Tuesday, May 19, 2009

தேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பாராத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.

அம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.

மறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே!

அதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.

பதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்

திடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.

இரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது

*
இது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.

இந்த முறை வேறு ஒரு நண்பர் தேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:

“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன

தேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.

இந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்க ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆகியவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.

எதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்வார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.

இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.

இந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.

Tuesday, May 12, 2009

ஓட்டுப் போட்டால் நாமம் போட முடியாது!

இப்படி ஒரு பதிவை நான் எழுதுவதில் விளையும் புகழோ, பழியோ நண்பர் இட்லி வடைக்கு உரியது.
வாக்களிப்பதை வலியுறுத்தி நான் ஒரு பதிவு தேர்தலுக்கு முதல் நாள் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நேற்றிரவு, நண்பர் சந்திரமெளலீஸ்வரன் மின்னஞ்சல் மூலம் ஒரு கட்டுரையை அனுப்பி உங்கள் பதிவில் வெளியிடமுடியுமா? எனக் கேட்டிருந்தார். தேர்தலின் திசைகள் என்ற இந்தப் பதிவைப் வலைப்பதிவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அரங்கமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்தான் துவங்கினேன். (என் எண்ணங்களை எழுதுவதற்குத்தான் ஜன்னலுக்கு வெளியே இருக்கிறதே. யாருக்கு வாக்களிப்பது என்ற தொடர்பதிவைக் கூட அதில்தான் எழுதியிருக்கிறேன்). அதனால் மெளலியின் கட்டுரை வெளியானது.மெளலி நன்றாகவே எழுதியிருக்கிறார். எனவே நான் எழுத வேண்டியதில்லை எனக் கருதியிருந்தேன்.
மெளலியின் கட்டுரை இட்லி வடை பதிவிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஒரு நல்ல செய்தி பல தளங்களின் மூலம் பலரைச் சென்றடைவது நல்லதுதானே!. ஆனால் மெளலியின் கட்டுரையோடு சேர்த்து இட்லி வடை வெளியிட்டிருந்த படம் திகைப்பளித்தது. அது வெறும் குறும்பாக இருக்கலாம். ஆனால் மெளலி வலியுறுத்தும் தவறாமல் வாக்களியுங்கள் என்ற கருத்தை நிராகரிக்க சொல்வதைப் போல படம் அமைந்திருந்தது. வாக்களிப்பது என்பது நாம் நாமம் போட இடமளிக்கும் என்பது இ.வ.வின் கருத்தாக இருக்குமானால் அதை அவர் ஒரு தனி பதிவாகவோ, பின்னூட்டமாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் வார்த்தை ஏதும் பேசாமல், 'தவறாமல் வாக்களியுங்கள்'', என்ற கருத்தை எள்ளுவதில் கெட்டிக்காரத்தனம் இருக்கலாம். ஆனால் நியாயமில்லை.

நாமம் விழுவதைத் தவிர்க்க:
முதலில் இட்லி வடைக்கு ஏன் நாமம் விழுகிறது என்று பார்ப்போம்:

நம்முடைய ஜனநாயகத்தில் வெற்றி பெறுகிற கட்சிகள் வாங்குகிற வாக்குகளைவிட வாக்களிக்காத மக்களின் எண்ணிக்கை அதிகம். உதாரணத்திற்கு 2004 தேர்தல்:
அதில் அதிமுக பெற்ற வாக்குகள் 18.03 சதவீதம். திமுக பெற்ற வாக்குகள் 14.57% காங்கிரஸ் 6,72% பா,ம.க.4.08% மதிமுக 3.54% பா.ஜ.க.3.07% இந்.கம்.1.8% மார்க்.கம்.1.74% சுயேட்சைகளும் மற்றவர்களும் 4.7%

இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 39.44 சதவீதம். அதாவது அதிமுக, திமுக இந்த இந்த இரண்டும் பெற்ற வாக்குகளை விட (18.03+14.57 =32.60) வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம்.

பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெறாமலே ஒரு கட்சி இங்கு ஆட்சிக்கு வந்து விட முடியும். அவர்கள் பெரும்பாலான மக்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் எப்படி பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்?

