Sunday, April 19, 2009

மூட் மீட்டர்-1

Mood Meter
கட்சிகளுக்குள் நிலவும் மனநிலை குறித்து ஊடகங்கள் தரும் தகவல்

திமுக:

சென்னை, ஏப். 18: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக -காங்கிரஸ் இடையே ஒற்றுமை இல்லாதது பற்றி முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார். 2004-ல் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வென்ற திமுக தலைமையிலான கூட்டணியில் இப்போது காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் மட்டுமே மிஞ்சியுள்ளன. இதில் புதிதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேர்ந்துள்ளது. இடதுசாரிகள் விலகிச் சென்றபோதும், கூட்டணியில் இருந்து நீக்கப்பட்ட பா.ம.க.வை மீண்டும் சேர்க்கத் தயங்கியபோதும் அதிகம் கவலைப்படாத கருணாநிதி, காங்கிரஸ் கட்சியை மட்டும் தங்களுடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறார். சொல்லப் போனால், காங்கிரஸ் ஆதரவு இருந்தால்தான் திமுக ஆட்சியே நீடிக்கும் என்ற நிலைமை. ஆனால், கட்சியில் இரண்டாம் நிலையில் உள்ளவர்களிடையே காங்கிரஸ் கட்சியை அரவணைத்துச் செல்லும் போக்கு இல்லாததால் காங்கிரஸ் கட்சியினரிடம் அதிருப்தி உருவாகியுள்ளது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு செயல்வீரர்கள் கூட்டங்கள் பல இடங்களில் நடக்கின்றன. தென் சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாள்களாக நடந்த செயல்வீரர்கள் கூட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் அழைக்கவே இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் சனிக்கிழமை மாலை நடந்தது. இக் கூட்டத்துக்கான மேடையில் முதலில் "உதயசூரியன்' சின்னம் மட்டுமே பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் "கை' சின்னம் வைக்கப்படவில்லை. காலையில் மேடையைப் பார்வையிட்ட கட்சிப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை. கை சின்னம் இல்லையே என சிலர் சுட்டிக் காட்டியபோதும் கூட, அது தேவையில்லை என்று கூட்டத்தை ஏற்பாடு செய்த வடசென்னை மாவட்ட திமுகவினர் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த கருணாநிதி, மேடையில் கை சின்னத்தையும் வைக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். அவர் கூறியும் சின்னம் வைக்காததால், அவ்வாறு வைக்காவிட்டால் கூட்டத்துக்கே வரப் போவதில்லை என்று எச்சரித்திருக்கிறார். அதன் பிறகுதான் மேடையில், பெயரளவில் கை சின்னம் வைக்கப்பட்டது. இதைக் கருணாநிதியே தனது உரையில் கூறியுள்ளார்.

7,500 இருக்கைகளுக்கு ஆர்டர் தந்தபோதிலும் 4,500 இருக்கைகள் மட்டுமே அங்கு போடப்பட்டன. அந்த அளவுக்கு கூட்டம் குறைவாக இருந்தது என கட்சியினரே கூறுகின்றனர். வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்துக்கு வழக்கமாக வரும் அளவைவிட இது குறைவான கூட்டம்தான் என காவல் துறையினர் குறிப்பிட்டனர். திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியும்கூட இதுபற்றி வருத்தம் தெரிவித்தாராம். அதிமுகவினர் மிகப் பெரிய அளவில் கூட்டத்தை வரவழைத்த நிலையில், சில ஆயிரம் பேரை மட்டும் வைத்தா வேட்பாளர்களை அறிமுகம் செய்வது என அவர் கடிந்து கொண்டாராம். இதே கூட்டம் மதுரையில் நடந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமா என்றும் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே தமிழகத்தில் தங்கள் ஆதரவை நம்பி நடந்து கொண்டிருக்கும் ஆட்சியில் தங்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்ற ஆதங்கம் காங்கிரஸ் கட்சியினரிடம் உள்ளது. இப்போது தேர்தல் பிரசாரத்திலும் இது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதை முக்கியமாகக் கருதித்தான் தாங்கள் அமைதியாக இருந்ததாகவும், அதனால் மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க வேண்டியதாயிற்று எனவும் கருதும் திமுகவினர் பிரசாரத்துக்கு காங்கிரஸ் கட்சியினரை அழைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அழைக்காமல் தாங்கள் ஏன் போக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் விலகி நிற்கின்றனர்.

