் அது அரசியல் கூட்டணிகளில் எத்தகைய பிரிவும் கூட்டும் சாத்தியங்கள்தான்-அதுவும் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்- என்பதைத்தான்.

ஜெயலலிதாவின் அதிமுகவோடு உறவைப் புதுப்பித்துக் கொள்ள சோனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது

ஜெயலலிதா காங்கிரசிற்கு பகிரங்கமாக விடுத்த அழைப்பு, ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்தான் என்று கட்சியில் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.

இரண்டு கட்சிகளுக்குமிடையே கூட்டணி என்ற யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்க நம்பிக்கைக்குரிய ஒருவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா அந்த யோசனையை வரவேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரசுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனக்கு ஏதும் தயக்கமில்லை என பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் முன் வந்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துள்ளது. திமுகவுடன் கூட்டைத் தொடர்வது தற்கொலைக்குச் சமம் என்றும், குறிப்பாக கருணாநிதியின் உடல் நலம் பலவீனமடைந்து வரும் நிலையில் அவரால் தேர்தல் பிரசாரத்திற்கு வர இயலாத சூழ்நிலை இருப்பதையும் எடுத்துச் சொல்லி சிதம்பரம் சோனியாவை இந்த யோச்னைக்கு சம்மதிக்க வைத்து விட்டார் எனச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து மூப்பனார் வெளியேறி, தனிக்கட்சி கண்ட போது மூப்பனாருடன் சிதம்பரமும் வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றூ நிலைமை மாறிவிட்டது.

குலாம் நபி ஆசாத்தை தமிழ்நாடு காங்கிரசின் விவகாரங்களைக் கவனிக்கும் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவிரும்புவதன் இன்னொரு அடையாளமாகக் கொள்ளலாம். அதிமுகவுடன் அவருக்கு நல்ல உறவு உண்டு. நாடாளுமன்றமென்றால் மூன்றிலொரு பங்கு இடம் உங்களுக்கு, இரண்டில் மூன்று பங்கு இடம் எங்களுக்கு; அதே போல சட்டமன்றம் என்றால் மூன்றிலொரு பங்கு இடம் எங்களுக்கு இரண்டில் மூன்று பங்கு இடம் உங்களுக்கு; என்ற பார்முலாவை உருவாக்கி அதை எம்.ஜி.ஆரை ஏற்கச் செய்தவர் அவர்.

ஜெயலலிதாவின் பேச்சு பற்றி கருத்துக்கூறுமாறு கேட்டபோது " இன்று " திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறிய அவர் என்னவானலும் சரி, கூட்டணி தொடரும் என்று சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது

கூட்டணி மாறுவது பற்றி காங்கிரஸ் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது ஜெயலலிதா அதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான மறைமுக நிர்பந்தத்தை ஏற்படுத்துவது, ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் திமுகவில் குழப்பதை ஏற்படுத்துவது என்பதோடு, காங்-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவது ஆகியவைதான் அவர் பகிரங்கமாகக் காங்கிரசிற்கு அழைப்பு விடக் காரணம்

அதிமுக அதிக இடங்களைப் பெற்றால், தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்க அதன ஆதரவு தேவைப்பட்டால், அப்போது அதை வழிக்குக் கொண்டுவருவது கஷ்டம் என்பதால் காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சிதம்பரம் போன்றவர்களுக்கு சரியான கூட்டணி அமையாவிட்டால் தன் எம்.பி. சீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கவலை.

கடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை அது 18 இடங்களைக் கேட்கிறது. அது கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதாலும் அது அணி மாற நினைக்கிறது.

நன்றி: ரெடீஃப்.காம்

ரெடீஃப் செய்தியைப் பார்க்க:
http://www.rediff.com/news/2009/feb/20tn-cong-wants-an-a

Friday, February 20, 2009

அஞ்சாநெஞ்சரா உங்கள் எம்.பி ?


அரசியலுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள உறவு புலிகளுக்கும் சயனைட் குப்பிகளுக்கும் உள்ள உறவைப் போல. ஒருவேளை தேவைப்பட்டால் இருக்கட்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் அவர்களைத் தங்களுடனேயே வைத்திருக்கின்றன.

முன்காலத்தில் அஞ்சா நெஞ்சன் என்றால் பகத் சிங். இப்போது அஞ்சாநெஞ்சன் அழகிரி. முன்பு மாவீரன் சுபாஷ் சந்திர போஸ். இன்று மாவீரர்கள் நம் வக்கீல்கள்

'யார் ஜெயிக்கிறானோ அவனை நிப்பாட்டு' என்று ஜெயிக்கிற வெறியில் அஞ்சாநெஞ்சர்களையும் மாவீரர்களையும் அரசியல் கட்சிகள் வேட்பாளராகக் களம் இறக்குகின்றன.

