Sunday, May 03, 2009

ஆயிரம் உளியின் ஓசை

திடீர் உண்ணாவிரதம் ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை, மே.2: யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் உடனடியாக முழு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 27-ம் தேதி கருணாநிதி திடீரென சென்னை அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதம் இருக்கப்போவது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணத்தை விளக்கி சனிக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதம்:
"கடந்த காலங்களில் என்னுடன் நேசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொது மேடைகளில் இலங்கைப் பிரச்னையில் என்னைத் தூற்றிப் பேசினர். அது ஓராயிரம் உளி கொண்டு என்னைத் தாக்குவது போலிருந்தது.
13-வயதிலிருந்து தமிழுக்காக அளவிட முடியாத அடக்குமுறைகளைத் தாங்கி இருக்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சியைக் குலைத்தது யார் என்று திருச்சி கூட்டத்தில் திருமாவளவன் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டார்.
அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார்? மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார்? டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்துவர் யார்? உண்ணாவிரதங்களைக் கபட நாடகம் என்றுரைத்தவர் யார்? என்றெல்லாம் கேட்டு, ஒரு சில இடங்களுக்காகத்தான் எதிர் அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்து யாரும் சேரவில்லை என்று குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியவுடன், இலங்கை மீது படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று சபதம் செய்திருக்கிறார் ஜெயலலிதா. அவருடைய கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆளுகிற சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா?
இத்தகையோரின் நடவடிக்கைகளுக்கு இடையே தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்றுதான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக்கூட தெரிவிக்கவில்லை.
உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால்தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்குப் அருகிலோதான் இருந்திருப்பேன்' என எழுதியுள்ளார் கருணாநிதி.

நன்றி: தினமணி3.5.2007

No comments: