Friday, April 24, 2009

தினம் ஒரு தேர்தல் -8

சிவகாசி, ஏப். 23: அமைச்சர் என்ற முறையில் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு வசதியை "சன்' டி.வி.க்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியதை மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) கண்டுபிடித்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து சிவகாசியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:

தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.எஸ்.என்.எல். மூலம் 323 தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டன. அவை அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டவை. உரையாடல் மட்டுமின்றி, ஒலி, ஒளி காட்சிகளையும், தகவல் தொகுப்புகளையும் உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அதன் மூலம் அனுப்பலாம்.

இந்த இணைப்புகளுக்காக தயாநிதி வீட்டிலேயே ஒரு தொலைபேசி இணைப்பகத்தை பி.எஸ்.என்.எல். அமைத்தது. அமைச்சர் என்ற முறையில், அலுவலகப் பயன்பாட்டுக்காக தரப்பட்ட சிறப்பு இணைப்பு இது.

ஆனால் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு செலவில் இந்த இணைப்பு "சன்' டி.வி. அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாகத் தெரியவருகிறது. அமைச்சர் வீடும், "சன்' டி.வி. அலுவலகமும் ரகசியமாக கேபிள் வழியாக இணைக்கப்பட்டனவாம். அமைச்சருக்கு அரசு கொடுத்த தொலைத்தொடர்பு இணைப்புகளை, அமைச்சர் பயன்படுத்துவது போல் வெளியில் தோற்றத்தை ஏற்படுத்தினர் என்றும் ஆனால், இவற்றைப் பயன்படுத்தியது சன் டி.வி.தான் என்றும் சி.பி.ஐ. கண்டுபிடித்ததாம்.

தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து மட்டும் 2007 மார்ச் மாதத்தில் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 தொலைபேசி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. "சன்' டி.வி.யில் இருந்து திரைப்படங்கள், பாடல்கள், தொடர்கள் போன்ற ஒலி, ஒளி காட்சிகள் உலகின் பல இடங்களுக்கும் அரசு தொலைபேசியைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளன என்ற உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. இதற்கான ஆதாரங்களோடு கூடிய தகவல்களை சுற்றுப் பயணத்தில் ஒருவர் என்னிடம் கொடுத்துள்ளார்.

அரசு வசதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் தயாநிதி மாறனும், அவர் சம்பந்தப்பட்ட சன் டி.வி. நிறுவனமும், பெருமளவில் லாபம் அடைந்திருப்பதையும், நாட்டிற்கு கிடைத்திருக்க வேண்டிய வருமானம் கொள்ளை போயிருப்பதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது என்று அதிலிருந்து தெரிகிறது.

முதல்வர் கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் சண்டையிட்டுக் கொண்டபோது, இது தொடர்புடைய எல்லா உண்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 2007 செப்டம்பர் மாதமே இந்த முறைகேடு குறித்த அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ. திரட்டி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.

தயாநிதி மாறன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு கோப்புகள் தயாராகி, திமுக மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் பார்வைக்கும் சென்றிருக்கிறது. இந்தத் தகவல் பிரதமரின் பார்வைக்கும் வந்திருக்கும். மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அவர்கள், கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சராசரி இந்திய குடிமகனுக்கு சாதாரண தொலைபேசியே எட்டாத தூரத்தில் இருக்கும்போது, அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன் தன் வீட்டில் தொலைபேசி இணைப்பகமே அமைத்துக் கொண்டார். அதை முறைகேடாக சன் டி.வி. பயன்படுத்தி பல கோடி ரூபாய் பயன்பெற்றுள்ளது.

கருணாநிதியின் குடும்பம் இணைந்துவிட்ட பிறகு, எல்லா ஊழல்களும் மூடி மறைக்கப்பட்டுவிட்டன.

நன்றி: தினமணி 24.4.2009

இன்று (26.4.2009) தினமணியில் வெளியாகியுள்ள இதற்குத் தொடர்பான இரு செய்திகள்:


ஜெயலலிதாவுக்கு தயாநிதி நோட்டீஸ்

சென்னை, ஏப். 25: தன் மீது அவதூறாக குற்றஞ்சாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று கோரி மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிநவீன வசதிகள் கொண்ட தொலைபேசி இணைப்புகள் செயல்படக் கூடிய இணைப்பகம் ஒன்றை தயாநிதி மாறனின் வீட்டில் பி.எஸ்.என்.எல். அமைத்துக் கொடுத்ததாகவும், அதை அவருக்கு தொடர்புடைய "சன்' டி.வி. தவறாகப் பயன்படுத்தியதாகவும் தமக்குத் தகவல் வந்திருப்பதாக ஜெயலலிதா கூறியிருந்தார்.

