Showing posts with label Elections 2009. Show all posts
Showing posts with label Elections 2009. Show all posts

Sunday, May 03, 2009

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?

தினம் ஒரு தேர்தல்-14
தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?
சென்னை, மே 2: நகரங்களில் டவுன் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது தேர்தல் விதிமுறை மீறிய செயலாக முடிவு செய்யப்பட்டால், மாநிலத்தில் தேர்தலையே ஒத்திவைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு டவுன் பஸ்களில் எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் என்ற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இவை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) முதல் கைவிடப்பட்டன. சாதாரண பஸ்களில் வாங்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என்ற அளவில் மட்டும் இப்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் கட்டணம் குறைக்கப்பட்டது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இருந்தாலும், சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கைதான் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, கட்டணம் ஏதும் குறைக்கப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
கட்டணக் குறைப்பு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஸ் கட்டணக் குறைப்பு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனப் புகார் வந்திருப்பது பற்றி நேரில் விளக்கம் தருவதற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் வருமாறு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
சாதாரண அலுவலருக்கு தண்டனை: சாதாரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் அலுவலர் யாரேனும் தவறு செய்தால் அவரைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யவோ, இடமாறுதல் செய்யவோ மாநில அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையரகம் பரிந்துரை செய்யும். அதை மாநில அரசு செயல்படுத்தும்.
கீழ்நிலையில் உள்ள ஒரு அதிகாரி தவறு செய்தால் அவரைத் தண்டிக்கிறது தேர்தல் ஆணையம். இப்போது மாநில அரசே தவறு செய்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒரு தொகுதியில் முறைகேடு ஏதும் நடப்பதாகச் சந்தேகம் வந்தால் அதுகுறித்து தேர்தல் பார்வையாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்தான் தேர்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருப்பவர்கள் என ஆணையம் கூறியுள்ளது.
அந்த வகையில் முறைகேடுகள் தங்கள் கவனத்துக்கு வந்தால், தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அவர் தகவல் தரலாம்.
தங்கள் கண்காணிப்பில் இருக்கும் தொகுதிக்குள் திடீரென பஸ் கட்டணம் குறைந்துள்ளது பற்றி சில தேர்தல் பார்வையாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரகத்துக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
மாநில அளவில் பெரிய விதிமீறல்கள் நடந்ததாகத் தேர்தல் ஆணையம் கருதிய நிகழ்வுகளில் முன்பு பிற மாநிலங்களில் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில்கூட கும்மிடிப்பூண்டி, மதுரை இடைத்தேர்தல்களின் போது அந்தப் பகுதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
1993-ல் தேர்தல் விதிமீறல் புகாரை அடுத்து ராணிப்பேட்டை இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சிறிய அளவில் முறைகேடு என முடிவு செய்யப்பட்டபோது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநில அளவில் விதிமீறல் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யுமானால், மொத்தமாக மாநிலம் முழுக்க தேர்தலை ஒத்திவைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைய பிரச்னையைப் பொருத்தவரை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வராத வகையில் கவனமாகத்தான் தாங்கள் செயல்பட்டிருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு ஆணை பிறப்பித்து கட்டணம் குறைக்கப்படவில்லை என்பதால் இது விதிமீறலில் வராது என்று அவர்கள் கூறுகின்றனர்.
புதிய வழித்தடங்கள் துவக்கி இருந்தாலோ, புதிய பஸ்கள் விட்டிருந்தாலோதான் விதிமீறலாகக் கருதப்படும். இது விதிமீறலில் வராது என்கின்றனர்.
மீண்டும் அதே நிலைமை: இப்போதைக்கு கடந்த வாரம் இருந்த அதே நிலைமையை மீண்டும் செயல்படுத்துமாறு வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று அரசு வட்டாரங்கள் நம்புகின்றன.
அவ்வாறு கூறினால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தென்ன? இடப்புறப் பெட்டியில் வாக்களியுங்கள்

Friday, May 01, 2009

தினம் ஒரு தேர்தல் -13

ஓரம் போ! தேர்தல் பஸ் வருது!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் கட்டணத்தை திடீர் எனக் குறைத்துள்ளது. அதாவது டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., எம் சர்வீஸ் என எந்த பஸ்ஸில் பயணம் செய்தாலும் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2 மட்டுமே. இதற்கு முன்னர் முறையே ரூ. 5, ரூ.3, ரூ.2.50 என வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடத்துநர்கள்

இந்தக் கட்டணக் குறைப்பால் ஒவ்வொரு முறையும் டிரிப் கலெக்ஷன் ரு. 1000, ரூ. 800, ரூ. 700 என குறைகிறது. இந்த தொகை பணிமனைக்கு பணிமனை வேறுபடும். தோராயமாக நாள் ஒன்றுக்கு மொத்த வசூலில் சென்னை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்படும். எங்களுக்கும் இதனால் தினப்படி குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கியை கவர, எங்கள் பையில் கை வைப்பதா? .

மருத்துவர் ராமதாஸ்:

கடந்த மூன்று ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறி சாதாரணக் கட்டணத்தைவிட மூன்று நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்தி மக்களை வருத்தி வந்தது திமுக அரசு.

இன்றைக்கு திடீரென்று அனைத்து வகை பஸ்களுக்கும் ஒரே வகையான கட்டணம் என்று கட்டணக் குறைப்பைச் சத்தமின்றி செயல்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.

தேர்தலுக்காகக் கட்டணத்தைக் குறைத்திருப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு உயர்த்திவிடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியைத் தடுத்து நிறுத்தாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் திமுக அரசைக் தண்டிக்க முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்::

சட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் பஸ் கட்டண உயர்வை நியாயப்படுத்தி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து வந்தது திமுக அரசு. ஆனால் தேர்தல் தோல்வி பயம் காரணமாக புதன்கிழமை இரவிலிருந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது. திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் காலத்தில் பஸ் கட்டணத்தைக் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கட்டணத்தை உயர்த்திவிட்டதையும் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நரேஷ் குப்தா:

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக ஃபேக்ஸ், தொலைபேசிகளில் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண குறைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை.

நீங்கள்?:
இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

Sunday, March 29, 2009

பாமகவின் முன் உள்ள சவால்

பலர் நினப்பது போல் இல்லாமல் சவால் நிறைந்த தொகுதிகளே பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள். ஸ்ரீபெரும்புதூர் மறுசீரமைப்பிற்குப் பின் உருமாற்றம் பெற்று சென்னையின் புறநகர் தொகுதியாக மாற்றம் கண்டிருக்கிறது.சிதம்பரமும் பாதிக்குப் பாதி என்ற அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. தர்மபுரி, அரக்கோணம் அதிக சிரமம் இராது. ஒரு Quick look

ஸ்ரீபெரும்புதூர்:
முன்பு இது கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரின் அருகமைந்த 'கொல்லைப்புற' (Backyard) நாடாளுமன்றத் தொகுதியாக விளங்கியது.
இன்று இது மதுரவாயல், அம்பத்தூர், .ஆலந்தூர்,.ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம். ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இதில் மதுரவாயில்,அம்பத்தூர், பல்லாவரம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள். தாம்பரம் சட்டமன்றத் தொகுதியும் சில பகுதிகளை வேளச்சேரி தொகுதியிடம் இழந்திருக்கிறது. எனவே வெற்றி வாய்ப்பைக் கணிக்க பழைய கணக்குகள் உதவாது. ஆனால் சில நுண் ஆய்வுகள் (Micro analysis) மூலம் சில ஊகங்களை மேற்கொள்ளலாம்.

2006 சட்டமன்றத் தேர்தலின்போது வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கியிருந்த அம்பத்தூர், மதுரவாயில் பகுதிகளில் திமுக கணிசமான வாக்குகள் பெற்றது என திமுகவினர் சொல்கிறார்கள். புதிதாக உருவாகியுள்ள பல்லாவரம் ஆலந்தூர் தொகுதிக்குள் இருந்தது.ஆலந்தூரில் 2001ல் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்
ஆர்.எம்.வீரப்பனை வீழ்த்திய அதிமுக 2006ல் சுமார் 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது.(அதாவது இங்கு கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன) (மாற்றத்திற்குட்படாத) தாம்பரத்தில்.
2001, 2006 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வென்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 2001ல் அதிமுக அணியின் ஆதரவிலும், 2006ல் திமுக அணியின் ஆதரவிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வெற்றி பெற்றார் (அதாவது இங்கும் கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத்
தீர்மானிக்கின்றன)

சுருக்கமாகச் சொன்னால் இது திமுகவிற்கு சாதகமான தொகுதிதான். ஆனால் இதன் சில பகுதிகளில் கூட்டணி மாஜிக் வேலை செய்யும்.

ஆலந்தூர், தாம்பரம் ஆகியவை தென் சென்னைத் தொகுதியில் இருந்ததால், தென் சென்னை எம்.பி.யான டி.ஆர்.பாலு அந்தப் பகுதிகளில் தன்வசமிருந்த அமைச்சகத்தின் மூலம் நிறைய வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார். ஆனால் வில்லிவாக்கம் வட சென்ன்னையில் இருந்ததால் அவர் அந்தப் பகுதிகளில் இதே அளவு கவனம் செலுத்தினார் எனச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் திமுக சார்பில் களமிறங்கினால் போட்டி கடினமாக இருக்கக் கூடும்.

இது நகர் சார்ந்த தொகுதியாக இருப்பதால், ஜாதி செல்வாக்கு பெருமளவில் வேலை செய்யாது. பணம் வேலை செய்யலாம். ஆனாலும் நடுத்தர வர்கத்தின், குறிப்பாக தொழிலாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை

சிதம்பரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் இன்று, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய இரண்டு தொகுதிகளும், கடலூர் லோக்சபா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மங்களூர் தொகுதி சில மாற்றங்களுடன் திட்டக்குடி என்ற புதிய சட்டமன்றத் தொகுதியாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே சிதம்பரம் தொகுதியில் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள்தான் (சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி) இருக்கின்றன. அவற்றோடு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்பு இருந்து இப்போதும் நீடிக்கிற மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இப்போது (சிதம்பரம், புவனகிரி) அதிமுக வசம் இருக்கின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகளின் துணையில்லாமல் போட்டியிட்டு வெற்றி கண்ட தொகுதிகள் இவை என்பதால் அதற்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்போது பாமகவும் அதனுடன் இணைந்து கொள்வதால் அந்த அணியின் வலு அதிகரித்திருக்கிறது. இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகியவை புதிதாக உருவான தொகுதிகள்.

