Tuesday, May 12, 2009

ஓட்டுப் போட்டால் நாமம் போட முடியாது!

இப்படி ஒரு பதிவை நான் எழுதுவதில் விளையும் புகழோ, பழியோ நண்பர் இட்லி வடைக்கு உரியது.
வாக்களிப்பதை வலியுறுத்தி நான் ஒரு பதிவு தேர்தலுக்கு முதல் நாள் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நேற்றிரவு, நண்பர் சந்திரமெளலீஸ்வரன் மின்னஞ்சல் மூலம் ஒரு கட்டுரையை அனுப்பி உங்கள் பதிவில் வெளியிடமுடியுமா? எனக் கேட்டிருந்தார். தேர்தலின் திசைகள் என்ற இந்தப் பதிவைப் வலைப்பதிவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அரங்கமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்தான் துவங்கினேன். (என் எண்ணங்களை எழுதுவதற்குத்தான் ஜன்னலுக்கு வெளியே இருக்கிறதே. யாருக்கு வாக்களிப்பது என்ற தொடர்பதிவைக் கூட அதில்தான் எழுதியிருக்கிறேன்). அதனால் மெளலியின் கட்டுரை வெளியானது.மெளலி நன்றாகவே எழுதியிருக்கிறார். எனவே நான் எழுத வேண்டியதில்லை எனக் கருதியிருந்தேன்.
மெளலியின் கட்டுரை இட்லி வடை பதிவிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஒரு நல்ல செய்தி பல தளங்களின் மூலம் பலரைச் சென்றடைவது நல்லதுதானே!. ஆனால் மெளலியின் கட்டுரையோடு சேர்த்து இட்லி வடை வெளியிட்டிருந்த படம் திகைப்பளித்தது. அது வெறும் குறும்பாக இருக்கலாம். ஆனால் மெளலி வலியுறுத்தும் தவறாமல் வாக்களியுங்கள் என்ற கருத்தை நிராகரிக்க சொல்வதைப் போல படம் அமைந்திருந்தது. வாக்களிப்பது என்பது நாம் நாமம் போட இடமளிக்கும் என்பது இ.வ.வின் கருத்தாக இருக்குமானால் அதை அவர் ஒரு தனி பதிவாகவோ, பின்னூட்டமாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் வார்த்தை ஏதும் பேசாமல், 'தவறாமல் வாக்களியுங்கள்'', என்ற கருத்தை எள்ளுவதில் கெட்டிக்காரத்தனம் இருக்கலாம். ஆனால் நியாயமில்லை.

நாமம் விழுவதைத் தவிர்க்க:
முதலில் இட்லி வடைக்கு ஏன் நாமம் விழுகிறது என்று பார்ப்போம்:

நம்முடைய ஜனநாயகத்தில் வெற்றி பெறுகிற கட்சிகள் வாங்குகிற வாக்குகளைவிட வாக்களிக்காத மக்களின் எண்ணிக்கை அதிகம். உதாரணத்திற்கு 2004 தேர்தல்:
அதில் அதிமுக பெற்ற வாக்குகள் 18.03 சதவீதம். திமுக பெற்ற வாக்குகள் 14.57% காங்கிரஸ் 6,72% பா,ம.க.4.08% மதிமுக 3.54% பா.ஜ.க.3.07% இந்.கம்.1.8% மார்க்.கம்.1.74% சுயேட்சைகளும் மற்றவர்களும் 4.7%

இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 39.44 சதவீதம். அதாவது அதிமுக, திமுக இந்த இந்த இரண்டும் பெற்ற வாக்குகளை விட (18.03+14.57 =32.60) வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம்.

பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெறாமலே ஒரு கட்சி இங்கு ஆட்சிக்கு வந்து விட முடியும். அவர்கள் பெரும்பாலான மக்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் எப்படி பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்?

மக்கள் அதிக அளவில் வாக்களிக்காத போது இன்னொரு விபரீதமும் ஏற்படுகிறது.

ஐந்து முனைப் போட்டி இருக்கிற ஒரு தொகுதியில் 40 சதவீத வாக்குகள் பதிவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் வேட்பாளர் அ 10 சதவீத வாக்குகள் பெறுகிறார். வேட்பாளர் ஆ பெறுவது 9%. வேட்பாளர் இ பெறுவது 8% ஈ க்கு 6% உ பெறுவது 5 செல்லாத வாக்குகள் 2%. பத்து சதவீத வாக்குகள் வேட்பாளர் அ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதாவது 90 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வெற்றியும் பெற்று, கூட்டணி மேஜிக்கில் அமைச்சராகவும் கூட ஆகி விட முடியும்!

இந்தத் தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தால் அவர் 10% ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது.

10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியும் என்ற நிலையிருப்பதால்தான் பலர் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். வெற்றி பெற்று வந்த பிறகு அந்த வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதற்கு பலவித சலுகைகளையும் உதவிகளையும் சட்டத்திற்கு உட்பட்டும் சட்டத்திற்குப் புறம்பாகவும் செய்கிறார்கள். இதை மாற்ற வேண்டுமானால் வாக்குப் பதிவு அதிகரிக்க வேண்டும், அப்படி அதிகரிக்க வேண்டுமானால் ஓட்டுப் போட வேண்டும். அதற்கு பதிலாக நாமம் போடுவதால் போட்டுக் கொள்வதால் நிலைமை மாறிவிடாது

ஒரு தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவானால் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க ,முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல ஒரு தொகுதியில் பல முனைப் போட்டி இல்லாதிருந்தாலும் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியாது. மேலே உள்ள நம் உதாரணத் தொகுதியில் மும்முனைப் போட்டியென்றால் வெற்றி பெறுபவர் 15 சதவீதமாவது வாங்க வேண்டியிருக்கும். அதே தொகுதியில் ஆறு முனைப் போட்டி என்றால் 10 சதவீத வாக்கு கூட வேண்டியதில்லை.