சிவகாசியில் வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் இதை ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்தப் புகார் ஆதாரம் அற்றது என்றும் இதனால் தமக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் தயாநிதி மாறன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா கூறியிருப்பதாக தயாநிதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளவாறு எதுவுமே நடக்கவில்லை என்று தெரிந்திருந்தும் அவ்வாறு குற்றம் சாட்டியிருப்பதாகவும், தேர்தல் பிரசாரத்துக்காக அவ்வாறு கூறியிருப்பதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு செயற்கைக்கோள் மூலம்தான் செய்யப்படுமே தவிர, ஜெயலலிதா கூறியதைப் போல தொலைபேசி இணைப்பு மூலம் செய்யப்படுவதில்லை என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

தயாநிதி மீது மத்திய புலனாய்வுக் குழு விசாரணை நடப்பதாக கூறியிருப்பதும் தவறானது. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும், ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
___

6 மாதங்களாக விடை தெரியாத கேள்வி:ஆ. ராசா கேள்வி -தயாநிதி மெளனம்

சென்னை, ஏப். 25: செல்போன் பயன்பாட்டுக்கான அலைக்கற்றை பதுக்கல் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா 6 மாதங்களுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு அத் துறையின் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இரண்டாம் தலைமுறை செல்போன் சேவையில் கூடுதலாக 6 நிறுவனங்களுக்கு "முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அனுமதி வழங்கியதால் மத்திய அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாயின.

அதைத் தொடர்ந்து சென்னையில் மத்திய பத்திரிகை தகவல் மைய வளாகத்தில் அக்டோபர் 10-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆ. ராசா.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். தனக்கும், தான் சார்ந்துள்ள திமுகவுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஏற்கெனவே இத் துறைக்குப் பொறுப்பு வகித்த அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன்தான் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்புவதாக அப்போது ராசா குற்றஞ்சாட்டினார்.

முதல்வர் கருணாநிதி குடும்பமும், தயாநிதி மாறன் குடும்பமும் அப்போது பிரிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

""நான் பதவி ஏற்பதற்கு முன்பு வரை செல்போன் அலைவரிசை கிடையாது என்று சொல்லி வந்தார்கள். நான் பதவி ஏற்ற பிறகு ஆய்வு செய்ததில் 30 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு செல்போன் அலைவரிசை பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டுபிடித்தேன். அதைக் கொண்டு 6 புதிய செல்போன் நிறுவனங்களைத் தொடங்க முடியும். அதனால் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கும். அவ்வாறு அதைப் பயன்படுத்தாமல், தெரிந்தோ, தெரியாமலோ மறைத்தவர்களைப் பற்றி யாரும் கேட்கவில்லை'' என்றும் செய்தியாளர் கூட்டத்தில் ராசா கூறினார்.

ராசாவுக்கு முன்பு அப் பதவியை வகித்தவர் தயாநிதி மாறன். எனவே அலைக்கற்றை பதுக்கல் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அத் துறையினர் கூறுகின்றனர்.

புதிய நிறுவனங்களுக்கு அனுமதி தந்தால் ஏற்கெனவே செல்போன் சேவை அளித்து வரும் நிறுவனங்கள், கூடுதல் போட்டியை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால், "ஏதோ ஒரு காரணத்துக்காக' இவ்வாறு அலைக்கற்றை பதுக்கப்பட்டது என்பது அவருடைய துறையின் வாதம்.

அலைக்கற்றை பதுக்கலுக்காக தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று ராசா கூறிவிட்டார்.

ராசாவின் இந்தக் குற்றச்சாட்டு பற்றி தயாநிதியின் பதிலைப் பெற அடுத்த 2 தினங்கள் செய்தியாளர்கள் முயன்றும் பதில் கிடைக்கவில்லை.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, அல்லது தாம் அமைச்சராக இருந்த காலத்தில் தவறு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தயாநிதி இதுவரையில் விளக்கம் அளிக்கவில்லை.

அமைச்சர் என்ற முறையில் நவீன தொலைபேசி இணைப்பக வசதியை சன் டி.வி. தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியதற்காக ஜெயலலிதாவுக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாநிதி மாறன்.

இருந்தபோதிலும், ராசாவின் குற்றச்சாட்டுக்கு இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியானால், ராசாவின் தகவலில் உண்மை ஏதும் இருக்குமோ என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும் என்பதை திமுகவினரே ஒப்புக்கொள்கின்றனர்.