1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாமக தொடர்ந்து வெற்ற் பெற்று வந்திருக்கிறது. மூன்று முறையும் 3லட்சம் -3.5லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது (பதிவான வாக்குகளில் 45-47%) இங்கு இரண்டு முறை
திருமாவளவன் போட்டியிட்டு இரு முறையும் தோல்வி கண்டிருக்கிறார். 1999ல் சுமார் 1.25 லட்சம் வாக்குகளில் தோற்றார். 2004ல் 87 ஆயிரம் வாக்குகளில் தோற்றார்.1999ல் அதிமுக ஆதரவோடு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார் என்பது கவனிக்கத் தக்கது.

இந்த முறையும் போட்டி திருமாவிற்கும் பாமகவிற்குமிடையேதான் இருக்கும். தோற்றத்தில் மாற்றம் கண்டுள்ள தொகுதி எப்படித் தீர்ப்பளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்


அரக்கோணம்

அரக்கோணமும் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் கணிக்கக்கூடிய அளவிற்கான மாற்றங்கள்தான். திருத்தணி காட்பாடி ஆகிய இரண்டு தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.இதில் திருத்தணி அதிமுக வசம் உள்ளது.

காட்பாடி துரைமுருகனின் சட்டமன்றத் தொகுதி.. கெளரவப் பிரசினையாக எடுத்துக் கொண்டு பாமகவிற்கு எதிரான போட்டியைத் தீவீரப்படுத்தலாம்

ரயில்வே துணை அமைச்சர் வேலு கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருவேளை திமுக இந்த முறை ஜகத்ரட்சகனைக் களமிறக்கக் கூடும்

மற்ற 3 தொகுதிகள் நாளை....

Thursday, March 26, 2009

பாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

எதிர்பார்த்தபடியே, பாமக அணிமாறி விட்டது. ஆனால் இந்த முடிவை அறிவிக்க அது மேற்கொண்ட அணுகு முறை நயமாக இருந்தது. 1952ல் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகாண அண்ணா கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியது போல, பாமக தனது பொதுக் குழுவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.கை தூக்குவது அல்லது கரவொலி எழுப்புவது என்ற முறையின் மூலம் அல்லாது வாக்குச் சீட்டி வழியே தங்கள் கருத்தைத் தெரிவிக்க செய்து முடிவு செய்திருக்கிறது.

இந்தத் 'தேர்தலை' நடத்த, கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு மூத்த பத்திரிகையாளரை (தினமணியின் முன்னாள் தலமை செய்தி ஆசிரியர் ராயப்பா) தேர்தல் அதிகாரியாகவும், சில முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களை தேர்தல் பார்வையாளராகவும் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. 'இறுதி முடிவு எடுக்கிற அதிகாரத்தை தலைவருக்கே விட்டுவிடுகிற' உள்கட்சி ஜனநாயகமும், 'கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக்
கட்டுப்படுவோம்' என்கிற தொண்டர் விசுவாசமும் நிலவுகிற இன்றைய அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வரவேற்கத்தக்கவை.

டாக்டர் ராமதாசின் முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்கு (dissent) அவர் இடமளித்திருக்கிறார் என்பதும், திமுக கூட்டணியை அவர் கட்சியில் விரும்பும் சிலர் இருக்கிறார்கள் என்பதை பலிரங்கமாக உலகறியச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கவை. அவர் கூட்டணி விஷயத்தில் நிதானமிழக்காமல் இருந்ததைப் போல கருணாநிதி இந்த மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.

இரு தினங்களுக்கு முன் 'கள்ளத் தோணி ஏறிப் போய் சண்டை போடுவதுதானே? யார் தடுக்கிறார்கள்' என்ற எரிச்சல் வெளிப்படும் அவரது அறிக்கை அதைத்தான் காட்டுகிறது.

பாமக ஒரு அணியில் இருப்பது அல்லது அதிலிருந்து மாறுவது என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கேள்வியை விளங்கிக் கொள்ள சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1998ம் ஆண்டு அது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக அணி 28 இடங்களைப் பெற்றது. திமுக அணி 10 இடங்கலைப் பெற்றது. 1999ம் ஆண்டு பாமக திமுக அணிக்கு மாறியது. அந்தத் தேர்தலில் திமுக அணி 25 இடங்களைப் பெற்றது.2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அது அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது அது திமுக அணிக்கு மாறியது தொடர்ந்தது அப்போது அந்தக் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி
கண்டது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அணியிலேயே அது தொடர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது.

அதாவது பாமக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி அதிக இடங்களைப் பெறுகிறது. 'ராசியான டாக்டர்' என்று சில அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கிறேன். கைராசியா, காக்கை உட்கார விழுந்த பனம்பழமா என்பதைக் கண்டு பிடிக்க சில கணக்குகளைப் பார்க்க வேண்டும்


1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்
பெறாமல் பாமக 32 வேட்பாளர்களைக் களமிறக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. மறுபடிய்ம் 1991ல் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை 31 வேட்பாளர்கள். ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மறுபடியும் 5.14 சதவீத வாக்குகள் வாங்கியது. 1991 தேர்தல் ராஜீவ் படுகொலை அலை வீசிய தேர்தல். அப்போதும் அதன் வாக்கு சதவீதம் குறையவில்லை

இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி 5லிருந்து 6 சதவீதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

1996 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அது கூட்டணி பரிசோதனைகளை மேற்கொண்டது. திமுக அதிமுக இவற்றைத் தவிர்த்து வாழ்ப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய திவாரி காங்கிரஸ் என்ற காங்கிரசிலிருந்து
உடைந்த ஒரு சிறு பிரிவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அது தற்கொலை முயற்சியாக முடிந்தது.

வன்னியர்களது வாக்குகள் எல்லாம் அந்த அணிக்கே வந்து விடும் என்ற வாதம் பொய்த்து அது அந்த முறை 2 சதவீத வாக்குகள்தான் பெற்றது. கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. (எனவே ராசித் தத்துவங்கள் முற்றிலும் சரியல்ல.)

தமிழகத்தில் கழகங்களின் துணையில்லாமல் களம் இறங்குவது ஆபத்தில் முடியும் என்று பாடம் கற்றுக் கொண்டதால் அன்றிலிருந்து ஏதேனும் ஒரு கழகத்துடன் அது கூட்டணி காண்கிறது. அப்போதுதான் அதனால்
அங்கீகாரத்திற்குத் தேவைப்படும் 6 சதவீத அளவை எட்ட முடியும். அதை 1998, 1999, 2004ல் பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்(6.5%, 8.21% 6.7%) இந்த வாக்கு விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் அது அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் (மாயாவதியின் BSP அதற்காகத்தான் இந்தியா முழுக்கப் போட்டியிடுகிறது) அப்படிப் போட்டியிட்டாலும் அது அந்த இடங்களில் வெற்றி பெற முடியாது. வாக்கு
விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அது 1999 தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டது ஆனால் 5 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. (ஆனால் அது அதன் வாக்கு விகிதத்தை அதிகரித்துக் கொண்டது) அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் அதிக இடங்களைக் கோருகிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் அது வென்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் அளிக்க மறுக்கின்றன. கூட்டணி மூலம் அதிகாரத்தை ருசி பார்த்து விட்டதால் பாமக கூட்டணியை விட்டு விடவும் தயங்குகிறது. அல்லது நிறையத்
தொகுதிகளில் போடியிட அதனிடம் போதிய பொருளாதார பலம் இல்லாமல் இருக்கலாம்.

பாமக இருக்கும் கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால் பாமக அதே அளவு இடங்களைத்தான் (4 முதல் 6 வரை) பெற முடியும். அதாவது தமிழகத்தின் வட, வட்மேற்குப் பகுதிகளில் உள்ள பாமகவின் செல்வாக்கு பெரிய கட்சிகளுக்கு அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் பாமக ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதால் அதனால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.

சரி. பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் பெரிய கட்சிகளுக்கு என்ன லாபம்?

1. முதலில் சொன்னபடி அது 'வெற்றிக் கூட்டணி' என்ற எண்ணம் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மனங்களில் விதைக்கப்படுகிறது. அது அவர்களுக்கு ஓர் மன எழுட்சியைத் தருகிறது. 'நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வெற்றியை 'உணர' (கலாமின் வார்த்தைகளில் சொன்னால் கனவு காண) வேண்டும் என்பது ஒரு நிர்வாக இயல் தத்துவன்.

2.முன்னர் பார்த்தபடி பாமகவின் வாக்கு வங்கி 5-6 சதவீதம். இது மற்ற கட்ட்சியுடன் சேரும் போது வெற்றி வாய்ப்பு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம்:

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மோதின. தனித் தொகுதி என்றாலும் வன்னியர்கள் நிறைந்த தொகுதி. 1998ல் அதிமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகரத்தினம் என்பவர்தான் 1998லும் திமுக வேட்பாளாராகப் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார். அதிமுக வேட்பாளர் வென்றார். 1999ல் பாமக திமுக அணிக்குப் போனது. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. (சதவீதக் கணக்கெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. தகவல் வேண்டுவோர் தனிப்பட மின்னஞ்சல் அனுப்பலாம்)

ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கூட்டணியை மற்றூம் பொறுத்ததல்ல. வேட்பாளர், அலை, தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பிரசினைகள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. ஆனால் கூட்டணிக் கணக்குகளும் அவசியம்.

பாமகவின் கூட்டணி அறிவிப்பால் யார் யார் எந்த அணி என்பதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் எந்தத் திசையில் போகும் என ஓரளவ்ற்கு ஊகிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 1998ல் ஏற்பட்டதைப் போன்று அணிகள் பிரிந்திருக்கின்றன. அதனால் பெரும்பாலும் முடிவுகள் அதைப் போல அமையலாம். அந்த முறை அதிமுக அணி அதிக இடங்களைப் பெற்றது.

தொகுதிகள் முடிவானதும் அதைப் பற்றி விரிவாக என்னுடைய கணிப்புக்களை எழுதுகிறேன்

Saturday, March 21, 2009

பூனைகளான சிறுத்தைகள்

முத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.

"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.

அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).

அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.

இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?

ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?

தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.

இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.

""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.

இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!

'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது

Thursday, March 19, 2009

எம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.

தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)

Tuesday, March 10, 2009

பா.ம.க யாருடன்? சில ஊகங்கள்

காங்கிரஸ் திமுகவுடன்தான் கூட்டணி என்று அறிவித்துவிட்ட நிலையில், பா.ம.க.வின் நிலை என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரத்ததிற்குப் பின் இந்தக் கேள்வி மேலும் வலுப்பெற்றிருக்கிறது

அதை குறித்த ஊகங்களும் கிசுகிசுக்களும் ஊடங்களில் ஆரம்பித்துவிட்டன. இன்று வந்த ஊகங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் நீங்களே உங்கள் ஊகங்களை மேற்கொள்ளலாம்.

பா.ம.க.,கூட்டணி தொடர்பாக கட்சிக்குள் நடைபெறும் கருத்து வேறுபாடுகள் தான் இதுவரை எந்த முடிவும் எடுக்காததற்குக் காரணம் என்று பா.ம.க ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.பா.ம.க., கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். திருமங்கலம் இடைத் தேர்தலில், பா.ம.க., யாருக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பது தொடர்பாக கூட்டம் நடந்த போது, தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஜெயலலிதா பக்கம் தான் இருந்தது என்கிறார் ஒரு சீனியர் பா.ம.க., தலைவர்.

காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்கிறார் அன்புமணி. ஆனால் ராமதாசோ, தி.மு.க., பக்கம் போனால் பா.ம.க., பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்.இப்படி இரண்டு பட்ட கருத்துகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடுகிறது கட்சித் தலைமை.

அ.தி.மு.க., தரப்பிலிருந்து ஆறு சீட்கள் தருகிறோம். ஆனால், ராஜ்யசபா சீட் தரமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,விடம் ஏழு எம்.பி., சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் பா.ம.க., தரப்பில் கேட்கப்பட்டது. ஆறு எம்.பி., சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்றுதி.மு.க.,வில் கூறினர். பா.ம.க.,வோ ஒன்பது தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் ஏழு தொகுதிகளை தரவேண்டும் என்று கறாராக உள்ளது. இதற்கான பேரம் இன்னும் படியவில்லை. எனவே தி.மு.க., கூட்டணியை பா.ம.க., இன்னமும் இறுதி செய்யவில்லை.

அ.தி.மு.க., பக்கமே போய்விடலாம் என்றால் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிகிறது. அதற்கு பிறகு என்ன செய்வது? என பா.ம.க., யோசிக்கிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடலாம் என்று கட்சியினர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அன்புமணி. ராஜ்யசபா மூலமாகவே, வெயிலில் பிரசாரம் செய்யாமல் எம்.பி.,யாக ஆசைப்படுகிறார் அன்புமணி.சமீபத்தில் சோனியாவை சந்தித்த பிறகு, மத்திய அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அன்புமணியின் ஆசை அதிகமாகிவிட்டது. இப்படி அப்பா - மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பா.ம.க., எங்கு போய்ச்சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை

தினமலர்

‘‘இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கும் பாமக கருத்து (ஜெ.யின் உண்ணாவிரதம் குறித்து) என்னவாம்...’’‘
‘உண்ணாவிரதம் நடந்த அன்னிக்கு ஜப்பான் தூதரகத்துல மனு கொடுக்க போயிருந்தாங்க... அந்த தலைவர்கள் ராமதாசிடம் நைசா பேச்சுக் கொடுத்து பாத்திருக்காங்க... ஆனா அவர் வாய திறக்கவே இல்லையாம்...’’
‘‘அப்ப எதுக்கு... இன்னைக்கு நடக்குற உண்ணாவிரதத்தை கேன்சல் பண்ணாளாம்...’’
‘‘மருத்துவரின் தந்திரத்துல இதுவும் ஒண்ணுனு சொல்றாங்க... ஜெயலலிதா ‘தனி நாடு’ என்பதை ஏத்துக்கிட்டதால அவங்களுக்கு போட்டியா உண்ணாவிரதத்தை நடத்த வேண்டாமுனு கேன்சல் பண்ணிட்டதா சொல்றாங்க...’’‘
‘இதை முதல்லயே செய்திருக்கலாமே...’’ ‘‘அப்படி விட்டுக் கொடுத்தா, அதிமுக கூட்டணியில கூடுதலா சீட் கேட்க முடியாதுல்ல...’’ என்று சொன்ன பீட்டர் மாமா, காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

தினகரன்

“Ramadoss is bargaining hard with us,” revealed a DMK leader. “He says the AIADMK is offering him seven seats. He wants us to give him eight seats, plus a Rajya Sabha berth for his son.”
Hindustan Times
Being the chief architect of the Democratic Progressive Alliance, DMK president M Karunanidhi is back in business and has offered PMK founder Dr S Ramadoss, the eternal fence-sitter, six LS seats plus one Rajya Sabha seat for his son Dr Anbumani Ramadoss, according to political sources.

DMK sources said Ramadoss Sr wanted seven Lok Sabha seats and an RS nomination, as the AIADMK had apparently offered him eight Lok Sabha seats. However, Karunanidhi has stuck to the 6+1 formula.

After kicking out the PMK from the state-level alliance, Democratic Progressive Alliance (DPA), Karunanidhi has been shrewd enough to let the Congress woo back Ramadoss, a partner in the UPA at the Centre, for the LS polls.

For over a month, the Congress has been negotiating with the PMK and Vijayakanth's DMDK, as both the parties have far too much bitterness with the DMK to be directly holding parleys. As the Congress is keen on repeating its 2004 success, AICC president Sonia Gandhi, herself talked to Ramadoss Sr a fortnight ago to retain him in the alliance but the PMK leader is yet to make up his mind.

The AIADMK is keen to get the PMK by its side to add to its numberical strength. "PMK has been offered eight seats, including two reserved constituencies and no guarantee of a Rajya Sabha seat,'' said a source in AIADMK. As only three of the seats offered by AIADMK are said to be winnable', Ramadoss is in a dilemma, said sources close to him, hinting that the DMK offer looks better.

Times of India
என்னுடைய ஊகம் (இன்னொரு கோணத்தில்)
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. கடந்த முறை போட்டியிட்டது. கடந்த முறை கடும் எதிர்ப்பிற்கிடையே அது காங்கிரசிடமிருந்த அந்தத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை காங்கிரஸ் அந்தத் தொகுதியைத் திரும்பப் பெற முயற்சித்து வருகிறது. கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்ற புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு சோனியாவை அணுகி முறையிட்டிருக்கிறார்கள்.
பாமக காங்கிரஸ் கூட்டணியில் தொடர இந்தத் தொகுதியைக் கோரும். கிடைக்காத பட்சத்தில் இதைக் காரணமாகச் சொல்லி அதிமுக அணிக்குப் போகும். அதாவது இலங்கையைவிட புதுச்சேரி பாமகவின் முடிவைத் தீர்மானிக்கும்.
கொசுறு: விடுதலைச் சிறுத்தைகள் பற்றியும் ஒரு கிசுகிசு:
""திருமாவளவன் தன்னோட தொகுதியை உறுதி செய்துட்டாருங்க...'' எனக் கூறியபடி விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய். "
"அவர் முதல்ல, கூட்டணியை உறுதி செய்துட்டாராங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி."
"அதுக்காகத் தான், சமீபத்துல முதல்வரை சந்திச்சப்ப, காங்கிரசோட எதிர்ப்பு பத்தி பேசியிருக் காரு... "அதை விடுங்க... முதல்ல நீங்க என்னோடு இருப்பீர்களா, மாட்டீங்களான்னு மட்டும் சொல்லுங்க'ன்னு முதல்வர் கேட்டாராம்..."இதை எதிர்பார்க்காத திருமாவளவன், "கூட்டணியில இருக்கேன்'னு பதில் சொல்லியிருக்காரு... அவருக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்கறது உறுதியாயிடுச்சுன்னு, கட்சிக்காரங்க பேசுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்."
"காங்கிரசை ஒழிப்பது தான் எங்கள் முதல் பணின்னு திருமாவளவன் சொன்னது எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரலைங்க...'' என சிரித்தார் அந்தோணிசாமி.
தினமலர்

Monday, March 09, 2009

முந்துகிறதா மூன்றாவது அணி?

மாலன்

கடந்த வாரம் நிகழ்ந்த இரு முறிவுகள், (காங்-சமாஜ்வாதி, பாஜக-பிஜூ ஜனதாதளம்) தேர்தல் களத்தை மூன்றாவது அணிக்கு சாதகமாகத் திருப்பியிருக்கின்றன. ஆனால் அந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது இன்னமும் கேள்விக் குறிதான். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் களத்தில் குழப்பம் அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல ஆழமாகியும் உள்ளது.

நாம் தெளிவு பெற யார் யார் எங்கிருக்கிறார்கள், அவர்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் இவற்றை சட்டென்று ஒரு 'கிளான்ஸ்' பார்த்து விடலாம்.

23 கட்சிகளின் துணையோடு ஆண்ட ஐக்கிய முற்போக்கு அணியில் (காங்கிரஸ் கூட்டணியில்) 2004 தேர்தலின் போது அதனுடன் இருந்த சில கட்சிகள் இன்று அதனோடு இல்லை.உதாரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, மறுமலர்ச்சி திமுக, மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்று அதன் அணியில் இருப்பவர்கள்:

திமுக:


எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: பல காரணங்களால் (அவை என்ன என்று எல்லோருக்குமே தெரியும்) இப்போது இருப்பதை விடக் குறைவான இடங்களைப் பெறக்கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 16
கடிவாளம் யார் கையில்?: கருணாநிதி (குடும்பத்தினரிடம்)

ராஷ்ட்ரிய ஜனதா தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? பீகார்
என்ன வாய்ப்பு ? : நிதீஷ் குமார்- பாஜக கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் பாஸ்வானுடன் உரசல்கள் இருக்கின்றன. அவருடனும் காங்கிரசுடனும் உறவு தொடர்ந்தால் இப்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது?: 24
கடிவாளம் யார் கையில்? : லாலு பிரசாத் யாதவ்

தேசியவாத காங்கிரஸ்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? :மகாராஷ்டிரம்
என்ன வாய்ப்பு ? : ஷரத் பவார்தான் அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்து வருவது காங்கிரசிற்கு எரிச்சலைக் கொடுக்கிறது.சிவசேனையுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டியது. காங்- தே.கா உறவு அத்தனை சுமுகமாக இல்லை. எனினும் இருவருக்கும் வேறு வழியில்லை. நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாத சம்பவம் நடந்த போது மாநிலத்தை ஆளும் காங்-தே.கா அரசு அதைக் கையாண்ட விதம் நகர்ப்புறங்களில் அந்த ஆட்சி மீது கடுப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் பாஜக அதை நினைவுபடுத்த முயலும்.கிராமப்புறங்களில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் கை கொடுக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 11
கடிவாளம் யார் கையில் ?: ஷரத் பவார்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: ஜார்க்கண்ட்
என்ன வாய்ப்பு?: உம்ஹூம், நோ சான்ஸ்.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: (இன்ன்மும்) சிபு சோரன் கையில்தான்

திருணாமூல் காங்கிரஸ்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : மேற்கு வங்கம்:
என்ன வாய்ப்பு ?: நந்திகிராம் கை கொடுத்திருப்பதால் தோழர்களுக்கு தண்ணி காட்டும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 1
கடிவாளம் யார் கையில் ?: மம்தா பானர்ஜி

தேசிய மாநாடு

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு & காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியைப் பிடித்தது. அநேகமாக அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 2
கடிவாளம் யார் கையில் ?: ஓமர் அப்துல்லா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், பாஜகவும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அது சாதகமாக பாதகமா என்பது அந்த ஆட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்/அவப் பெயரைப் பொறுத்தது. பிஜு ஜனதாதளத்துடன் உறவு முறிந்ததை அடுத்து, ஒரிசா, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய எல்லா தென் மாநிலங்களிலும் தனித்துத்தான் போட்டியிட வேண்டியிருக்கும். இன்று பாஜக கூட்டணியில் இருப்பவர்கள்:


சிவசேனா

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: மகாராஷ்டிராம்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆளும் காங்-தே கா கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வுகளை நம்பியிருக்கிறது. மத + மாநில உணர்வுகளை உசுப்பிவிட்டு ஆதாயம் பார்க்க முயற்சிக்கும். சரத் பவார் பிரதமருக்குப் போட்டியிட்டால், அத்வானியை கைவிட்டுவிட்டு அவரை ஆதரிக்கக் கூடும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 12
கடிவாளம் யார் கையில்?: பால் தாக்ரே ( ஆஸ்பத்திரியிலிருந்தாலும்)


சிரோண்மணி அகாலி தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பஞ்சாப்
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிறது. அதன் பாதகங்களை(யும்) எதிர் கொள்ள வேண்டி வரும்
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 8
கடிவாளம் யார் கையில் ?: பாதல் குடும்பத்தினர்

ஜனதாதளம் (ஐக்கிய)

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: பீகார்.
என்ன வாய்ப்பு ?: மாநிலத்தை ஆள்கிறது. ஆட்சிக்கு நல்ல பெயர். அதனால் கணிசமான இடங்களைப் பெறலாம்.
என்ன வாய்ப்பு ? : 8
கடிவாளம் யார் கையில் ? : நிதீஷ் குமார்

ராஷ்டிரிய லோக்தள்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உ.பி.யின் மேற்குப் பகுதியில்
என்ன வாய்ப்பு ? : மேற்கு உ.பி.யில் எப்போதுமே சில இடங்களைக் கைப்பற்றக்கூடிய வலிமை உண்டு
2004 எத்தனை இடங்கள் பெற்றது ? : 3

அசாம் கண பரிஷத்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: அசாம்
என்ன வாய்ப்பு ?: முன்பு காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த மாணவர் கட்சியாக இப்போது இல்லை. பல கூறுகளாக உடைந்து விட்டது.ஆனாலும் அசாமில் சில பகுதிகளில் இடங்களைப் பிடிக்கக் கூடும். உறுதியாகச் சொல்ல இயலாது. தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டது.
2004 எத்தனை இடங்கள் பெற்றது? : 2

மூன்றாவது அணி என்பது சிலநாட்களுக்கு முன்வரை கடவுள் போல இருந்தது. அதாவது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை. இப்போது அது ஆவி மாதிரி தோன்றுகிறது. காலில்லாத ஆவி. அது இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைப் பார்த்ததாக சத்தியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டு உள்ளூற பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பிரதமர்கள் வேண்டுமானாலும் கொடுக்கக் கூடிய ஒரே அணி அதுதான்.

இடது சாரிகள் (மார்க்சிஸ்ட், இந்திய கம். பார்வேர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி)

எந்தப் பேட்டைகளில் பிஸ்தா ? : மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம்,
என்ன வாய்ப்பு ? : மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சியில் இருக்கின்றன. நந்திகிராம், சிங்கூர் பிரசினைகளால் மேற்கு வங்கத்திலும், உட்கட்சிப் பூசலால் கேரளத்திலும் முன்பு பெற்ற அளவு இடங்களைப் பெற இயலாது.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 60

அதிமுக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: தமிழ்நாடு
என்ன வாய்ப்பு ?: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால், திமுக- காங்-கூட்டணிக்கு கடும் சவாலாக விளங்கும். திமுகவின் குடும்ப அரசியலும், 'அம்மா'விற்கு உள்ள வசீகரமும் கை குடுக்கும். அலை எதுவும் வீசாத பட்சத்தில் 20 -25 இடங்களை எதிர்பார்க்கலாம். தேர்தலுக்குப் பின் 3வது அணியிலேயே இருக்குமா என்பது கேள்விக்குறி.
2004 எத்தனை இடங்கள் பெற்றது ?: 0
கடிவாளம் யார் கையில் ?: (சந்தேகமில்லாமல்) ஜெ. கையில்

ஜனதாதளம் (மதச்சார்பற்ற)

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: கர்நாடகம்
என்ன வாய்ப்பு ? :சட்டமன்றத் தேர்தலில் அடி வாங்கியது. ஆட்சியிலிருக்கும் பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இராது. காங்கிரசோடு ஏதேனும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடும் .
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 3
கடிவாளம் யார் கையில் ?: தேவகவுடா

தெலுங்கு தேசம்

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: மாநிலச் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடப்பதால், மாநில காங்கிரஸ் ஆட்சியின் மீதான கோபதாபங்களும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாதகமான அம்சம். தெ.தே+இடதுசாரிகள்+ TRS என்பது ஆந்திரத்தில் வலுவான கூட்டணி. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிரஞ்சீவி அள்ளிக் கொண்டு போகாத வரையில் பிரசினை இல்லை.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ?: 5
கடிவாளம் யார் கையில் ?: சந்திரபாபு நாயுடு

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஆந்திரத்தில் உள்ள தெலுங்கான பகுதி
என்ன வாய்ப்பு ? : தெலுங்கு தேசத்திற்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 5
கடிவாளம் யார் கையில் ? : சந்திரசேகர் ராவ் (இவ்ரை எதிர்த்து அசாரூதீன் களமிறக்கப்படக்கூடும்)

மதிமுக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: தமிழ்நாட்டின் சில தொகுதிகள்
என்ன வாய்ப்பு ?: இலங்கைப் பிரசினையில் காங்-திமுகவிற்கு எதிரான வாக்குகள் கை கொடுக்கும்.அதிமுக அணியில் இருப்பது ஒரு பலம். கட்சியை உடையாமல் காப்பாற்றும் சவாலை தேர்தலுக்கு முன்னும் பின்னும் சமாளிக்க வேண்டியிருக்கும்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 4
கடிவாளம் யார் கையில்: (இன்றுவரை) வைகோ கையில்

3வது அணிக்கு வரக்கூடியவர்கள்:

பிஜூ ஜனதா தளம்:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஒரிசா
என்ன வாய்ப்பு ? : பாஜகவுடன் உறவு முறிந்ததால் இடதுசாரிகளின் உதவியை நாடுகிறது. 'நவீன் பாபு'வின் செல்வாக்கைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 11
கடிவாளம் யார் கையில் ? நவீன் பட்நாயக்

பகுஜன் சமாஜ் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : உத்தரப் பிரதேசம்
என்ன வாய்ப்பு ? : காங்-சமாஜ்வாதி பூசல் இவருக்கு சாதகம். சட்டமன்றத் தேர்தலில் ஜமாய்த்திருந்தாலும் ஆட்சியில் இருப்பதால் அதற்கு எதிரான வாக்குகளையும் சந்திக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலைப் போலவே இப்போதும் இடங்களைப் பிடித்தால், பிரதமராக முயற்சிப்பார். ஏற்கனவே இடதுசாரிகள் இவரை வரவேற்றிருக்கின்றார்கள்
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது? 19
கடிவாளம் யார் கையில் ?: மாயாவதி

சமாஜ்வாதி கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: உத்தரப்பிரதேசம்
என்ன வாய்ப்பு ?: தேர்தலுக்குப் பின் மாயாவதி இடதுசாரிகளை நோக்கிப் போகவில்லை என்றால் இந்தக் கட்சி அந்தப் பக்கம் சாயும்.ஆனால் 2004ல் பெற்ற அளவு இடங்களைப் பெறுவது சிரமம்.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 36
கடிவாளம் யார் கையில் ? : முலாயம் சிங் யாதவ்

மக்கள் ஜனநாயகக் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா ? : ஜம்மு &காஷ்மீர்
என்ன வாய்ப்பு ? : அதிகமில்லை. தேசிய மாநாடு + காங். என்பது ஜ&கா வில் வலுவான கூட்டணி.
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 1
கடிவாளம் யார் கையில் ? : முப்தி முகமது குடும்பத்திடம்

பாட்டாளி மக்கள் கட்சி:

