Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Thursday, February 19, 2009

Gross Domestic Politics

-நாராயணன்

சவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

தேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.

இத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்?

மறுவெளியீடு செய்யப்பட்ட பதிவு

Saturday, February 14, 2009

அலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்?

- நாராயணன்

தேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

டெல்லியில் ஷீலா தீக்‌ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.

இது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.

  • பொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு

  • தீவிரவாத அச்சுறுத்தல்

  • பணப்புழக்கம்

  • மாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்

  • உணவுப் பொருட்கள் விலையுயர்வு/வீழ்ச்சி

  • விவசாயிகளின் பிரச்சனைகள்


இது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.

மறுபதிப்பு பதிவு

Wednesday, February 11, 2009

இத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்

பாஸ்டன் பாலா

இத்தாலியின் சோனியா இந்தியாவின் காங்கிரஸ் தலைவி என்பதைத் தாண்டி
  • ஒரு முக்கிய தலைவர் இருந்தாலும், பல கட்சி அரசியல்
  • ஆளுங்கட்சி கூட்டணியில் எப்போதும் இடம்பிடிக்கும் அரசியல்வாதிகள்; கம்யூனிஸ்ட்
  • நிலையற்ற நடுவண் அரசு; எப்போது கவிழும், எப்பொழுது நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெறும் என்று தெரியாது
  • அவசர நிலை (எமர்ஜென்சி) போல் தன்னிச்சையாக அரியாசனம் அமர்வது
  • முக்கிய தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவது; நீண்ட கால மாஃபியா தொடர்பு
  • பல்கிப் பெருகி எங்கும் வியாபித்த ஊழல் + லஞ்சம்; குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் பாதகமில்லாத பொதுசேவை வாழ்க்கை
  • எல்லா அணியினரையும் திருப்தி செய்ய பல் அடுக்கு அமைச்சரவை
  • அரசின் கைப்பாவையாக செயல்படும் ஊடகம்
என்று நிறைய சொல்லலாம்.

இடாலி குறித்து நன்கறிந்த நண்பர் அனுப்பிய மடலில் இருந்து:

இத்தலி ஒரு அவியல்.

அதுவும் இந்தியா மாதிரி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆனால் முன்பே பண்பாட்டால் பலவிதமாக இணைந்திருந்த ஒரு நாடு. அது சாம்ராஜ்யத்தின் தலைமையாகவும், காலனி போலவும் இருந்த ஒரு அமைப்பு. பின்பு உலக யுத்தங்களிலும், ஃப்ரெஞ்சு எதிர் இதர யூரோப்பியப் போர்களிலும் இடையில் சிக்கித் திண்டாடிய ஒரு நாடு.

இன்னும் பல வகை மொழிகள் புழங்குவதால் மொழி இணைப்பு முற்றிலும் ஏற்படாத ஒரு நாடு. ஹிந்தி இந்தியாவில் பரவலாகப் புழங்கு மொழியாக இருந்தாலும் பல மாநிலங்களில் அது ஏற்கப்படாது இருக்கும் நிலை உள்ளது போன்ற ஒரு சிக்கல் இத்தாலிய மொழிக்கு இல்லை என்றாலும், போட்டி மொழிகள் நிறையவே உள்ளன. ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்லொவீன், போன்ற இதர யூரோப்பிய மொழிகளோடு பல குறுமொழிகள் அல்லது பிராந்திய / மாநில மொழிகளும் உள்ளன.

உதாரணமாக சிஸிலிய மொழி, ஆர்பொரீஷே, மேலும் லொம்பார்ட் ஆகிய சிறுபான்மையினரின் மொழிகளும் உள்ளன. இன்னும் கிட்டே நெருங்கிப் போகப் போக இத்தலிக்குள் எத்தனை ஒருங்கிணையாத சிறுபான்மையினர் உள்ளனர் என்பது தெரிய வரும்.

இத்தோடு அங்கு ஜனன-மரணக் கணக்கை தொகுத்தால் நிகரம் இழப்புதான். அதாவது ஜனத்தொகை வருடாவருடம் குறைகிறது. இதைப் புலம்பெயர்ந்தோர் அல்லது குடிபெயர்ந்து வருவார் மூலம் இத்தலி ஈடுகட்டுகிறது என்றாலும் வருபவர் அனேகமாக அரபியர் அல்லது ஆப்பிரிக்கராகத்தான் இருக்கிறார்கள். ஓரளவு அல்பேனியர் வந்து கொண்டிருந்தனர்,

இப்போது அவர்களுக்கு முன்னாள் யூகோஸ்லாவியாவின் சிதிலங்களான கோசவோ, மாசிடோனியா ஆகிய பகுதிகளிலும், ஓரளவு ரஷ்யாவின் எல்லை மாநிலங்களிலும் இடம் கிடைக்கிறது அதனால் அவ்வளவு இத்தலிக்குக் குடி வருவதில்லை.

உள்வருபவர்கள் இத்தலியின் பெருநகரங்களுக்கே போய்ச் சேருகிறார், எனவே இன்னும் கிராமப்புறங்களில் ஜனத்தொகை குறைந்து கொண்டே போகிறது. இத்தலியின் பொருளாதாரத்தில் ஏதோ 2% போலத்தான் விவசாயத்தை நம்பி இருக்கிறது. சிஐஏ தகவல் பக்கத்தில் காண்பதை வைத்துப் பார்த்தால் விவசாயம் எத்தனை சிறியது பாருங்கள். சர்வீஸஸ் என்று குறிப்பது சுமார் 71 சதவீதம் என்று சொல்கிறது இது.

நம்பவே முடியவில்லை.

யாருக்கு சேவை செய்கிறார்கள் முக்கால் பாக மக்கள்? எதைக் கொடுத்து எதை வாங்கி?

யூரோப்பில் இருந்து இறக்குமதி செய்து இங்கிருந்து எதையெல்லாமோ ஏற்றுமதி செய்து பிழைக்கிறார்கள் போல் இருக்கிறது. உல்லாசப் பயணிகள் கணிசமான பகுதி பொருளாதாரத்தைப் பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

உதவி / ஆதாரம்:

1. BBC NEWS | Europe | Country profiles | Country profile: Italy

2. CIA - The World Factbook -- Italy

3. Italy - Wikipedia, the free encyclopedia

இந்தியத் தேர்தல் வரப்போகும் இந்த சமயத்தில், 2008ன் இந்த மேற்கோள் இந்தியாவுக்கும் பொருந்துகிறது:
"There is an alarming distance separating the Italian political world and the economic reality in the rest of the country."