Showing posts with label மூன்றாவது-அணி. Show all posts
Showing posts with label மூன்றாவது-அணி. Show all posts

Thursday, March 05, 2009

India Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல்

சமீபத்தில் கவனத்தை ஈர்த்த பதிவுகள்:

முதற்கண் மேற்கோள்

நான் வாக்களிக்கறவன்(ள்) ஜெயிக்கணும்னு நினைக்கறது வேற. ஜெயிக்கறவனுக்கு என் வாக்கு போகணும்னு நினைக்கறது வேற. - பத்ரி

~oOo~

உண்மைத்தமிழன் கிசுகிசுக்களையும் கூட்டணி கணக்குகளையும் ஹேஷ்யங்களையும் கொடுக்கிறார்: தேர்தல் ஸ்பெஷல்: இன்றைய அரசியல் நிலவரம் - 04-03-2009

ஒரு வதந்தி:

குலாம்நபி ஆசாத் இன்னொரு திருப்பமாக விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைத்துள்ளார். விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்தேறியதாக டெல்லி வட்டாரத் தகவல். 7 தொகுதி கேட்டு 5 உறுதியாகியுள்ளதாம். கூடவே ஒரு தொகுதிக்கு '2 சி' என்று தேர்தல் நிதியும் தரப்படுமாம்.

ஒரு நிதர்சனம்:

பா.ம.க.வின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்தான். இந்த முறை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என்று தனித்து நிற்க வேண்டி வரலாம் என்கிறார்கள்.

~oOo~

அமெரிக்காவிற்கு மட்டும்தான் மாற்றம் என்னும் தாரக மந்திரம் வேலை செய்ய வேண்டுமா?

தமிழகத்திற்கு மாற்றம் கோரும் பதிவு பார்த்தேன்.

அமெரிக்காவில் டெமொக்ரட்சும் ரிபப்ளிகன்சும் அல்லாத க்ரீன் கட்சி (பசுமைத் தாயகம்?) போல் நிறைய மாற்று சித்தாந்தத்தை வலியுறுத்தும் முன்னணிகள் இருக்கின்றன.

தேர்தல் புறக்கணிப்பு அவசியமா? மாற்றம் சாத்தியமா?
கருணாநிதியாகட்டும், காங்கிரஸாகட்டும், அதிமுகவாகட்டும் - ஈழப்பிரச்சினை பற்றியெறியும் போதும் , நமது தொப்புள் கொடி உறவுகள் குண்டடி பட்டுச் சாகின்ற போதும் கவலையொன்றுமின்றி கூட்டணிக் கணக்குகளை போடுகிறார்கள்.

இன்னமும் தமிழுணர்வு கொண்ட கட்சிகளாக நாம் நம்பும் மதிமுக , பாமக , வி.சிறுத்தைகள் ஆகட்டும் , தேர்தல் என்று வந்தவுடன் சீட்டுக்களுக்காக தாம் போட்ட கோசத்தை மறந்து எத்தனை சீட்டு என்று பேரம் பேச ஆரம்பித்துவிட்டன. விஜயகாந்த் பற்றியோ , சரத்குமார் பற்றியோ பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை.

குழலி, மதிபாலா, தமிழ் சசி, கார்த்திக்ராமஸ் மற்றும் மாற்றம்நம்பி ஆகியோர் தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணிக்கான தேவையையும், எவ்வாறு அதை அமைப்பது என்பன குறித்தும் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

~oOo~

ஆந்திராவில் 'மாற்றம் கொண்டுவருகிறேன்' என்று தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடுவிற்கும் காங்கிரஸ் ராஜசேகர ரெட்டிக்கும் மாற்றாக களத்தில் குதித்த சிரஞ்சீவிக்கு பொதுவான கட்சி சின்னம் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் மூன்றாம் அணியாக வரமாட்டார் என்று சந்தேகிக்கப்படும் ரஜினியின் நிலை என்னவென்று ஆர். முத்துக்குமார் சொல்கிறார்: இந்தியா 360 டிகிரி

தேர்தல் பிரசாரத்தில் ரஜினி!
கலைஞர்: இப்போ கேப்டனு, பைலட்டு, டிரைவருன்னு ஏகப்பட்ட பொடிப்பசங்க வந்து பாலிடிக்ஸ் பண்றானுங்க!