எந்தப் பேட்டையில் பிஸ்தா? : தமிழ்நாட்டின் சில தொகுதிகளில்
என்ன வாய்ப்பு? : காங்கிரசோடு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டால் திமுகவே இதனை பலவீனப்படுத்த மறைமுகமாக முயற்சிக்கும் என்ற சந்தேகத்தில் அதிமுகவோடு சேரலாம்.தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ எந்த அணிக்கும் போகலாம்..
2004ல் எத்தனை இடங்கள் பெற்றது ? : 6
கடிவாளம் யார் கையில்?: மருத்துவர் ராமதாஸ்

கறுப்புக் குதிரை: பிரஜா ராஜ்யக் கட்சி

எந்தப் பேட்டையில் பிஸ்தா ?: ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள்
என்ன வாய்ப்பு? : சிரஞ்சீவின் சினிமா கவர்ச்சி. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் மீதுள்ள அதிருப்தி வாக்குகள், இளைய தலைமுறையின் வாக்குகள் ஆகியவற்றைக் கவர்ந்து கொள்ளக் கூடும். சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகம் கவனம் செலுத்தும். ஆனால் அது நாடாளுமன்ற இடங்களுக்கும் கை கொடுக்கும். ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்: சிரஞ்சீவி

தேமுதிக:

எந்தப் பேட்டையில் பிஸ்தா?: யாருக்கும் தெரியாது
என்ன வாய்ப்பு?: ஹி ஹி
2004ல் எத்தனை இடங்கள்?: போட்டியிடவில்லை
கடிவாளம் யார் கையில்?: விஜயகாந்த் குடும்பத்தினர்

இந்தப் பட்டியல் தரும் சித்திரத்தைப் பார்த்தால் மூன்றாவது அணி முந்துவது போல் தோன்றலாம். அது அநேகமாக 160லிருந்து 180 இடங்களைப் பிடிக்கும் என நான் நினைக்கிறேன். அப்படியானால் ஆட்சிஅமைக்க அதற்கு 100லிருந்து 120 இடங்கள் வரை தேவைப்படும்.அப்போதும் 1996ல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியைப் போல ஒன்று சாத்தியமே.

ஆனால் கட்சிகளிடம் உள்ள உள் முரண்பாடுகளை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயலும் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு மாயாவதியை ஜெ.பிரதமராக ஏற்பாரா? தேவகவுடாவை மாயாவதி ஏற்பாரா? அந்த மாதிரி சூழலில் பவாரை முன்நிறுத்தி காங்கிரஸ் (சந்திரசேகர் பிரதமர் ஆனது போல) ஆதரவளிக்கக் கூடும். சிவசேனாவும் பவார் மராட்டியர் என்பதால் ஆதரிக்கலாம். ஆனால் இடதுசாரிகள் ஆதரிப்பார்களா? இடதுசாரிகள் ஆதரித்தால் மம்தா ஆதரிக்கமாட்டார்; மாயாவதி ஆதரித்தால் முலாயம் ஆதரிக்க மாட்டார். ஜெயலலிதா ஆதரித்தால் கருணாநிதி ஆதரிக்க மாட்டார். இந்தக் குழப்பங்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும்.

தேர்தலைவிட தேர்தலுக்குப் பின்னர்தான் குழப்பங்களும் சுவாரஸ்யங்களும் காத்திருக்கின்றன.

Saturday, March 07, 2009

ஜெயலலிதா உண்ணாவிரதம் எதற்காக?


மாலன்

இலங்கை உள்நாட்டுப் போர் அநேகமாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில் போர் நிறுத்தம் கோரி, வரும் திங்களன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் கூட 'இது காலம் கடந்த முயற்சி' என்று சொன்னாலும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.

காலம் கடந்த முயற்சி என்பதை ஜெயலலிதாவும் அறிந்திருப்பார்.அவர் இந்த உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர் நலனை மனதில் கொண்டல்ல, அதற்குப் பின்னால் வேறேதோ அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பதை ஊகிப்பது கடினமல்ல. இந்த அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி பகிரங்கமாகக் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகியிருப்பதைக் கவனிக்கும் போது, இந்த உண்ணாவிரதம் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றிற்காக இருக்கலாம் எனத் தோன்றுகிறது:

  • இலங்கைப் பிரசினை வாக்காளர்களிடையே, வெளியே புலப்படாத ஓர் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்து, தன் கட்சியின் வாக்ககுகளைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி

  • இலங்கைப் பிரசினையை ஓர் தேர்தல் பிரசினையாக மாறி விடாமல் அதை neutralize செய்யும் ஒரு தந்திரம். எல்லாக் கட்சிகளும் ஏறத்தாழ ஒரே நிலை எடுத்துவிட்டால், அதில் விவாதத்திற்கும், பிரசாரத்திற்கும் அதிக இடமில்லாது போய் விடும்.

  • காங்கிரசுடன் கூட்டணி இனி சாத்தியமில்லை என்ற நிலையில், பா.ம.கவைத் தன் அணிக்குக் கொண்டுவர வீசப்படும் தூண்டில்

  • அதிமுக+ மதிமுக+பா.ம.க+இந்தியக் கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் உள்ள கூட்டணி, 'இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டணி' என்ற தோற்றத்தை உருவாக்கி, இலங்கைத் தமிழர் பிரசினை காரணமாக திமுக-காங்கிரஸ் அரசுகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை கூட்டணிக்கு வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் உத்தி

இவற்றில் ஏதோ ஒன்றுதான் உண்ணாவிரத்தின் பின்னுள்ள நோக்கமாக இருக்க வேண்டும். நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..

உண்ணாவிரதத்தோடு உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவது சந்தேகத்தை வலுவாக்குகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டிய போது, அதை அங்கு எப்படி அனுப்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா. இப்போது காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.

எப்படி இருந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல், அடிக்கடி தன் நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது நடுநிலை வாக்காளர்களுக்கு அவர் மீதுள்ள நம்பகத்தன்மையை பலவீனமடையச் செய்யுமே அன்றி அவருக்கு அரசியல் ரீதியாக உதவாது.

Friday, March 06, 2009

டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு

- நாராயணன்

டைம்ஸ் ஆப் இந்தியா தேர்தல் பற்றிய அவர்களின் கணிப்பினை இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறது. தொகுப்பு கீழே. நான் தொடர்ச்சியாக சொல்லி கொண்டு வருகிற அதே விஷயம் தான் இதிலும் வெளியாகி இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணக்களவில் வலுவாக இருக்கிறது. இந்த கணிப்பும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் ஐ.மு.கூ இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நிதர்சனத்தில் இன்னமும் அவர்கள் இருவரும் தொகுதி உடன்பாடு எண்ணிக்கையினை எட்டவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை காங். 5 மற்றும் கூட்டணி (முக்கியமாக திமுக) 11 இடங்கள் பெறும் என்று போட்டிருக்கிறது. இக்கணிப்பில் பாமக, அதிமுகவினை நோக்கி நகரும் என கணக்கிட்டு போட்டிருக்கிறார்கள். காங். 5 என்பது பெறக்கூடியதே. ஆனால் பாமக இல்லாத திமுக 11 இடங்கள் என்பது கொஞ்சம் சர்ச்சைக்குரியதே. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6 இடங்களில் போட்டியிட்டு ஆறிலும் வென்றார்கள். ஒரு வேளை அதிமுக வுக்கு இடம்பெயரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆக உயரலாம், ஏனெனில் அதிமுக, பாமக தவிர்த்து மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளோடும் தொகுதி பங்கு பேரத்தை மேற்கொள்ள வேண்டும்.

Times of India Poll Prediction

Wednesday, March 04, 2009

கட்சிகள். கூட்டணிகள். கணக்குகள்

- நாராயணன்

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கும்.இறுதியாக இப்போது காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பா.ஜ.க முன்னிறுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. தேவ கெளடாவின் மூன்றாவது அணீ மார்ச் 12 அன்றைக்கு அனைத்து தலைவர்களோடும் தன் தேர்தல் பிரச்சாரத்தினை தொடக்க இருக்கிறது. ஆனால், இந்த மூன்றாவது அணி ஒட்டினை பிரித்து, யார் பதவிக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களோடு போய்விடும் என்பது தான் பரவலான எண்ணம்.

இப்போதைக்கு யார் யாரோடு இருக்கிறார்கள் என்று பார்ப்போம்

ஐக்கிய முற்போக்கு அணி (UPA)
  • காங்கிரஸ் - சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் மற்றும் மாநில ரீதியான காங்கிரஸ் தலைவர்கள்
  • ராஷ்ட்ரிய ஜனதா தள் (RJD + LJP) - லாலு பிரசாத் யாதவ் (பீகார்)
  • ஜனதா முக்தி மோர்ச்சா (JMM)- சிபு சோரன், (ஜார்கண்ட்) (சமீபத்திய செய்திகளில், முதலமைச்சர் பதவி தராததால் சிபு சோரன் கோவமடைந்து இருப்பதாக கேள்வி)
  • திரிணாமுல் காங்கிரஸ் (TP) - மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்)
  • தேசிய காங்கிரஸ் - உமர்/பரூக் அப்துல்லா (ஜம்மு & காஷ்மீர்)
  • சமாஜ்வாடி கட்சி (SP) - முலாயம் சிங்/அமர் சிங் கூட்டணி (உத்தரப்பிரதேசம்). முலாயம் நடுவில் “சரத் பவார்” பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று வேறு சொல்லியிருக்கிறார். இது தாண்டி, உ.பியின் தொகுதி பங்கீட்டில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.
  • தேசியவாத காங்கிரஸ் (NCP) - சரத் பவார். மஹாராஷ்ட்ராவின் கிங் மேக்கர். காங்கிரஸோடு தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னமும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. கூடவே, சிவசேனாவோடு வேறு தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். மஹாராஷ்டிராவில் இப்போது காங்கிரஸ் + தேசியவாத காங்கிரஸின் கூட்டணி அரசு நடந்து கொண்டிருக்கிறது.
  • திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) - கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா (தமிழ்நாடு) தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலை இருப்பதாக தெரிகிறது.காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கொடுப்பதாக கருணாநிதி கூட்டணியை தக்கவைத்து கொண்டு இருக்கிறார். தேர்தலின் முடிவுக்கு பின், காங்கிரஸ் கூட்டணி பற்றி பரிசீலனை செய்யலாம்.
  • விடுதலைச் சிறுத்தைகள் (VCK) - திருமாவளவன் (தமிழ்நாடு).கருணாநிதியோடு கூட்டணியில் இருக்கிறார். தலித் மக்களின் ஒட்டு இன்னமும் விடுதலைச் சிறுத்தைகள் பக்கம் இருக்கிறது. ஆனால், இலங்கைப்பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் கவனமும், கருணாநிதியோடு கூட்டும் எதிர்மறையானது.