மக்கள் அதிக அளவில் வாக்களிக்காத போது இன்னொரு விபரீதமும் ஏற்படுகிறது.

ஐந்து முனைப் போட்டி இருக்கிற ஒரு தொகுதியில் 40 சதவீத வாக்குகள் பதிவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் வேட்பாளர் அ 10 சதவீத வாக்குகள் பெறுகிறார். வேட்பாளர் ஆ பெறுவது 9%. வேட்பாளர் இ பெறுவது 8% ஈ க்கு 6% உ பெறுவது 5 செல்லாத வாக்குகள் 2%. பத்து சதவீத வாக்குகள் வேட்பாளர் அ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதாவது 90 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வெற்றியும் பெற்று, கூட்டணி மேஜிக்கில் அமைச்சராகவும் கூட ஆகி விட முடியும்!

இந்தத் தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தால் அவர் 10% ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது.

10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியும் என்ற நிலையிருப்பதால்தான் பலர் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். வெற்றி பெற்று வந்த பிறகு அந்த வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதற்கு பலவித சலுகைகளையும் உதவிகளையும் சட்டத்திற்கு உட்பட்டும் சட்டத்திற்குப் புறம்பாகவும் செய்கிறார்கள். இதை மாற்ற வேண்டுமானால் வாக்குப் பதிவு அதிகரிக்க வேண்டும், அப்படி அதிகரிக்க வேண்டுமானால் ஓட்டுப் போட வேண்டும். அதற்கு பதிலாக நாமம் போடுவதால் போட்டுக் கொள்வதால் நிலைமை மாறிவிடாது

ஒரு தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவானால் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க ,முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல ஒரு தொகுதியில் பல முனைப் போட்டி இல்லாதிருந்தாலும் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியாது. மேலே உள்ள நம் உதாரணத் தொகுதியில் மும்முனைப் போட்டியென்றால் வெற்றி பெறுபவர் 15 சதவீதமாவது வாங்க வேண்டியிருக்கும். அதே தொகுதியில் ஆறு முனைப் போட்டி என்றால் 10 சதவீத வாக்கு கூட வேண்டியதில்லை.

இதுதான் ஜாதி சங்கங்கள் கட்சிகளாக மாறுவதன் பின் உள்ள சூட்சமம்.
சுருக்கமாகச் சொன்னால் வாக்குப் பதிவு குறைந்தால், போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகரித்தால் பெரும்பான்மை மக்களின் விருப்பம் தேர்தலில் பிரதிபலிக்காமல் போகும்

கட்சிகள் தோன்றுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் வாக்குப் போட முடியும்.

முதலில் அதைச் செய்யலாம். வாக்குப் போடுவது அதிகரித்தால் நாமம் போடுவது குறையும். அதை விட்டு விட்டு வாக்குப் போடுவதைப் பற்றிக் கேலியும் கிண்டலும் வீசுவதில் எள்ளி நகையாடுவதில் ஏளனம் செய்வதில்,, ஏகடியம் பேசுவதில் எந்த பயனும் கிடையாது.

உழ வேண்டிய நாளில் ஊரைச் சுற்றிவிட்டு, அறுவடை நாளில் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தால் என்ன கிடைக்கும்?

Monday, May 11, 2009

தவறாமல் வாக்களிப்போம்....