உங்கள் தொகுதியில் நிற்பவர் அஞ்சாநெஞ்சனா? அவரது கிரிமினல் ரெகார்ட் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலா?

ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தகவல் உங்கள் கைக்கு வந்து விடும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் NC <உங்கள் பின்கோடு> என்று டைப் செய்து, 567678 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும்.

அல்லது http://www.nocriminals.org/. என்ற இணையதளத்தில் போய் பெயர் தொகுதி கொடுத்தால் தகவல்களைக் காணலாம்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் அது இப்போதுள்ள MP கள் குறித்த தகவல்களைத் தருகிறது

நான் இந்த இணையதளத்திற்குச் சென்று ஒரு Check செய்து பார்த்தேன். தமிழக எம்.பிக்களில் செகுப்புசாமி (திமுக) ஈ.வி.கே.எஸ், இளங்கோவன் (காங்) எம்.அப்பாதுரை (சிபி.ஐ)தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) எஸ்.ரகுபதி (திமுக) எல்.கணேசன் (மதிமுக) கே.வெங்கடபதி (திமுக) ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக இணையதளம் தெரிவிக்கிறது.

ரகுபதி, இளங்கோவன், வெங்கடபதி ஆகியோர் துணை அமைச்சர்களாக இருக்கிறார்கள்!

மாலன்

Wednesday, February 18, 2009

"கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !"

அமர்க்களம் ஆறு-உ.பி/3
19.2.2009

முலாயம் சிங் யாதவின் கூற்று விஷமத்தனமானது, வதந்தியைப் பரப்புவதே அதன் நோக்கம் என்று பாஜக தெரிவித்துள்ளது. " சமாஜ்வாதியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை." என்று பா.ஜ.க.துணைத் தலைவர் சையத் அபாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இது போன்ற அறிக்கைகள் வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவை. சமாஜ்வாதிக் கட்சி, குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இழந்து விட்ட தனது முக்கியத்துவத்தை திரும்பப் பெற நினைக்கிறது என்றார் அவர்

பாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் காங்கிரசுடன் கூடுதலாகப் பேரம் பேசலாம் என்ற சமாஜ்வாதியின் நோக்கத்தை பாஜக முளையிலேயே கிள்ளிவிட்டது பாஜக.

முன்னர் வந்த செய்தி

தனது கட்சி பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று (புதன்கிழமை 18/2/09) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக் கட்சியின் நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்ற முலாயம் சிங், அந்த நிபந்தனைகள் என்ன என்று தெரிவிக்கவில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியையும், மூத்த தலைவர் வாஜ்பாயையும் இது குறித்துப் பேச சந்தித்ததாகத் தெரிவித்தார்.

காங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்க்குமிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி நிலவும் வேளையில் முலாயம் இவ்வாறு கூறியிருப்பது கவனத்திற்குரியதாகிறது

தமிழகத்தில் அதிமுக முந்துகிற்து?






வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்களுக்கு அடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே பெரும் பங்கு உண்டு

2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது

திமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு

விஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள் காரணமாக இருப்பார்கள்

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது.
நன்றி ibnlive.in

Tuesday, February 17, 2009

வலைப்பதிவிற்கு வந்திருக்கிறார் அத்வானி

இந்தத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் அத்வானியை வலைப்பதிவிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர் முதல் பதிவு தொழில்நுட்பம் தேர்தல் பிரசாரத்தில்
எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுவைபட விவரிக்கிறது.

அத்வானி சொல்வது போல் பிரசாரத்தில் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதா?

உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் எழுதுங்கள்



தேர்தல் பணி: துண்டுப் பிரசுரத்திலிருந்து இணையம் வரை

என் வலைப்பதிற்கு வருகை தந்துள்ள நண்பர்களே, வருக. இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ள என் இளம் சகாக்கள், வலைப்பதிவில்லாத ஒரு
அரசியல் இணைய துறை (portal) கையெழுத்தில்லாத (மொட்டைக்) கடிதம் போல எனச் சொல்கிறார்கள். அவர்கள் கூற்றிலுள்ள மறுக்கவியலாத நியாயத்தை
நான் உடனே ஏற்றுக் கொண்டேன்.