ஆக இப்போதைக்கு
UPA = INC + RJD + LJP + TP + SP + NCP + NC + DMK + VCK + உதிரிக் கட்சிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)

  • பாரதீய ஜனதா கட்சி - அத்வானி, மோடி, அருண் ஜெட்லீ, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்.
  • அகாலி தளம் (AD) - பஞ்சாப்.கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • இந்திய தேசிய லோக் தளம் (INLD) - சவுதாலா. ஹரியானாவின் மிக முக்கியமான தலைவர். கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) - அஜித் சிங். உத்தரப்பிரதேசம். ஜாட் இன மக்களின் முக்கியமான தலைவர். கூட்டணியும், தொகுதி பங்கீடும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு உ.பியின் ஜாட் இன மக்கள் அதிகம். மாயாவதிக்கும், சமாஜ்வாடி பார்ட்டிக்கும் கடுமையான போட்டியாக இருக்கும்.
  • பாரதீய ஜனதா தள் (BJD) - பிஜு பட்நாயக்.ஒரிஸ்ஸா.கூட்டணி உறுதி. தொகுதி பங்கீடு இன்னமும் முடியவில்லை.
  • சிவ சேனா - பால் தாக்கரே. மஹாராஷ்டிரா. பெரியதாக இப்போதைக்கு மஹாராஷ்டிராவில் சிவ சேனாவிற்கு மரியாதை இல்லை. பா.ஜ.கவோடு பல சமயங்களில் கருத்து ரீதியான மோதல்கள் இருந்திருக்கிறது. ஆனாலும், இந்த தேர்தலை சேர்ந்தே சந்தித்தாக வேண்டிய கட்டாயம். ஒரு வேளை சரத் பவார் மனசு மாறினாறென்றால், சிவசேனா + பாஜக + தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸினை இடம் தெரியாமல் ஒட வைக்கலாம்.
  • அஸ்ஸாம் கன பரிஷத் (AGP) - பிரபல் குமார் மகந்தா. அஸ்ஸாம். பாஜக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸிற்கு எதிரானது என்பதால், உடன்படிக்கை ஏற்படலாம் என்பது நம்பிக்கை.
  • தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) - விஜயகாந்த். தமிழ்நாடு. இதை எழுதும் இந்த நிமிடம் வரை எவ்விதமான கூட்டணியும் இல்லை. ஆனால் செய்திகள் தேமுதிகவும் பாஜகவும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கின்றன. சென்ற மாநில தேர்தல்களில் 8.33% ஒட்டு பெற்று மக்களி்ன் கவனத்தினை ஈர்த்த கட்சி. இளைஞர்கள் மத்தியில் விஜயகாந்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்போதைக்கு எதுவும் நிச்சயமில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று வேறு நடுவில் சொல்லியிருந்தார்கள்

ஆக இப்போதைக்கு
NDA = BJP + Shiv Sena + AD + INLD + AGP + RLD + உதிரிக் கட்சிகள்

மூன்றாவது அணி

மார்ச் 12 ஆம் தேதி தேவ கெளடா தலைமையில் துவக்கம் இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் இன்பார்மலாக பல கட்சிகள் அதில் இருக்கின்றன.

ஜனதா தளம் (இணைப்பு) (JD (U)) - முந்திய பிரதமர் தேவ கெளடா. முன்னாளைய கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி. கர்நாடாகாவில் மிக முக்கியமானn கட்சி. கன்னடிகா, கன்னட எழுச்சி என்று பெங்களூர் சாராத கர்நாடாகாவில் வலிமையோடு இருக்கக்கூடிய கட்சி.
பிரச்சனை: ஒரு வேளை தேர்தலில் ஜெயித்து, ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வருமெனில் அங்கே தாவி விடக் கூடிய அபாயமிருக்கிறது. அவர்களுடைய பிரச்சனை மாநிலத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, பிறகு கவிழ்த்து, இப்போதைக்கு பாஜக ஆட்சி நடந்து வருவது.

கம்யுனிஸ்டுகள் (CPI /CPM) -பிரகாஷ் காரத். பிருந்தா காரத்.புத்ததேவ் பட்டாச்சார்யா. பரதன். பின்ராயி விஜயன். மேற்கு வங்காளம், கேரளாவில் ஆட்சி்யிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் வெளியேறினார்கள். பிரகாஷ் காரத்திற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு கூட்டணியில் இருக்கவேண்டிய கட்டாயம். இந்தியா முழுக்க கம்யுனிஸ்டு அனுதாபிகள் இருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜகவை விட இந்தியாவெங்கும் ஒரளவிற்கு பரவலான வாக்காளர்களை கொண்ட கட்சி.
பிரச்சனை: தனித்து இருப்பதால், வாக்கினை பிரிக்கலாமெயொழிய ஆட்சி அமைக்க முடியாது. நல்ல எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கமுடியும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) - ஜெயலலிதா. தமிழ்நாடு. திமுக எதிர்ப்பலையில் இப்போதைக்கு உற்சாகமாக இருக்கிறார்கள். மூன்றாவது அணியில் இருக்கிறேன் என்று போயஸ் கார்டனில் தலைவர்களோடு தேனீர் அருந்திவிட்டு, காங்கிரஸை தன்னோடு சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தவர். தென் தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கி அதிகம். மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகள் களத்தில் இறங்கி வேலை செய்வார்கள் என்பது கூடுதல் பலம். இப்போதைக்கு மூன்றாம் அணி.
பிரச்சனை: காங்கிரஸுக்கு பகிரங்க அழைப்பு விட்டதால், தேர்தலுக்கு பின்னான நிலைமை சொல்ல முடியாது. ஜெயலலிதாவின் தேவை, திமுக ஆட்சி கலைப்பு. அதற்கு தோதாக தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து ஐ.மு.கூ க்கு 15-20 இடங்கள் தேவைப்படுமெனில் காங்கிரஸ் திமு்கவை கழட்டிவிட்டு அதிமுகவோடு சேரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதரவு வி்லக்கப்படும்.அதிமுக ஆட்சியில் அமர ஒரு வாய்ப்பிருக்கும்.

தெலுகு தேசம் (TDP) , தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி (TRS) - சந்திரபாபு நாயுடு.ராகவேந்தர் ராவ். ஆந்திரா. உத்வேகத்தோடு காங்கிரஸ் எதிர்ப்பலையில் போட்டி போ்டுகிறார்கள். தெலுகு தேசம் + தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி + கம்யுனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து மாநிலத்துக்கும், நாடாளுமன்றத்திற்குமான தொகுதி உடன்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன. சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னை நிறுப்பித்தாகவேண்டிய கட்டாயம்.
பிரச்சனை: ஐ.மு.கூக்கு கண்டிப்பாக போக மாட்டார்கள். ஆனால் ஒரு வேளை தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில், தெலுகு டதேசம் பாஜகவுக்கு வெளியிலிருந்தோ, இல்லை உள்ளே போயோ ஆதரவு கொடுக்கலாம். பாஜகவும் இப்போது தெலுங்கானா பற்றி பேசுவதால் தெலு்ங்கான ராஷ்ட்ரிய சமிதியும் பாஜகவுக்கு ஆதரவு தரலாம்

ஆக இப்போதைக்கு
Third Front = JD(U)+ CPI +CPM + TDP + TRS + AIADMK + உதிரிக் கட்சிகள்

மதில் மேல் பூனைகள்

பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) - மாயாவதி. உத்தரப்பிரதேசம். தலித் மக்களின் எழுச்சி என்று நம்பப்படுபவர். டெல்லியின் மீதும், பிரதமர் பதவி மீதும் எப்போதும் ஒரு கண் இருக்கிறது. உ.பியின் 80 தொகுதிகளில் பிஎஸ்பியின் கை ஒங்கியி்ருக்கிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு கூட்டணி இல்லாமல் கனவுகள் நிறைவேறாது. ஆனாலும், இன்னமும் மூன்றாவது அணியினை நம்பி இறங்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏதேனும் வியுகங்கள் வகுக்கலாம்

பாட்டாளி மக்கள் கட்சி - ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். தமிழ்நாடு. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், கூட்டணியிலிருந்து விலகி விட்டார் என்று தமிழ்நாட்டில் நம்பப்படுகிறது. தொடர்ச்சியாக 12 வருடங்கள், பாஜகவுடனும், காங்கிரஸுடனும் இருந்து மத்தியில் அமைச்சரவைகள் பெற்றுக் கொண்ட கட்சி. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருத்து வேறுபாடுகள், ஆளும் திமுக + காங்கிரஸ் கூட்டணியோடு உருவாகியிருக்கிறது. பல்வேறு மாநிலம் தொ்டர்பான பிரச்சனைகளிலும் பாமகவின் பார்வை புறக்கணிக்கப்பட்டது, ஆழமான விரிசலை உண்டாக்கியிருக்கிறது. ஹேஷ்யங்கள், ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணிக்கு போவார் என்று சொல்கிறது. இன்னமும் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லை.

மேற்சொன்னவை தேர்தலுக்கு முன்னான இப்போதைய நிலைமை.

நிகழ்சூழல் 1

ஒரு வேளை காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐ.மு.கூ தொகுதிகள் அடிப்படையில் மு்ன்னிலை பெறும் பட்சத்தில், ஜனதா தள் (இணைந்தது), அதிமுக, ஒரு சாரார் கம்யுனிஸ்டுகளே அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம்.

நிகழ்சூழல் 2

ஒரு வேளை பாஜக முன்னிறுத்தும் தே.ஜ.கூ தொகுதிகள் அடிப்படையில் முன்னிலைப் பெறும் பட்சத்தில், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி பார்ட்டி, தெலுகு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம். அதிமுகவிற்கும் அதே நிலை.ஆனால் பாஜகவினர் முன்பு நடந்ததை மறந்திருக்க மாட்டார்கள்.