இதுதான் ஜாதி சங்கங்கள் கட்சிகளாக மாறுவதன் பின் உள்ள சூட்சமம்.
சுருக்கமாகச் சொன்னால் வாக்குப் பதிவு குறைந்தால், போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகரித்தால் பெரும்பான்மை மக்களின் விருப்பம் தேர்தலில் பிரதிபலிக்காமல் போகும்

கட்சிகள் தோன்றுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் வாக்குப் போட முடியும்.

முதலில் அதைச் செய்யலாம். வாக்குப் போடுவது அதிகரித்தால் நாமம் போடுவது குறையும். அதை விட்டு விட்டு வாக்குப் போடுவதைப் பற்றிக் கேலியும் கிண்டலும் வீசுவதில் எள்ளி நகையாடுவதில் ஏளனம் செய்வதில்,, ஏகடியம் பேசுவதில் எந்த பயனும் கிடையாது.

உழ வேண்டிய நாளில் ஊரைச் சுற்றிவிட்டு, அறுவடை நாளில் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தால் என்ன கிடைக்கும்?

4 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐந்து முனைப் போட்டி, 40% வாக்குப் பதிவில் 10% வாக்கு வாங்கியவர் ஜெயிக்கலாம். சரி, அதனால் வாக்குப் பதிவு % அதிகரித்தால் என்ன ஆகும்?

20 முனைப் போட்டி, 100% வாக்குப் பதிவு, மறுபடியும் அதே 10% வாக்கு வாங்கியவர் ஜெயிப்பார்..

இந்த % கணக்குகளே கொஞ்சம் அலர்ஜியாயிருக்கிறது :)

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

மாலன் சார் வணக்கம்

என் கட்டுரை வெளியானதில் இரண்டு நிலைகளில் மகிழ்ச்சி. ஒன்று செய்தி தகுந்த அளவில் கவனத்தை அடையும் என்பது. இரண்டு தங்களைப் போன்றும் இட்லி வடை போன்றும் முன்னணியில் உள்ள் பதிவர்கள் என்னைப் போன்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வெளியிட்டது

கட்டுரைக்கு “நாமம்” பொருந்தவில்லை என்ற கருத்துகள் பதிவுக்குப் பின்னூட்டமாக இட்லிவடையில் வந்துள்ளன. என் கருத்தும் அது தான். அதனை மதித்து இட்லி வடையார் அந்த நாமத்தை நீக்கி விட்டார்.

நீங்கள் சொன்னது போல ஏன் நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் சிந்திப்பது போல “ நாமம்” போட விடாமல் காப்பது நம் கையில் தான் இருக்கு.

இட்லி வடையார் பதிந்திருந்த நாமம் படம் மறைமுகமாக அதைத்தான் சொல்லியதோ. நம் இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் அடையாள மை “நாமத்”தை துரத்தி அடிக்கும்

தவறாமல் வாக்களிக்க வேண்டும்.. நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிக்க வேண்டும்

இந்த வாசகம் ஒரு பெரும் இயக்கமாக வேண்டும்

அதற்கு உங்களைப் போன்ற ஊடக இயலின் முன்னோடிகள் இச் செய்தியினை முடிந்த அளவு மக்களிடம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும்

தேர்தல் அறிவிக்கப்ப்பட்ட நாளிலிருந்து நான் அனுப்பும் எனது தனிப்பட்ட எஸ் எம் எஸ் செய்திகளில் கூட வாக்களிக்கும் கடமையினை நினைவுறுத்தும் செய்தியினை சேர்த்திருக்கிறேன்

yrskbalu said...

whatever may be the reason - we must
vote.

then only - for that only they fear and some goodthings.

otherwise they will do whatever they want.

future ragul gandhi son also will become PM

PRABHU RAJADURAI said...

புள்ளியியல் பற்றி அறிந்தவனில்லை என்றாலும், புள்ளியியலின் அடிப்படை விதிகளின்படி, மற்றவர்கள் வாக்களித்தாலும் பெரிய அளவில் முடிவுகளில் மாற்றம் ஏற்படாது அல்லவா?

கருத்துக் கணிப்புகளில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான மாதிரியை வைத்து முடிவுகளை ஓரளவிற்கு அனுமானிக்கையில், ஐம்பது சதவிகித வாக்குப் பதிவு என்றால், அது பலமடங்கு துல்லியமாக மக்கள் மனதை அறியும் ஒரு முறையாகவே இருக்குமல்லவா?

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பொழுது சில விதிவிலக்குகளைத் தவிர...அப்படியே சீராக இடைவெளி கூடிக் கொண்டே போவதைத்தான் பார்க்கிறோம்.

இது வரை நடந்த இந்திய பொதுத்தேர்தல் முடிவுகள் மக்களின் பொதுவான எண்ணப்பாட்டினையே பிரதிபலித்திருக்கிறது.

நடுத்தர வர்க்கத்திற்கு எப்பொழுதுமே இப்படி ஒரு நப்பாசை...நாம் எல்லோரும் சென்று ஓட்டுப் போட்டுவிட்டால், வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடிசைப் பகுதிகளை இடித்து தள்ளிவிடுவார்கள், இலவசமாக டிவி கொடுக்க மாட்டார்கள் என்று.


அதெல்லாம் நடக்காது :-)