இணையத்தை அரசியல் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, குறிப்பாக தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற
யோசனை எனக்கு உற்சாகமளிக்கிறது.1952ல் நடைபெற்ற முதல் தேர்தலிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பிரசாரகனாகவோ, வேட்பாளராகவோ பங்கேற்கும் ஒரு நல்வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், நான், தகவல் பரிமாற்றத்திற்கான கருவிகள் எப்படி பரிணாம வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். தகவல் பரிமாற்றத்தைப்
பொறுத்தவரை நான் தொழில்நுட்பத்தின் பக்தனுமல்ல, அதை மறுப்பவனுமல்ல (technology-agnostic). இந்த விஷயத்தில் என் தத்துவம் ரொம்ப சிம்பிள்: பயன்படுகிறதா அது வரவேற்கத்தக்கது. அறுபதாண்டுகளுக்கு மேல் நீளும் என் அரசியல் வாழ்வில், ஒவ்வொரு புதிய தகவல் தொழில்நுட்பத்தையும்-ஆதிகாலத்து கேசியோ டிஜிட்டல் டைரி முதல் ஐ-பாட், ஐ-போன் வரை- நான் உற்சாகத்துடன் அரவணைத்துக் கொண்டிருக்கிறேன்.

முதல் பொதுத் தேர்தலின் போது 25 வயது இளம் அரசியல் ஆர்வலனாக, நான் பாரதிய ஜன சங் கட்சிக்கு ராஜஸ்தானில் பிரசாரம் செய்தேன். அதற்கு முந்தைய ஆண்டுதான் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அந்தக் கட்சியை ஆரம்பித்திருந்தார்.

அப்போது ஒரு துண்டுப் பிரசுரம் அச்சிடுவது கூட ஓர் புதுமையாக இருந்தது. ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது.

கோட்புட்லி என்ற இடத்தில் தேர்தல் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்திருந்தது. அந்தப் பகுதியில் இருந்த
பிரசினைகளை அறிந்து கொண்டு, எங்கள் கட்சி வேட்பாளாரைத் தேர்ந்தெடுத்தால் கட்சி அந்தப் பிரசினைகளுக்கு எப்படியெல்லாம் தீர்வு காணும்
என்பதை விளக்கி ஒரு பிரசுரம் தயார் செய்து அச்சிட்டுக் கொண்டேன். ராஜஸ்தானிலிருந்து கட்சியின் தேர்தல் அறிக்கையின் பிரதிகளையும் எடுத்துக் கொண்டேன்

வாக்குப் பதிவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னாதாகத் தொகுதிக்குப் போய்விட்டேன். தேர்தல் முடியும்வரை அங்கேயே தங்கவும் முடிவு செய்திருந்தேன்.

ஜெய்ப்பூரிலிருந்து நான் கொண்டுவந்திருந்த பிரசுரங்களை இறக்கிக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த எங்கள்
வேட்பாளர் என்னை விநோதமாகப் பார்ப்பதைக் கவனித்தேன். அப்போது அவர் வயதில் பாதிதான் எனக்கு. ஆனால அவர் என்னை அத்வானிஜி என்று என்னை மரியாதையோடு அழைத்துச் சொன்னார்: "இவற்றையெல்லாம் நானும் என்
தொண்டர்களும் தொகுதியில் விநியோகிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? ஆனால் அதற்கான தேவை என்ன இருக்கிறது. இந்த அறிக்கை, இந்த பிரசுரம் இவற்றால் எல்லாம் நம் பிரசார உத்திக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

இதை விநியோகிக்க நிறைய நேரம் செலவிட வேண்டும். நீங்கள் வற்புறுத்தினால் செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கு விழ இருக்கும் வாக்குகளை விட ஒரு ஓட்டுக் கூட கூடுதலாகக் கிடைக்காது" என்றார்.

"ஒரு விஷயம் சொல்லட்டுமா அத்வானிஜி" என்று கேட்டுவிட்டு அவர் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் என்னை யாரும் தோற்கடிக்க முடியாது. இது குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. இங்கு
போட்டியிடும் வேட்பாளர்களில் நான் ஒருவன் மட்டும்தான் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவன்." அவர் அடுத்துச் சொன்ன வாக்கியம் இந்தியாவில் தேர்தல்களின் யதார்த்தம் குறித்து என் கண்களைத் திறந்தது. முதலில், வாக்குச் சாவடிக்குப் போகும் எந்தவொரு குஜ்ஜரும் எனக்குத்தான் வாக்களிக்கப் போகிறான். ஏனெனில் நான் ஒரு குஜ்ஜர். இரண்டாவதாக குஜ்ஜர் அல்லாதவர்களில்
பெரும்பான்மையானவர்களும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் அநேகமாக நான்தான் ஜெயிப்பேன் என அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தோற்கப் போகிற வேட்பாளருக்கு வாக்களித்து தங்கள் ஓட்டை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்" என்றார்.