நிகழ்சூழல் 3

மூன்றாவது அணி பெருவாரியான தொகுதிகள் முன்னிலைப் பெறுவது என்பது இப்போதைக்கு சொல்லமுடியாத காரியம். அப்படி ஒருக்கால் நடக்கும்பட்சத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், அஸ்ஸாம் கன பரிஷத், அகாலி தளம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மேற்சொன்ன மூன்று சூழல்களிலும் பாமக பொதுவான ஒரு ஆதரவினை, சூழலைப் பொறுத்து எடுத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பார்கள் என்று தோன்றுகிறது.

THE GAME JUST BEGINS.

Monday, March 02, 2009

நாடாளுமன்ற தேர்தல் - ஏப்ரல் 16 - மே 13

- நாராயணன்

தேர்தல் ஆணையம் இன்று நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. ஐந்து பகுதிகளாக நடக்கும் இந்த தேர்தல் 543 தொகுதிகளை உள்ளடக்கியது. ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி, மே 13 வரை, ஐந்து பகுதிகளாக வாக்களிப்பு நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் முதன்மை கமிஷ்னர் திரு. கோபால்சாமி இவைகளை அறிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். மீதமிருக்கும் 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும்.

முதல் பகுதி - ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)
இரண்டாம் பகுதி - ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)
மூன்றாம் பகுதி - ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
நான்காம் பகுதி - மே 7 (85 தொகுதிகள்)
ஐந்தாம் பகுதி - மே 13 (86 தொகுதிகள்)

முடிவுகள் மே 16இல் இருக்கும்.

சில புள்ளிவிவரங்கள்.

  • இருந்த 543 தொகுதிகளில், 499 தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருக்கிறது
  • 71 இலட்சம் போலிஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
  • 714 மில்லியன் வாக்காளர்கள் (71.3 கோடி) இந்த தேர்தலில் பங்கேற்பார்கள், அதில் 43 மில்லியன் (4.3 கோடி) புது வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பார்கள்
  • 8,28,804 தேர்தல் பூத்துகள் அமைக்கப்படும்
  • 11 இலட்சம், மிண்ணணு வாக்களிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்
  • இப்போதைய ஆட்சி காலம், ஜூன் 1 வ்ரை இருக்கிறது.புதிய நாடாளுமன்றம் ஜூன் 2 தேதி போல இருக்கும்

Sunday, March 01, 2009

காங்கிரசுக்கு அதிக இடம், திமுக தாராளம்?

தமிழகத்தில் இந்த முறை காங்கிரஸ் அதிகத் தொகுதிகளைக் கேட்கும் என இரு தினங்களுக்கு முன் செய்திகள் வந்தன. அந்தக் கோரிக்கையை திமுக ஏற்கும் என்பது இன்றைய செய்தி. விவரங்கள் கீழே:

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை விட்டுத்தர திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியிலிருந்து வெளி யேற்றப்பட்ட பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தொகுதி பங்கீடு செய்வது குறித்து கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக கூட்டணி யிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக கூட்டணியில் அண்மையில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் மக்களிடம் செல்வாக்கு குறைந் துள்ளது என்றும், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான போராட்டங் களின் போது வன்முறையை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கருதினார்கள். இதனால் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்த விலகி அதிமுகவுடன் சேர வேண்டும் என்று விரும்பினார்கள்.

இத்தகைய எண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரிடம் மட்டுமின்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களிடமும் ஏற்பட்டது. மற்றொரு பிரிவினர் வளர்ந்து வரும் கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால்தான் காங்கிரசுடன் தாங்கள் தொகுதி உடன்பாடு வைத்து கொள்ள முடியும் என்று தேமுதிக தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது.
இது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. திமுக நிலைமையை சரிசெய்ய தீவிர முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.தமிழ்நாடு பொறுப்பு வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தை, தயாநிதி மாறன் இருமுறை சந்தித்து பேசியுள்ளார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதால் அந்த தொகுதிகளில் கணிசமான வற்றை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக விட்டுத்தர திமுக தரப்பில் முன்வந்ததாக கூறப்படுகிறது.இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தாமாக வெளியேறின. ஆனால் பாமகவை திமுக தான் வெளியேற்றியது. இதனால் திமுக அணிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர திமுக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி சமரச முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். மதச்சார்பற்ற சக்திகளின் ஓட்டு பிரியக்கூடாது என்பதை அவரிடம் வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கு நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் சகோதரர் தமிழரசுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். தமிழரசின் மகள் திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்றதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்ட போதிலும், அரசியல் பேசப்பட்டதாகவும் கூறப்படு கிறது. இதன் தொடர்ச்சியாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே. மணியுடன் நேற்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

எனவே திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சங்கமம்/பிப்ரவரி 28

முன்னர் வந்த செய்தி:
(பிப்ரவரி 26/ தட்ஸ் தமிழ்)

சென்னை: தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்பதாகத் தெரிகிறது.
நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.
புதுச்சேரியின் ஒரு தொகுதியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக-16 (இதில் ஒன்றில் திமுக சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடது), காங்கிரஸ்-10, பாமக-6 (இதில் ஒன்று புதுச்சேரி தொகுதி), மதிமுக-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட்-2 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்த அனைத்து இடங்களிலும் இந்தக் கூட்டணி வென்று மாபெரும் சாதனை படைத்தது. அந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக (33 இடங்களில் நின்றது), பாஜகவுக்கு (7 இடங்களில் போட்டியிட்டது) ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.ஆகிய இடங்களில் போட்டி யிட்டன.
ஆனால், இப்போது திமுக கூட்டணி கலகலத்துப் போயுள்ளது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டன. இப்போது இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன.
இவர்களுக்கு முன்பே மதிமுக விலகி அதிமுக கூட்டணிக்குப் போய்விட்டது.
பாமகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க விரும்பினாலும் திமுகவுடன் மோதல் போக்கில் உள்ளது. திமுகவுடன் உறவை சீர் செய்தால் மட்டுமே கூட்டணியில் நீடிக்க முடியும் என அக் கட்சியின் தலைவர் ராமதாசிடம் கடந்த வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனால் பாமக திமுக கூட்டணியில் சேருமா அல்லது வழக்கம்போல் பல்டி அடித்து அதிமுக பக்கம் போகுமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் விலகி விட்டதால் திமுக கூட்டணியில் திமுக கூட்டணியி்ல் 8 இடங்கள் கூடுதலாக உள்ளன. பாமகவும் விலகிவிட்டால் திமுக, காங்கிரசுரக்கு மேலும் 6 இடங்கள் கூடுதலாக இருக்கும்.
இப்படியாக மொத்தம் 8 அல்லது 14 இடங்கள் வரை கிடைப்பதால் திமுக அதிக இடங்களில் போட்டியிட முயல்கிறது. அதே போல காங்கிரசும் கூடுதல் இடங்களைக் கேட்க முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே எஞ்சியிருந்தால் இருவருமே சரி சமமாக இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறுவதாகத் தெரிகிறது.
அதாவது புதுச்சேரியையும் சேர்த்து திமுக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் நிற்கலாம் என்கிறது.
பாமக கூட்டணிக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு 6 இடங்களைத் தந்துவிட்டு நாம் தலா 17 இடங்களில் போட்டியிடலாம் என்பது காங்கிரஸ் சொல்லும் கணக்கு.
ஆனால், கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால் 10 இடங்கள் வரை கேட்டு கடைசியில் 8 இடங்களுக்கு ஒப்புக் கொள்வார் ராமதாஸ் என்று திமுக கருதுகிறது.
அப்படி நடந்தால், மிச்சமிருக்கும் 32 தொகுதிகளில் தான் 20 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு 12 இடங்களையும் (கடந்த தேர்தலை விட 2 இடம் ஜாஸ்தி) தர திமுக நினைப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கூட்டணிக்குள் யார் வந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இடங்களை சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் நச்சரிப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைகள் தான் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்- திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு வலைவீசுவதை காங்கிரஸ் இன்னும் நிறுத்தவில்லை. அவர் கூட்டணிக்குள் வந்தால் பாமகவை வெட்டிவிடுவது என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது.
அப்படி ஒரு நிலை வந்தால் தேமுதிகவுக்கும் சேர்த்து திமுகவிடம் காங்கிரஸ் இடங்களைக் கேட்கும். அதாவது தேமுதிக-காங்கிரஸ் இடையே தான் கூட்டணியாம். திமுகவுடன் தேமுதிகவுக்கு நேரடியாக கூட்டணி இல்லையாம்.
இதைச் சொல்லித்தான் விஜய்காந்துக்கு காங்கிரஸ் வலை வீசிக் கொண்டுள்ளது. அவர் ஒப்புக் கொண்டுவிட்டால் திமுகவிடம் 25 இடங்கள் வரை காங்கிரஸ் கேட்கும் என்று தெரிகிறது. அதி்ல் 5 முதல் 8 இடங்களை விஜய்காந்துக்கு ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Wednesday, February 25, 2009

முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல்

முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார்.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.

1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.

திமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா?

நன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி

Anti-incumbency Factor தேய்கிறதா?

- நாராயணன்

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் - anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.

1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன? 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.

மேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு "qualified extension" அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும்? பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.

Monday, February 23, 2009

நெருக்கடியால் வந்த நெருக்கம்?

தினமணி

சென்னை, பிப். 22: மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைப் பிரச்னையை மையமாக வைத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் நிலை எடுத்துள்ளன.

கண்ணப்பன் சந்திப்பு: இந்த நிலையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வரும் முதல்வர் கருணாநிதியை, ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள்: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதிமுக ஒரு போதும் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.