ஆனால் எதிர்தரப்பில் அதிமுக அணியில் பல்வேறு விஷயங்களில் கொள்கை அடிப்படையில் மாறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் பிரசாரம் என்பதில் எல்லோரும் ஓரணியாகச் செயல்படத் தொடங்கிவிட்டனர். தீவுத்திடலில் நடந்த அதிமுக அணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் இரட்டை இலை சின்னத்துக்கு சமமான அந்தஸ்து கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் தரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி அதிருப்தியாளர்களை உரிய முறையில் சந்தித்துப் பேசி, பிரசாரத்தில் ஈடுபட வைத்து வருகின்றனர். பிரசாரத்தில் அதிமுக அணி முந்திச் செல்லும் நிலையில், திமுக அணியில் இன்னும் ஒற்றுமையே கேள்விக்குறியாக இருப்பது இந்த அணியின் கட்சியினரிடம் சிறிது அச்சத்தை உருவாக்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி ஏப்ரல் 19 2009

தேதிமுக

தி.மு.க -அ.தி.மு.க.,விற்கு மாற்றாக கருதப்படும் தே.மு.தி.க., வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.கடந்த சட்டசபை தேர்தலை போலவே தே.மு.தி.க., வேட்பாளர்கள் தி.மு.க -அ.தி.மு.க., ஓட்டுக்களை பெரிதும் பிரித்து வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே கண்ணோட்டத்தில் மற்ற கட்சிகள் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் அதிக ஓட்டுக்களை பெறுவதற்கான காய் நகர்த்தலில் தே.மு.தி.க., தலைமை இறங்கியுள்ளது. அதற்கான வியூகங்களையும் தே.மு.தி.க., தலைமை ரகசியமாக வகுத்து அதை செயல்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒவ் வொரு தொகுதிக்கும் மாநில நிர்வாகி ஒருவருடைய தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும், வெற்றி வாய்ப்புள்ளவையாக தே.மு.தி.க., தலைமை நம்பியுள்ள எட்டு தொகுதிகளுக்கு மூன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.மேலும் மாவட்ட செயலர்களுக்கும் தே.மு.தி.க., தலைமை புதுப்புது உத்தரவுகளை நாள்தோறும் வழங்கி வருகிறது.

அதன் படி அவர்களிடம் விஜயகாந்த் குரல் பதிவு செய்யப்பட்ட டெலிபோன் ரெக்கார்டட் மெசேஜ், போஸ்டர், பிட் நோட்டீஸ், 'டிவி', நாளிதழ் மற்றும் எப்.எம்., விளம்பரம் செய்யும் ஏற்பாடுகளை உடனடியாக கவனிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள வாக்காளர்களில் இரண்டு லட்சம் பேருக்கு லேண்ட் லைன் போன் அல்லது மொபைல்போன் மூலம் இந்த ரெக்கார்டட் மெசேஜ் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கால் ஒன்றிற்கு கட்டணமாக 70 காசுகள் என கணக்கிட்டு கட்சி தலைமை பரிந்துரைத்துள்ள தனியார் நிறுவனத்திடம் மாவட்ட செயலர்கள் பணம் செலுத்த வேண்டும்.

இதே போல டிஜிடல் பேனர், போஸ்டர், பிட் நோட்டீஸ், பிளாஸ்டிக் தொப்பி, முரசு சின்னம் அச்சிடப்பட்ட பனியன் ஆகியனவற்றை கட்சி தலைமை பரிந்துரை செய்துள்ள ஏஜன்சியிடம் பணம் கொடுத்து அவர்கள் வாங்கி பூத் ஏஜன்டுகளிடம் வினியோகிக்க வேண்டும்.

விஜயகாந்த் வேட்பாளர் நேர்காணல் நடத்தியபோது ஆர்வகோளாறில் சிலர் 'சீட்' கிடைத்தால் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக கூறினர். அதை நம்பி கட்சி தலைமையும் பரிசீலனை செய்யாமல் அவசர கதியில் அவர்களுக்கு சீட் வழங்கியது. ஆனால் 'சீட்' கிடைத்த பிறகு சொந்த பணத்தை செலவு செய்யாமல் வேட் பாளர்கள் சிலர் கட்சி தலைமையில் இருந்து பணம் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் சில தொகுதிகளில் தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியை இன்னும் முழுவீச்சில் துவங்கவில்லை. தனி தொகுதிகளில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது.