ஜெயலலிதா: யெஸ்.. நீங்க பிரசாரம் பண்ண்ணும்.. பட்.. எனக்கு இல்ல.. கருணாநிதி கூட்டணிக்கு.. (என்று ஜெ சற்று நிறுத்த, ரஜினி ஆச்சர்யமாகப் பார்க்கிறார்)

~oOo~

ஜெயலலிதா, ரஜினி என்றால் குட்டிக் கதை வேண்டுமே. அக்னி பார்வை சொல்கிறார்: தேர்தல் 2009

லோக் சபாவா? லொள்ளு சபாவா

ஒருவர் தன் வீட்டில் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதை வீட்டின் வேலைகளை செய்ய பழக வைத்தார். குரங்கு எந்த வேலையை நன்றாக செய்தாலும் சரி பிரம்பால் ஒரு அடி விழும்.

ஒரு நாள் தன் நண்பரை, தன் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தார். நண்பர் வந்ததும்,
குரங்கிடம் நாற்காலி போட சொன்னார்; ஒழுங்காக போட்டது ஒரு பிரம்படி.

தண்ணீர் கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்தது; ஒரு பிரம்படி.

விசிறி கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்த்து; ஒரு பிரம்படி.

நண்பருக்கு சற்று கோபம் வந்தது. 'அது தான் ஒழுங்காக வேலை செய்கிறதே, பின்பு ஏன் பிரம்பால் அடிக்கிறாய்? விடு! அது ஒழுங்காக நடந்துக்கொள்ளும். அடிக்காதே' என்றார். அவரும் ஒப்புக்கொண்டார்.

பின்பு மதிய நேரம் குரங்கை இலை போட சொன்னார். இலை போட்டது ஆனால் அடி விழவில்லை.அது இலையை மெதுவாக பிராண்டியது. அடி விழவில்லை. சாம்பார் சட்டிக்குள் கை விட்டு சிரித்தது, அடி விழவில்லை. மோரை எட்டி உதைத்து அடி விழவில்லை. பொறுத்து பார்த்தவர், அடுத்த அது செய்த வேலைக்கு பிரம்படி கொடுக்க ஆரம்பித்தார், குரங்கு வழிக்கு வந்த்து.

இந்த கதை தான் போது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும். அவர்களை மக்கள் கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால்..

~oOo~

'தேவையா இப்படி ஒரு பட்டன்?' கேட்டதிற்கு பதிலாக எம் எஸ் வி முத்து எழுதுகிறார்: குர‌ல்வ‌லை

தேர்தல் நடத்தி விட்டால் ஜனநாயகமா?

ஓட்டுப் போட்டாலே நம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க.

நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா?

யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா?

மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும்.

~oOo~

அதனால் தேர்தலே வேண்டாமா? 'இந்தியா ஒளிர்கிறது' என்று பத்தாண்டு(தானே?) முன்பு பாஜக சொன்னது போல், 'ஜெய் ஹோ' என்று காங்கிரஸ் பல்லவி பாடுவது போல் பிரதிபா பட்டீல் ஆட்சி, கவர்னர் பர்னாலா அரசு என்று செட்டில் ஆகிவிடலாமா என்னும் கேள்விகள் வெங்கடேஷின் பதிவில் தொக்கி நிற்கின்றன: தேர்தல் நெருங்கிவிட்டது

பொருளாதார சரிவு நிலையில் இச்செலவு தேவையா?

ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

~oOo~

ஏப்ரல் 16-ல் மக்களவை தேர்தல் குறித்து உயிரோசையில் மனோஜ்:

ஜனநாயகமும் பணவிரயமும்

  • வரும் மக்களவைத் தேர்தலில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும்.
  • மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 1300 கோடி செலவிடப்படும்.
  • மத்திய, மாநில அரசுகள் தனியாக ரூ. 700 கோடி செலவு செய்யும். (போட்டோ ஐ.டி. கார்டு, எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷின்கள் போன்றவற்றுக்காக).
  • தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ரூ. 1650 கோடி செலவு செய்யும்.
  • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா மட்டும் ரூ. 1000 கோடி வரை செலவு செய்யும்.
  • வாக்காளர்களுக்கு பணம் வழங்க அரசியல் கட்சிகள் செலவு செய்யும் தொகை ரூ. 2500 கோடியை தொடும்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது.


~oOo~

கடைசியாக அருள்வாக்கு

Election prediction of the day: அடுத்த பிரதம மந்திரியாக மாயாவதி பதவியேற்பார். கம்யுனிஸ்ட்கள் அமைச்சரவையில் இடம்பெற்றும் காங்கிரஸ் வெளியில் இருந்தும் ஆதரவு தரும்.

Saturday, February 14, 2009

அலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்?

- நாராயணன்

தேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

டெல்லியில் ஷீலா தீக்‌ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.

இது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.

  • பொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு

  • தீவிரவாத அச்சுறுத்தல்

  • பணப்புழக்கம்

  • மாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்

  • உணவுப் பொருட்கள் விலையுயர்வு/வீழ்ச்சி

  • விவசாயிகளின் பிரச்சனைகள்


இது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.

மறுபதிப்பு பதிவு

Tuesday, February 10, 2009

காங்கிரஸ் அலை வீசுகிறதா?

இன்றைய எகனாமிக் டைம்ஸ் தினசரியில் எம்.கே.வேணு, காங்கிரஸ் முன்னிறுத்தும் யு.பி.ஏ விற்கு சாதகங்கள் அதிகம் என்று எழுதியிருக்கிறார். அவர் எழுதியதன் சாராம்சமும் என் பார்வைகளும் கீழே.

சாராம்சம்

இந்தியாவின் ஒட்டுப் போடும் மக்கள் தொகை சராசரியாக 67 கோடி. இதில் 55% 6 மாநிலங்களில் இருக்கிறது - உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பீஹார், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு. இந்த 6 மாநிலங்களில் 291 தொகுதிகள் (மொத்தம் 545) இருக்கின்றன. பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட இன்றைக்கு முக்கியமாக தேசிய ஆட்சியினை நிறுவும் அதிகாரத்தில் இருக்கின்றன. இம்மாநிலங்களில் நிலவும் மாநில அரசியல், சர்ச்சைகள், மாநில அளவிலான பிரச்சனைகளை சார்ந்து பார்த்தால், காங்கிரஸிற்கே சாதகமான நிலையுள்ளது.

சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸை நம்பி தான் ஆக வேண்டும். இல்லாவிடில் மாயாவதியினை தூக்கியடிக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில் சமாஜ்வாடி கட்சி 35 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது (மொத்தம் 80/81 தொகுதிகள்). இப்போதிருப்பதை அப்படியே தக்கவைத்து கொண்டு காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றும் சாத்தியங்கள் இருக்கின்றன.மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் என்.சி.பிக்கும் இதே மாதிரியான ஒரு நிலைமை உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையின் மீதும் அசையாத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கிறது.

மன்மோகன் சிங்கினை முன்னிறுத்தி, இப்போதிருக்கும் அரசியல்/பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் என்று காங்கிரஸ் திடமாக நம்புகிறது. ஒரு பொருளாதார வல்லுநரின் தலைமையில் நாடு இருந்தால், இப்போது இருக்கும் உலகளாவிய பொருளாதார சிக்கலிலிருந்து நாட்டினை முன்னேற்ற, சிக்கல்களை களைய முடியும் என்கிற வாதத்தினை காங்கிரஸ் முன்வைக்கிறது. இப்போதே காங்கிரஸ் தன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி உடன்பாடு நடவடிக்கைகளில் இறங்க தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்கிற இரட்டை அஸ்திரங்களில் மூன்றாவது அணி பலவீனமாக இருக்கும். அந்த ஸ்திரத்தன்மை, பாதுக்காப்பினை தான் இரண்டு தேசிய கட்சிகளும் முன்வைக்கின்றன. காங்கிரஸுக்கு இன்னொரு பலமான விஷயம், பா.ஜ.க போல அதற்கு மத சாயம் இல்லாமலிருப்பது. மதச்சார்ப்பின்மை என்பதே காங்கிரஸின் இன்னொரு சீட்டாக முன்வைக்கப்படும்.

கெனிஷிய தியரி தான் இன்றைக்கு உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார விடிவாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஒரு கெனிஷியவாதியாக பார்க்கப்படலாம் கடந்த திட்ட கமிஷன் கலாந்தாய்வில் கலந்து கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிகில்ட்சு சொன்னது “ இன்றைக்கு வலது சாரி என்று யாருமேயில்லை. எல்லோரும் கெனிஷிய தியரியினை எப்படி இடம்பெற செய்யலாம் என்பதில் தான் போட்டி போடுகிறார்கள்”.

ஒரு வேளை, தேர்தல் முடிந்து மீண்டும் கம்யுனிஸ்டுகள் ஒன்றாக சேரலாம் என்கிற பட்சத்தில், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தினை வைத்துக் கொண்டு, காங்கிரஸுக்கு அதுவும் சாதகமாக முடியும்.

என் பார்வை

மேற்சொன்ன வகையில் பார்க்கும் போது கண்டிப்பாக காங்கிரஸிற்கு சாதகமே. ஆனால், மக்களின் மனதில் தொடர்ச்சியாக ஒரு anti-incumbency விஷயம் ஒடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு சிக்கலான மனநிலை.

மாநிலங்களின் பலத்தினை வைத்து கொண்டு தான் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன்சிங் வரையிலான கூட்டணி அரசுகள் ஆட்சிபுரிந்திருக்கின்றன. மாநிலங்கள் / பிராந்திய கட்சிகள் இன்றைக்கு தேசிய அளவிலான அரசியல்/சமூகம்/பொரூளாதாரம் ரீதியிலான அச்சுறுத்தல்களையும், சாதகங்களையும் அளிக்கின்றன. முக்கியமாக தெற்கில் பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட அசுர பலத்தோடு இருக்கின்றன. கர்நாடகாவில் பா.ஜ.கவும், ஆந்திராவில் காங்கிரஸும் ஆண்டாலும், அதற்கு இணையான பலம் பிராந்திய கட்சிகளால் மட்டுமே பெற முடிகிறது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தேசிய கட்சியும் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவில் காங்கிரஸும், கம்யுனிஸ்டுகள் மாறி மாறி ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே நிலை. அப்படி பார்க்கையில், பா.ஜ.கவினை விட காங்கிரஸிற்கு தெற்கில் செல்வாக்கு அதிகம். ஆக இது ஒரு சாதகமான பார்வை. தற்போதைய ராஜஸ்தான்,டெல்லி வெற்றிகளும் காங்கிரஸிற்கு ஊக்கத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் தெற்கில் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி அரசுகள் மீது கடுங்கோவமும், எரிச்சலோடும் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை (உ-ம் ஆந்திரா, தற்போதைய தமிழ்நாடு). பா.ஜ.க தெற்கிலிருக்கும் செல்வாக்கு மிகக் குறைவு. பா.ஜ.கவினை விட கம்யுனிஸ்டுகளுக்கு தெற்கில் செல்வாக்கு அதிகம்.

ஆகவே சாதகங்கள் அதிகமிருந்தாலும் its too early to predict the voters’ mind.

இந்த பதிவு தேர்தல் 2009லிருந்து மறுவெளியீடு செய்யப்பட்டது.