இப்போது கருணாநிதியின் குடும்பமும், தயாநிதியின் குடும்பமும் ஒன்றுசேர்ந்துவிட்ட நிலையில், இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் உள்ளது.

இருந்தபோதிலும், அலைக்கற்றை பதுக்கியவர் மீது என்ன நடவடிக்கை என்று இப்போதைய அமைச்சரும், பதுக்கலுக்கு தான் காரணமா என்பது பற்றி முன்னாள் அமைச்சரும் தேர்தல் நேரத்திலாவது விளக்கம் தர முன்வர வேண்டும் என தமிழக வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர் என அரசியல் நடுநிலையாளர்கள் கோருகின்றனர்.

இந்தச் செய்தியுடன் அசை போட சில பின்னணித் தகவல்கள்:

  • தயாநிதி மாறன் பதவி விலகியது மே 13 2007
  • கருணாநிதி குடும்பம் மீண்டும் ஒருங்கிணைந்தது டிசம்பர் 1 2008
  • விலகியிருந்த நாட்களில் சன் குழுமம ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டது
  • தயாநிதியின் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையின் கோப்பு ராசாவிடம் அனுப்பப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார்.
  • குடும்ப இணைப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடுமோ?

இந்த ஊழல் புகார் குறித்த உங்கள் வாக்குகளை இடப்புறம் உள்ள பெட்டியில் பதிவு செய்யலாம்



7 comments:

UMA said...

நம்பும்படி இல்லை. இதே போல் தான் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று முன்பு ஜெயா குற்றம் சொன்னார் . அவை இல்லை என்றாகிவிட்டது. பொது துறை மற்றும் அரசு துறைகளின் நெறி முறை ( வழிகாட்டுதல் ) படிதான் spectrum ஒதுக்கப்பட்டது. அதை பெரிதாக ஊதிய எதிர்கட்சிகள் இப்போது அதை விட்டு விட்டன.

ராம்கி said...

மாலன் சார்!

இந்த ஊழல் எப்போது நடந்தது. நீங்கள் சன் குழுமத்தில் இருந்து விலகிய பிறகா?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

"இலங்கைத் தமிழர்களின் இன்றைய இன்னலுக்கு காரணம்" என்ற வாக்கெடுப்பில் சிங்கள அரசைப்பற்றி ஒப்புக்கு கூட ஒரு தெரிவு இல்லையே? வாழ்க உங்கள் வாக்கெடுப்பு !

மாலன் said...

ஆம், ராம்கி. நான் சன் குழுமத்திலிருந்து ஏப்ரல்/மே 2006ல் விலகி விட்டேன். நான் அங்கிருந்த போதும் தொழில்நுட்பத்துறையின் முடிவுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இங்கு நான் வெளியிட்டிருப்பது என் கட்டுரையல்ல. தினமணி செய்தி.

மாலன்

மாலன் said...

உமா,
>>அதை பெரிதாக ஊதிய எதிர்கட்சிகள்<<

ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினகரனும், சன் குழும ஊடகங்களும் கூட செய்தி வெளியிட்டனவே.

அதை இப்போது எதிர்கட்சிகள் விட்டு விட்டதாக எனக்குத் தெரியவில்லை

மாலன்

Joe said...

இதெல்லாம் சும்மா பத்திரிக்கைகளுக்கு தீனி போடுமே தவிர, வேறு எந்த பயனுமில்லை.
இந்த நாட்டில் அரசியல்வியாதிகள் லஞ்ச ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, எந்த குற்றத்துக்கும் சிறை சென்றதில்லை.

அப்படியே சிறையில் அடைத்தாலும், சில நாட்களில் வெளியில் வருவதற்கு சில லட்சங்களை அள்ளி விட்டால் போதும்.

குப்பன்.யாஹூ said...

ஊழல் செய்தி கேட்டு கண்கள் பணித்தது, இதயம் இனித்தது.

திமுகவில் ஒரு வட்ட பிரதிநித்யாகவோ அல்லது ஒன்றிய செயலாரகவோ ஆகாமால் நேரடியாக மத்திய அமைச்சர் பதவி .

இத்தனை பேசும் ஜெயலலிதா மத்திய சென்னையில் இன்னும் பொருத்தமான பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம் (அதிமுக, மதிமுக கூட்டணியுடன் சரத்குமார், அல்லது இல கணேசன் அல்லது சுப்ரமணி சாமி அல்லது சந்திரலேகா அல்லது முகில் போன்ற கடினமான வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம்.).

குப்பன்_யாஹூ