தேர்தல் செலவுகளை கவனிக்க வேண்டிய நிர்பந்தம் மாவட்ட செயலர் களின் தலையில் விழுந்துள்ளது. போதாக் குறைக்கு கட்சியின் நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் தேர்தல் செலவுக்கு பணம் கேட்டு நச்சரிப்பதால் மாவட்ட செயலர்கள் நெருக்கடிக்கு ஆளாகி செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

ஏற்கனவே கட்சி மாநாடுகள், நல திட்ட உதவிகள் வழங்க பல லட்சம் ரூபாய்களை மாவட்ட செயலர்கள் செலவு செய்துள்ள நிலையில் வேட்பாளர்கள் பதுங்கலால் மீண்டும் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அக்கட்சி மாவட்ட செயலர்கள் பலரது மொபைல் போன்கள் 'சுவிட்ச் ஆப்' ஆகலாம் என தெரிகிறது

தினமலர் ஏப்ரல் 19 2009

அதிமுக

சென்னை தீவுத்திடலில் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய அதே பேச்சைத்தான் ஜெயலலிதா இரண்டு ஊர்களிலும் பேசினார். சாவி கொடுத்த பொம்மை, குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கருணாநிதியை கிண்டல் செய்து தொண்டர்களை உசுப்பேற்றினார். குமரி மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கொண்டு வருவேன், மீனவர்களுக்காக கூடுதல் தூண்டில் வளைவு அமைப்பேன், மூடும் நிலையில் உள்ள ரப்பர் கழகத்தை சரி செய்து திறம்பட செயல்படுத்துவேன் என்ற உள்ளூர் பிரச்னைகள் மட்டும் அவரது பேச்சில் புதிதாக இடம் பெற்றிருந்தன.

  • ஜெ., வருவதற்கு சில நிமிடங்கள் முன் ஓடோடி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மேடை படிக்கட்டில் ஏறி நின்று கூட்டத்தை பார்த்து விட்டு திருப்தியுடன் தலை அசைத்தார்.
  • கடுமையான வெயிலிலும் நாகராஜா கோவில் மைதானம் நிரம்பி வழிந்தது.
  • ஜெ., வருவதற்கு முன் வழக்கமாக ஓடிவரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, நாகர்கோவிலில் காணமுடியவில்லை.
  • பச்சை சேலை அணிந்து கும்ப மரியாதையுடன் நின்ற பெண்களைப் பார்த்து சிரித்த ஜெ., அவர்களை பக்கத்தில் அழைக்கவில்லை.
  • எனக்கு குடும்பம் கிடையாது என்று ஜெ., கூறிய போது, அம்மா நாங்கள் இருக்கிறாம் என்று தொண்டர்கள் குரல் எழுப்பினர்.

தினமலர் தேர்தல் இணைய தளம் ஏப்ரல் 19 2009

5 comments:

குப்பன்_யாஹூ said...

கூட்டங்களும் கை தட்டல்களும் வோட்டுக்களகா மாறுமா என்பது சந்தேகமே.

கடந்த தேர்தலின் பொது கூட ஆர், தனுஸ்கோடி ஆடித்தான், மணிசங்கர் அய்யர், வேங்கடபதி போண்டோருக்கு கூட்டம் இல்லை, ஆனால் வெற்றி பெற்றார்கள்.

வைகோ விற்கு போகும் இடம் எல்லாம் கூட்டம் கூடிற்று ஆனால் வெற்றி பெற முடிய வில்லை.

தமிழக வாக்காளர்களாகிய நம் முடிவு எடுக்கும் தன்மையை கணிப்பது எளிது அல்ல.

குப்பன்_யாஹூ

yrskbalu said...

regarding congress- nobody happy in

their party.

1. not getting full support by DMK

2. the same 5 candidate. no chance to
others.

3. like thangabalu no body take care
or revisit after election

ஆதவன் said...

nalla irukke..

savuccu said...

மாலன் "தினமலர்" எழுத்தை மட்டுமே நம்பும் கமுக்கம் என்ன?

மாலன் said...

savuccu,
தினமணி செய்தியும் இருக்கிறதே? கவனிக்கவில்லையோ?