தவறாமல் வாக்களிப்போம்....
நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

-சந்திரமெளலீஸ்வரன்

இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு தினம்
வாக்களிப்பது கடமை. அதை தவறாமல் செய்ய உறுதி பூணுவோம்
இந்தச் செய்தி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என உண்மையாக நினைப்போம். நம்மால் இயன்றவரை இதனை நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்
நாம் செய்ய வேண்டியது என்ன
மறக்காமல் வாக்குச் சாவடிக்கு சென்று நம் வாக்கை பதிவு செய்வோம். இந்தக் கடமையினை செய்திட நம் உறவினர், நண்பர்களையும் வேண்டுவோம்
வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். ஆகவே வாக்குச் சாவடிக்குச் செல்ல வேட்பாளர்கள் தரும் வாகன்ங்களை புறக்கணித்து நாமே நம் சொந்த முயற்சியில் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்
நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நாம் வாக்களிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிட்த்துளிகளே ஆனால் சொற்ப நேரத்தில் எடுக்கும் முடிவு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் வாழ்க்கையினை எப்படியெல்லாம் பாதிக்கும் எனத் தெரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வோம்
ஆண்டு தோறும் இந்த நாட்டில் பல்வேறு நிலைகளில் கல்வி அறிவு பெற்று கல்வி நிலையங்களிலிருந்து புறப்படும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா? அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றி குறைவற்ற வேலை வாய்ப்பினை வழங்கிடும் வண்ணம் நம் வாக்கு ஒரு நிலையான தரமான ஆட்சியினை நமக்கு தர வேண்டாமா?
இந்த பரந்து விரிந்த பாரத்த்திலே இயற்கைச் செல்வங்கள் எத்தனை எத்தனை. அவையெல்லாம் நமக்கு முழு பலன் தரும் வண்ணம் நல்ல செயல் திட்டங்கள் வழங்கிடும் அரசு நமக்கு வேண்டுமல்லவா
நேர்மை என்பதே ஓர் அபூர்வ குணமாகி, நேர்மையாக இருப்பவர் ஒரு சிலரே என்ற துர்பாக்கியமான நிலை தொடர வேண்டுமா ? அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா ? இப்படியான நிலையினை மாற்ற வேண்டியது நம் கடமைதானே. அதனை செவ்வனே செய்ய நம் வாக்கு ஒரு கருவி தானே.?
இவையெல்லாம் நாம் வாக்களிக்கும் முன்பு நம் வாக்கை யாருக்கு அளிக்கிறோம் என்பதை முடிவு செய்யும் காரணிகளில் சில.
இதை விடுத்து
கட்சி, ஜாதி, மதம், தேர்தல் நேரத்தில் கிட்டும் சில சலுகைகள் இவையா நம் வாக்கினை முடிவு செய்ய வேண்டும்
நாம் மே 13 அன்று அளிக்கும் வாக்கு வெறும் ஓட்டு அல்ல.. அது நம் வருங்காலத்திற்கு நமக்கு நாமே தரும் வாக்கு.. நம்பிக்கை. வாக்கு என்பது உறுதி மொழி என்ற அர்த்தமும் தரும்
நாம் நம் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தரும் உறுதி மொழி.
தவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

இடுக்கண் வருங்கால் நகுக

(தேர்தல் வருங்கால் எனவும் வாசிக்கலாம்)

நேற்றைய சோனியா கூட்டத்திலிருந்து:

சோனியா மேடைக்கு வரும்போது திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தார். உடனே, திருமாவளவன், 'சோனியா அம்மையார் வாழ்க, வாழ்க' என கோஷம் எழுப்பினார்.
*
சோனியா தனது பேச்சை முடிக்கும் முன்பாகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது பெயரையும் வரிசையாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். ஆனால், திருமாவளவனின் பெயரை மட்டும் சோனியா குறிப்பிடவில்லை.
இதனால், மேடையில் அமர்ந்திருந்த திருமாவளவன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கட்சியினரும் மெüனமாக நின்றனர். இதனால், திருமாவளவன் உற்சாகமிழந்து காணப்பட்டார்.
*
இந்திய அரசைப் பொறுத்தவரை பிரபாகரன் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு

சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்
ஆண்டன் பாலசிங்கத்தின் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கடந்த 3.11.07-ல் இரங்கல் கவிதை எழுதினேன்.ஆனால், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நான் கவிதை எழுதியதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். முதல்வர் பதவியில் இருந்து விலகவும், ஆட்சியில் இருந்து திமுக வெளியேறவும் கோரினார்

இந்திய அரசில் பங்கேற்றிருந்த திமுகவின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில்

*மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால்தான் அங்கு கனரக ஆயுதங்கள் உபயோகிப்பதை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது

நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா

Heavy casualties reported in northern Sri Lanka

இன்று வெளியான இந்து நாளிதழின் செய்தித் தலைப்பு

Sunday, May 10, 2009

உங்கள் வாக்குச் சாவடி எங்கிருக்கிறது?

