தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?
அரசு டவுன் பஸ்களில் எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் என்ற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இவை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) முதல் கைவிடப்பட்டன. சாதாரண பஸ்களில் வாங்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என்ற அளவில் மட்டும் இப்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் கட்டணம் குறைக்கப்பட்டது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இருந்தாலும், சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கைதான் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, கட்டணம் ஏதும் குறைக்கப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
கட்டணக் குறைப்பு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஸ் கட்டணக் குறைப்பு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனப் புகார் வந்திருப்பது பற்றி நேரில் விளக்கம் தருவதற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் வருமாறு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
சாதாரண அலுவலருக்கு தண்டனை: சாதாரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் அலுவலர் யாரேனும் தவறு செய்தால் அவரைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யவோ, இடமாறுதல் செய்யவோ மாநில அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையரகம் பரிந்துரை செய்யும். அதை மாநில அரசு செயல்படுத்தும்.
கீழ்நிலையில் உள்ள ஒரு அதிகாரி தவறு செய்தால் அவரைத் தண்டிக்கிறது தேர்தல் ஆணையம். இப்போது மாநில அரசே தவறு செய்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒரு தொகுதியில் முறைகேடு ஏதும் நடப்பதாகச் சந்தேகம் வந்தால் அதுகுறித்து தேர்தல் பார்வையாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்தான் தேர்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருப்பவர்கள் என ஆணையம் கூறியுள்ளது.
அந்த வகையில் முறைகேடுகள் தங்கள் கவனத்துக்கு வந்தால், தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அவர் தகவல் தரலாம்.
தங்கள் கண்காணிப்பில் இருக்கும் தொகுதிக்குள் திடீரென பஸ் கட்டணம் குறைந்துள்ளது பற்றி சில தேர்தல் பார்வையாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரகத்துக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
மாநில அளவில் பெரிய விதிமீறல்கள் நடந்ததாகத் தேர்தல் ஆணையம் கருதிய நிகழ்வுகளில் முன்பு பிற மாநிலங்களில் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில்கூட கும்மிடிப்பூண்டி, மதுரை இடைத்தேர்தல்களின் போது அந்தப் பகுதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
1993-ல் தேர்தல் விதிமீறல் புகாரை அடுத்து ராணிப்பேட்டை இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சிறிய அளவில் முறைகேடு என முடிவு செய்யப்பட்டபோது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநில அளவில் விதிமீறல் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யுமானால், மொத்தமாக மாநிலம் முழுக்க தேர்தலை ஒத்திவைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைய பிரச்னையைப் பொருத்தவரை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வராத வகையில் கவனமாகத்தான் தாங்கள் செயல்பட்டிருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு ஆணை பிறப்பித்து கட்டணம் குறைக்கப்படவில்லை என்பதால் இது விதிமீறலில் வராது என்று அவர்கள் கூறுகின்றனர்.
புதிய வழித்தடங்கள் துவக்கி இருந்தாலோ, புதிய பஸ்கள் விட்டிருந்தாலோதான் விதிமீறலாகக் கருதப்படும். இது விதிமீறலில் வராது என்கின்றனர்.
மீண்டும் அதே நிலைமை: இப்போதைக்கு கடந்த வாரம் இருந்த அதே நிலைமையை மீண்டும் செயல்படுத்துமாறு வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று அரசு வட்டாரங்கள் நம்புகின்றன.
அவ்வாறு கூறினால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உங்கள் கருத்தென்ன? இடப்புறப் பெட்டியில் வாக்களியுங்கள்
2 comments:
இலங்கையில் தமிழினப் படுகொலை இன்னும் முடியவில்லை; பிரபாகரனும் இன்னும் கொல்லப்படவில்லை. மத்திய அரசு இவைகள் நடந்து முடிந்து பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக சில நூறு கோடி ரூபாய்கள், உதவிப் பொருட்களுடன் கூடிய கப்பல்கள் இவைகளை அனுப்பி அதை தமிழ் நாட்டு டிவிகளில் காட்டி மக்களை கொஞ்சம் ஆறுதல் படுத்திவிட்டு சோனியா வந்து பிரச்சாரம் செய்ய நாட்கள் இன்னும் தேவைப்படும் போல் இருக்கிறது.
இந்தியா எவ்வளவோ முயன்றும் ஏப்ரல் இறுதிக்குள் இதைச் செய்து முடிக்க முடியவில்லை. எனவே ஏதாவது ஒரு காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இவைகள் செய்து முடிக்கப்பட்டு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க இடமிருக்கிறது.
it s not related to kalaingar fever!!
right?
Post a Comment