Showing posts with label உண்ணாவிரதம். Show all posts
Showing posts with label உண்ணாவிரதம். Show all posts

Tuesday, April 28, 2009

தினம் ஒரு தேர்தல் 11

கருணாநிதியின் உண்ணாவிரதம் - உங்கள் கருத்தென்ன?

சென்னை, ஏப். 27: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை காலை திடீரென காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். எனினும் போரை நிறுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி மதியத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

சென்னையில் அண்ணா அறிவாலயம் செல்ல வேண்டும் எனக் கூறி, திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட கருணாநிதி, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்குச் சென்று காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நம்பிக்கை நேற்று வரை இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், அதை ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறிவிட்டது.

இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்குமா என ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கண்விழித்திருந்து, எதிர்பார்த்திருந்தேன். ஆனால் போர் நிறுத்தத்தை அறிவிக்காததால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள, இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.

உண்ணாவிரதம் முடிந்தது: இந்நிலையில், கருணாநிதி மதியம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக திங்கள்கிழமை இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என அதில் முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதியம் சுமார் 12.30 மணி அளவில் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
(தினமணி 28.4.09)
ஆனால்--

Civilians in the so-called safety zone were relieved for a while as the annoncement by Colombo reached them through radio news broadcast Monday noon. But, their expectation was short lived as SLAF bombers flew over the safety zone carrying out air attacks hitting the southern part of the zone 4 times around 12:40 p.m., 2 times around 1:10 p.m. and 3 times around 3:45 p.m.

Tamilnet
அங்கே-
அரசு சார்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் திரித்துக் கூறப்பட்டவை. உண்மைக்கு மாறானவை என்று ராஜபட்ச கூறியுள்ளார்.

ராணுவம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் மூச்சுக் காற்று கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போர் நிறுத்தம் செய்து அவர்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க மாட்டோம் என்று இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பு அதிகாரி லட்சுமண் ஹுலகுலே தெரிவித்தார்.


தினமணி 28.4.09

திமுக கருணாநிதியின் உண்ணாவிரதம் வெற்றி வெற்றி எனக் குதூகலிக்கிறது. இது கபட நாடகம் என அதிமுக அணி சொல்கிறது. ஊடகங்கள் மெளனம் காக்கின்றன. உங்கள் கருத்தென்ன? அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

Saturday, March 07, 2009

ஜெயலலிதா உண்ணாவிரதம் எதற்காக?


மாலன்

இலங்கை உள்நாட்டுப் போர் அநேகமாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில் போர் நிறுத்தம் கோரி, வரும் திங்களன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் கூட 'இது காலம் கடந்த முயற்சி' என்று சொன்னாலும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.

காலம் கடந்த முயற்சி என்பதை ஜெயலலிதாவும் அறிந்திருப்பார்.அவர் இந்த உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர் நலனை மனதில் கொண்டல்ல, அதற்குப் பின்னால் வேறேதோ அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பதை ஊகிப்பது கடினமல்ல. இந்த அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி பகிரங்கமாகக் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகியிருப்பதைக் கவனிக்கும் போது, இந்த உண்ணாவிரதம் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றிற்காக இருக்கலாம் எனத் தோன்றுகிறது:

  • இலங்கைப் பிரசினை வாக்காளர்களிடையே, வெளியே புலப்படாத ஓர் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்து, தன் கட்சியின் வாக்ககுகளைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி

  • இலங்கைப் பிரசினையை ஓர் தேர்தல் பிரசினையாக மாறி விடாமல் அதை neutralize செய்யும் ஒரு தந்திரம். எல்லாக் கட்சிகளும் ஏறத்தாழ ஒரே நிலை எடுத்துவிட்டால், அதில் விவாதத்திற்கும், பிரசாரத்திற்கும் அதிக இடமில்லாது போய் விடும்.

  • காங்கிரசுடன் கூட்டணி இனி சாத்தியமில்லை என்ற நிலையில், பா.ம.கவைத் தன் அணிக்குக் கொண்டுவர வீசப்படும் தூண்டில்

  • அதிமுக+ மதிமுக+பா.ம.க+இந்தியக் கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் உள்ள கூட்டணி, 'இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டணி' என்ற தோற்றத்தை உருவாக்கி, இலங்கைத் தமிழர் பிரசினை காரணமாக திமுக-காங்கிரஸ் அரசுகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை கூட்டணிக்கு வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் உத்தி

இவற்றில் ஏதோ ஒன்றுதான் உண்ணாவிரத்தின் பின்னுள்ள நோக்கமாக இருக்க வேண்டும். நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..

உண்ணாவிரதத்தோடு உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவது சந்தேகத்தை வலுவாக்குகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டிய போது, அதை அங்கு எப்படி அனுப்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா. இப்போது காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.

எப்படி இருந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல், அடிக்கடி தன் நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது நடுநிலை வாக்காளர்களுக்கு அவர் மீதுள்ள நம்பகத்தன்மையை பலவீனமடையச் செய்யுமே அன்றி அவருக்கு அரசியல் ரீதியாக உதவாது.