நீங்கள் உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை உங்கள் வீட்டிலிருந்தே அறிந்து கொண்டு வாக்களிக்கப் புறப்படலாம். அதற்கு ஏதுவாக பத்ரியும் அவரது குழுவினரும் ஒரு வசதியினை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த வசதி சென்னை வாக்காளர்களுக்கு மட்டும்தான். விவரங்கள் கீழே:

நீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:
BOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்>என்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)இந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.

Sunday, May 03, 2009

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?

தினம் ஒரு தேர்தல்-14
தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?
சென்னை, மே 2: நகரங்களில் டவுன் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது தேர்தல் விதிமுறை மீறிய செயலாக முடிவு செய்யப்பட்டால், மாநிலத்தில் தேர்தலையே ஒத்திவைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு டவுன் பஸ்களில் எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் என்ற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இவை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) முதல் கைவிடப்பட்டன. சாதாரண பஸ்களில் வாங்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என்ற அளவில் மட்டும் இப்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் கட்டணம் குறைக்கப்பட்டது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இருந்தாலும், சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கைதான் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, கட்டணம் ஏதும் குறைக்கப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
கட்டணக் குறைப்பு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஸ் கட்டணக் குறைப்பு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனப் புகார் வந்திருப்பது பற்றி நேரில் விளக்கம் தருவதற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் வருமாறு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
சாதாரண அலுவலருக்கு தண்டனை: சாதாரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் அலுவலர் யாரேனும் தவறு செய்தால் அவரைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யவோ, இடமாறுதல் செய்யவோ மாநில அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையரகம் பரிந்துரை செய்யும். அதை மாநில அரசு செயல்படுத்தும்.
கீழ்நிலையில் உள்ள ஒரு அதிகாரி தவறு செய்தால் அவரைத் தண்டிக்கிறது தேர்தல் ஆணையம். இப்போது மாநில அரசே தவறு செய்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒரு தொகுதியில் முறைகேடு ஏதும் நடப்பதாகச் சந்தேகம் வந்தால் அதுகுறித்து தேர்தல் பார்வையாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்தான் தேர்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருப்பவர்கள் என ஆணையம் கூறியுள்ளது.
அந்த வகையில் முறைகேடுகள் தங்கள் கவனத்துக்கு வந்தால், தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அவர் தகவல் தரலாம்.
தங்கள் கண்காணிப்பில் இருக்கும் தொகுதிக்குள் திடீரென பஸ் கட்டணம் குறைந்துள்ளது பற்றி சில தேர்தல் பார்வையாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரகத்துக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
மாநில அளவில் பெரிய விதிமீறல்கள் நடந்ததாகத் தேர்தல் ஆணையம் கருதிய நிகழ்வுகளில் முன்பு பிற மாநிலங்களில் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில்கூட கும்மிடிப்பூண்டி, மதுரை இடைத்தேர்தல்களின் போது அந்தப் பகுதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
1993-ல் தேர்தல் விதிமீறல் புகாரை அடுத்து ராணிப்பேட்டை இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சிறிய அளவில் முறைகேடு என முடிவு செய்யப்பட்டபோது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநில அளவில் விதிமீறல் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யுமானால், மொத்தமாக மாநிலம் முழுக்க தேர்தலை ஒத்திவைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைய பிரச்னையைப் பொருத்தவரை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வராத வகையில் கவனமாகத்தான் தாங்கள் செயல்பட்டிருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு ஆணை பிறப்பித்து கட்டணம் குறைக்கப்படவில்லை என்பதால் இது விதிமீறலில் வராது என்று அவர்கள் கூறுகின்றனர்.
புதிய வழித்தடங்கள் துவக்கி இருந்தாலோ, புதிய பஸ்கள் விட்டிருந்தாலோதான் விதிமீறலாகக் கருதப்படும். இது விதிமீறலில் வராது என்கின்றனர்.
மீண்டும் அதே நிலைமை: இப்போதைக்கு கடந்த வாரம் இருந்த அதே நிலைமையை மீண்டும் செயல்படுத்துமாறு வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று அரசு வட்டாரங்கள் நம்புகின்றன.
அவ்வாறு கூறினால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தென்ன? இடப்புறப் பெட்டியில் வாக்களியுங்கள்