கூட்டணியில் நீடிக்கும் நிர்பந்தம் காரணமாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு தனது நிலைப்பாட்டை மதிமுக பொதுச் செயலர் வைகோ இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அதிமுக - மதிமுக இடையே நிலவும் இந்த மறைமுக அரசியல் கருத்து வேறுபாடு ஓசையின்றித் தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் பகிரங்க அழைப்பை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே அதிமுகவும் கொண்டுள்ளதாக சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

குலாம் நபி ஆசாத்: 2001-ம் ஆண்டு பொதுத் தேர்தலை அதிமுக - காங்கிரஸ் இணைந்து சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் குலாம் நபி ஆசாத், இப்போது அதே பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வேளை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேரும் நிலையில், அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க. நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

அரசியல் முக்கியத்துவம்: ""கடந்த காலத்தில் வேலூர் சிறை வாயிலில் காத்திருந்து வைகோவை சென்று சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால், பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் முதல்வரைச் சந்தித்து நலம் விசாரிக்கும் சாதாரண பண்புகூட வைகோவுக்கு இல்லை'' என்று அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அரசியல் பின்னணியில் வைகோவின் ஒப்புதலுடன், மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

நலம் மட்டுமே...: ""ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் 50 ஆண்டுகள் அவருடன் பழகியவன் என்ற முறையிலும் முதல்வரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்வர் விளக்கினார்'' என்றார் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன்.

Friday, February 20, 2009

அஞ்சாநெஞ்சரா உங்கள் எம்.பி ?


அரசியலுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள உறவு புலிகளுக்கும் சயனைட் குப்பிகளுக்கும் உள்ள உறவைப் போல. ஒருவேளை தேவைப்பட்டால் இருக்கட்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் அவர்களைத் தங்களுடனேயே வைத்திருக்கின்றன.

முன்காலத்தில் அஞ்சா நெஞ்சன் என்றால் பகத் சிங். இப்போது அஞ்சாநெஞ்சன் அழகிரி. முன்பு மாவீரன் சுபாஷ் சந்திர போஸ். இன்று மாவீரர்கள் நம் வக்கீல்கள்

'யார் ஜெயிக்கிறானோ அவனை நிப்பாட்டு' என்று ஜெயிக்கிற வெறியில் அஞ்சாநெஞ்சர்களையும் மாவீரர்களையும் அரசியல் கட்சிகள் வேட்பாளராகக் களம் இறக்குகின்றன.

உங்கள் தொகுதியில் நிற்பவர் அஞ்சாநெஞ்சனா? அவரது கிரிமினல் ரெகார்ட் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலா?

ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தகவல் உங்கள் கைக்கு வந்து விடும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் NC <உங்கள் பின்கோடு> என்று டைப் செய்து, 567678 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும்.

அல்லது http://www.nocriminals.org/. என்ற இணையதளத்தில் போய் பெயர் தொகுதி கொடுத்தால் தகவல்களைக் காணலாம்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் அது இப்போதுள்ள MP கள் குறித்த தகவல்களைத் தருகிறது

நான் இந்த இணையதளத்திற்குச் சென்று ஒரு Check செய்து பார்த்தேன். தமிழக எம்.பிக்களில் செகுப்புசாமி (திமுக) ஈ.வி.கே.எஸ், இளங்கோவன் (காங்) எம்.அப்பாதுரை (சிபி.ஐ)தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) எஸ்.ரகுபதி (திமுக) எல்.கணேசன் (மதிமுக) கே.வெங்கடபதி (திமுக) ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக இணையதளம் தெரிவிக்கிறது.

ரகுபதி, இளங்கோவன், வெங்கடபதி ஆகியோர் துணை அமைச்சர்களாக இருக்கிறார்கள்!

மாலன்

Wednesday, February 18, 2009

"கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !"

அமர்க்களம் ஆறு-உ.பி/3
19.2.2009

முலாயம் சிங் யாதவின் கூற்று விஷமத்தனமானது, வதந்தியைப் பரப்புவதே அதன் நோக்கம் என்று பாஜக தெரிவித்துள்ளது. " சமாஜ்வாதியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை." என்று பா.ஜ.க.துணைத் தலைவர் சையத் அபாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இது போன்ற அறிக்கைகள் வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவை. சமாஜ்வாதிக் கட்சி, குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இழந்து விட்ட தனது முக்கியத்துவத்தை திரும்பப் பெற நினைக்கிறது என்றார் அவர்

பாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் காங்கிரசுடன் கூடுதலாகப் பேரம் பேசலாம் என்ற சமாஜ்வாதியின் நோக்கத்தை பாஜக முளையிலேயே கிள்ளிவிட்டது பாஜக.

முன்னர் வந்த செய்தி

தனது கட்சி பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று (புதன்கிழமை 18/2/09) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக் கட்சியின் நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்ற முலாயம் சிங், அந்த நிபந்தனைகள் என்ன என்று தெரிவிக்கவில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியையும், மூத்த தலைவர் வாஜ்பாயையும் இது குறித்துப் பேச சந்தித்ததாகத் தெரிவித்தார்.

காங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்க்குமிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி நிலவும் வேளையில் முலாயம் இவ்வாறு கூறியிருப்பது கவனத்திற்குரியதாகிறது

Tuesday, February 17, 2009

பைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)

அத்வானி தான் பா.ஜ.கவின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்து, கூகிள் ஆட்வேர்ஸில் வேறு விளம்பரன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், என்.டி.ஏ காலத்து துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷிகாவத், முஷ்டியினை மடித்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங் மற்றும் இன்ன பிற தேர்தலையே சந்திக்காத நபர்கள் எல்லாம் கட்சியில் முன்னிலைப்டுத்த படுவதும், அத்வானி/வாஜ்பாயினை விட சீனியரான தன்னை யாரும் கண்டுகொள்ளாததும் இந்த முறைப்புக்கு காரணமாக இருக்கிறது.

ஏற்கனவே பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத பட்சத்தில் [ஸ்திரத்தன்மை, நாட்டின் பாதுகாப்பு] இப்போது பைரோன் சிங் ஷிகாவத் பேசி கொண்டிருக்கும், மாற்று பிரதம மந்திரி பேச்சு இன்னமும் பா.ஜ.க தொண்டர்களை பிளவுப் படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிண்ணணியில் தான் இது நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், பழமைவாத பாஜக தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இது அல்வா சாப்பிடுவது போன்ற தருணம்.

என்னத்தான், ராமர் கோயில் கட்டுவோம் என்று சவடால் விட்டாலும், அது கட்ட முடியாது என்பது பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தெளிவாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தெரிந்துவிட்டது. இப்போது மீண்டும் அந்த சவடாலை ஆரம்பிக்கும்போது அதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

பாஜகவின் உள்கட்சி பூசல் பூதாகாரமாய் வெடித்தால், பெற போகும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளிலும் பாஜக பெரும் எதிர்ப்பையும் தோல்வியையும் சந்திக்குமென்று தோன்றுகிறது.

கேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா?

பார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸில் பங்கஜ் வோராவின் பத்தி.

இந்த பதிவு மறுவெளியீடு செய்யப்பட்டது.

சோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்

சென்னை, பிப். 16: இலங்கைப் பிரச்னை தொடர்பாக, பாமக மீது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கோபத்தில் உள்ளார். இது குறித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விளக்க, தில்லி விரைந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

முன்னதாக, தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், சென்னையில் ராமதாஸை திங்கள்கிழமை காலை சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, தில்லி பயணத்தை திங்கள்கிழமை பிற்பகல் மேற்கொண்டார் ராமதாஸ்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் இரு அணிகளாகப் பிரிந்து குரல் கொடுத்து வருகின்றன.

அதில், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாமகவும் இணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கின.

முழு அடைப்பு, மனித சங்கிலி என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

அதேசமயம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவையை உருவாக்கியுள்ளன.

பாமகவுக்கு விடப்பட்ட வேண்டுகோள்...

இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலையை விளக்கி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ""இலங்கைப் பிரச்னையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் வேறுபட்டு நிற்கின்றனர். இது ஏன் என்பதை விளக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். சிதம்பரத்தின் பேச்சு, பாமகவுக்கு விடப்பட்ட வேண்டுகோளாகவே கருத வேண்டியிருக்கிறது.

சுதர்சனத்தின் தில்லி பயணம்... மக்களவைத் தேர்தல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், கூட்டணி அடிப்படையிலும் முடிவெடுக்க தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனத்தை கடந்த வாரம் தில்லிக்கு அழைத்தது கட்சி மேலிடம்.

மக்களவைக் கூட்டத் தொடருக்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் தில்லியில் இருக்கிறார்.

சுதர்சனம் மற்றும் தங்கபாலு ஆகியோர் தமிழகத்தின் அரசியல் நிலவரம், மத்தியில் கூட்டணியில் உள்ள தமிழகக் கட்சிகளின் செயல்பாடு ஆகியவற்றை கட்சி மேலிடத்துக்கு தெளிவாக எடுத்துக் கூறினர்.

ராமதாஸýடன் சந்திப்பு:

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாûஸ சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார் சுதர்சனம்.

""மத்தியில் தங்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று சுதர்சனம் அப்போது கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்தே, ராமதாஸ் அவசர அவசரமாக தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி 17.2.2008

இது தொடர்பாக தில்லியில் இந்து நாளிதழ் நிருபர் பாலாஜிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டி:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுக -அதிமுக இரண்டையும் தங்கள் கட்சி சமதூரத்தில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் மற்றும் ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளுடன் தாங்கள் இணைந்திருப்பது இலங்கை ராணுவத்தின் மூலம் தொடர்ந்து துன்பத்திற்குள்ளாகி இருக்கும் தமிழர்களுக்காகப் போராடவே என அவர் தெளிவு படுத்தினார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி அரசிற்குத் தங்கள் கட்சியின் ஆதரவு தொடரும்.

The Hindu 17.2.2009

இந்தப் பின்னணியில் என் கேள்விகள்:

1.'ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு அவமதித்துவிட்டது' 'மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது' எனப் பேசி வந்திருக்கும் மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரசையே தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கோருமா?

2.அல்லது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டங்களில் பங்கேற்று வரும் பா.ஜ.கவுடன் அணி சேருமா?

3.அல்லது தனி ஒரு அணியாக இலங்கை பிரசினையை முன்னிறுத்திக் களமிறங்குமா?

பா.ம.க. என்ன செய்யும்? என்ன செய்ய வேண்டும்? வாசகர்களே உங்கள் கருத்தென்ன?

மாலன்