பல ஆண்டுகளாக, அநேகமாக 1980 இறுதிவரை, நாளிதழ்கள், பத்திரிகைகள், அகில இந்திய வானொலி, இவைதான் அரசியல் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இருந்த சாதனங்கள். அரசிற்கு சொந்தமானவை அல்ல என்பதால், அச்சு
ஊடகங்கள், சுதந்திரமானவையாகவும், காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுபவையாகவும் இருந்தன. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வானொலியை காங்கிரஸ் கட்சி கூச்சநாச்சமில்லாமல் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்தது.எனக்கு
நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் 1982ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வானொலி என்.டி.ராமராவின் பெயரைச் சொல்லவே இல்லை. ஆனால் அவர் அந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அவரைப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள கவர்னர் அழைத்த போதுதான்
மக்கள் முதன்முதலாக வானொலியில் என்.டி.ராமராவ் பெயரைக் கேட்டார்கள்.

இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்காலக் கொடுங்கோல் ஆட்சி வீழ்ந்த பிறகு ஏற்பட்ட ஜனதாக் கட்சி ஆட்சியில் நான் செய்தி ஒலிப்பரப்புத் துறை அமைச்சராக இருந்த போது அரசு ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் மனோபாவத்தையும், அமைப்பையும் மாற்றும் பெரும் பொறுப்பை நான் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் கருத்தை மக்கள் முன் வைக்க வானொலியில்நேரம் ஒதுக்குவது என நான் எடுத்த முடிவு பெரிதும் வரவேற்கப்பட்டது. எனக்குப்
பெருமிதம் ஏற்படுத்திய முடிவு அது.


இணையத்திற்குப் பல சிறப்புகள் உண்டு.அவற்றில் முக்கியமானது அது அரசுக்கோ, அல்லது எந்தவொரு தனியார் ஊடகக் குழுமத்திற்கோ சொந்தமானதல்ல என்பதாகத்தானிருக்க முடியும்.அது எல்லோருக்கும் பொதுவானது. அந்தவகையில், இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த தகவல் பரிமாற்ற சாதனங்களிலேயே இதுதான் ஜனநாயகமானது என்ற பெருமைக்குரியது. அரசியில் செய்திகளைத் தணிக்கை செய்வது என்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவும் முடியாதது (கம்யூனிஸ்ட் நாடுகள், சர்வாதிகார அரசுகள் நீங்கலாக)

1952ல் துவங்கிய இந்தியத் தேர்தல்கள் வெகுவாக மாறிவிட்டன.இந்திய
வாக்காளர்கள், ஒட்டு மொத்தமாகவும் சரி, தனியாகவும் சரி, முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டுக்கு உள்ள சக்தி பற்றி ஜனநாயக ரீதியில் ஏற்பட்டிருக்கும் பிரஞ்கையும், விழிப்புணர்வும் அளவிடமுடியாத வண்ணம் வளர்ந்திருக்கின்றன.
எந்த ஒரு அரசியல்கட்சியும், எந்த ஒரு வேட்பாளரும் அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட முடியாது. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை வாக்காளர்கள் அதன் செயல் திறனைக் கொண்டு அளவிடுகிறார்கள். ஆட்சியைப் பிடிக்க எண்ணுபவர்களை அவர்களது சொல்வது தங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருந்திப் போகிறதா என எடை போடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், கோட்புட்லியில் எங்கள் வேட்பாளர், அச்சிட்ட பிரசுரம் எல்லாம் தேவையில்லை என்று சொன்ன அந்த நாட்களை விட, இன்று, தேர்தல் பிரசார வெளியீடுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியத்துவம்
பெற்றிருக்கிறது

கையால் ஈய எழுத்துக்களை அடுக்கிச் சிறிய அச்சகங்களில் (இவை இன்று அநேகமாக மறைந்து விட்டன) அச்சிடும் துண்டுப் பிரசுரங்களிலிருந்து என் சொந்தத் தளத்தில் வலைப்பதிவு எழுதுவதுவரை நானும் தேர்தல் பிரசாரத்திற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வெகு தூரம் வந்து விட்டேன்.

என் முதல் வலைப்பதிவைப் படிக்க உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டதற்கு நன்றி. விரைவிலேயே இன்னொரு பதிவோடு வருவேன்.
அதுவரை நல்வாழ்த்துகள்.


அத்வானியின் வலைப்பதிவுகளைப் படிக்க:

http://blog.lkadvani.in/