ஆயிரம் உளியின் ஓசை

திடீர் உண்ணாவிரதம் ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை, மே.2: யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் உடனடியாக முழு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 27-ம் தேதி கருணாநிதி திடீரென சென்னை அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதம் இருக்கப்போவது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணத்தை விளக்கி சனிக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதம்:
"கடந்த காலங்களில் என்னுடன் நேசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொது மேடைகளில் இலங்கைப் பிரச்னையில் என்னைத் தூற்றிப் பேசினர். அது ஓராயிரம் உளி கொண்டு என்னைத் தாக்குவது போலிருந்தது.
13-வயதிலிருந்து தமிழுக்காக அளவிட முடியாத அடக்குமுறைகளைத் தாங்கி இருக்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சியைக் குலைத்தது யார் என்று திருச்சி கூட்டத்தில் திருமாவளவன் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டார்.
அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார்? மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார்? டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்துவர் யார்? உண்ணாவிரதங்களைக் கபட நாடகம் என்றுரைத்தவர் யார்? என்றெல்லாம் கேட்டு, ஒரு சில இடங்களுக்காகத்தான் எதிர் அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்து யாரும் சேரவில்லை என்று குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியவுடன், இலங்கை மீது படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று சபதம் செய்திருக்கிறார் ஜெயலலிதா. அவருடைய கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆளுகிற சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா?
இத்தகையோரின் நடவடிக்கைகளுக்கு இடையே தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்றுதான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக்கூட தெரிவிக்கவில்லை.
உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால்தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்குப் அருகிலோதான் இருந்திருப்பேன்' என எழுதியுள்ளார் கருணாநிதி.

நன்றி: தினமணி3.5.2007

Friday, May 01, 2009

தினம் ஒரு தேர்தல் -13

ஓரம் போ! தேர்தல் பஸ் வருது!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் கட்டணத்தை திடீர் எனக் குறைத்துள்ளது. அதாவது டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., எம் சர்வீஸ் என எந்த பஸ்ஸில் பயணம் செய்தாலும் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2 மட்டுமே. இதற்கு முன்னர் முறையே ரூ. 5, ரூ.3, ரூ.2.50 என வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடத்துநர்கள்

இந்தக் கட்டணக் குறைப்பால் ஒவ்வொரு முறையும் டிரிப் கலெக்ஷன் ரு. 1000, ரூ. 800, ரூ. 700 என குறைகிறது. இந்த தொகை பணிமனைக்கு பணிமனை வேறுபடும். தோராயமாக நாள் ஒன்றுக்கு மொத்த வசூலில் சென்னை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்படும். எங்களுக்கும் இதனால் தினப்படி குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கியை கவர, எங்கள் பையில் கை வைப்பதா? .

மருத்துவர் ராமதாஸ்:

கடந்த மூன்று ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறி சாதாரணக் கட்டணத்தைவிட மூன்று நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்தி மக்களை வருத்தி வந்தது திமுக அரசு.

இன்றைக்கு திடீரென்று அனைத்து வகை பஸ்களுக்கும் ஒரே வகையான கட்டணம் என்று கட்டணக் குறைப்பைச் சத்தமின்றி செயல்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.

தேர்தலுக்காகக் கட்டணத்தைக் குறைத்திருப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு உயர்த்திவிடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியைத் தடுத்து நிறுத்தாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் திமுக அரசைக் தண்டிக்க முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்::

சட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் பஸ் கட்டண உயர்வை நியாயப்படுத்தி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து வந்தது திமுக அரசு. ஆனால் தேர்தல் தோல்வி பயம் காரணமாக புதன்கிழமை இரவிலிருந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது. திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் காலத்தில் பஸ் கட்டணத்தைக் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கட்டணத்தை உயர்த்திவிட்டதையும் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நரேஷ் குப்தா:

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக ஃபேக்ஸ், தொலைபேசிகளில் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண குறைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை.

நீங்கள்?:
இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்