Sunday, March 29, 2009

பாமகவின் முன் உள்ள சவால்

பலர் நினப்பது போல் இல்லாமல் சவால் நிறைந்த தொகுதிகளே பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள். ஸ்ரீபெரும்புதூர் மறுசீரமைப்பிற்குப் பின் உருமாற்றம் பெற்று சென்னையின் புறநகர் தொகுதியாக மாற்றம் கண்டிருக்கிறது.சிதம்பரமும் பாதிக்குப் பாதி என்ற அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. தர்மபுரி, அரக்கோணம் அதிக சிரமம் இராது. ஒரு Quick look

ஸ்ரீபெரும்புதூர்:
முன்பு இது கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரின் அருகமைந்த 'கொல்லைப்புற' (Backyard) நாடாளுமன்றத் தொகுதியாக விளங்கியது.
இன்று இது மதுரவாயல், அம்பத்தூர், .ஆலந்தூர்,.ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம். ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இதில் மதுரவாயில்,அம்பத்தூர், பல்லாவரம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள். தாம்பரம் சட்டமன்றத் தொகுதியும் சில பகுதிகளை வேளச்சேரி தொகுதியிடம் இழந்திருக்கிறது. எனவே வெற்றி வாய்ப்பைக் கணிக்க பழைய கணக்குகள் உதவாது. ஆனால் சில நுண் ஆய்வுகள் (Micro analysis) மூலம் சில ஊகங்களை மேற்கொள்ளலாம்.

2006 சட்டமன்றத் தேர்தலின்போது வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கியிருந்த அம்பத்தூர், மதுரவாயில் பகுதிகளில் திமுக கணிசமான வாக்குகள் பெற்றது என திமுகவினர் சொல்கிறார்கள். புதிதாக உருவாகியுள்ள பல்லாவரம் ஆலந்தூர் தொகுதிக்குள் இருந்தது.ஆலந்தூரில் 2001ல் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்
ஆர்.எம்.வீரப்பனை வீழ்த்திய அதிமுக 2006ல் சுமார் 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது.(அதாவது இங்கு கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன) (மாற்றத்திற்குட்படாத) தாம்பரத்தில்.
2001, 2006 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வென்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 2001ல் அதிமுக அணியின் ஆதரவிலும், 2006ல் திமுக அணியின் ஆதரவிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வெற்றி பெற்றார் (அதாவது இங்கும் கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத்
தீர்மானிக்கின்றன)

சுருக்கமாகச் சொன்னால் இது திமுகவிற்கு சாதகமான தொகுதிதான். ஆனால் இதன் சில பகுதிகளில் கூட்டணி மாஜிக் வேலை செய்யும்.

ஆலந்தூர், தாம்பரம் ஆகியவை தென் சென்னைத் தொகுதியில் இருந்ததால், தென் சென்னை எம்.பி.யான டி.ஆர்.பாலு அந்தப் பகுதிகளில் தன்வசமிருந்த அமைச்சகத்தின் மூலம் நிறைய வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார். ஆனால் வில்லிவாக்கம் வட சென்ன்னையில் இருந்ததால் அவர் அந்தப் பகுதிகளில் இதே அளவு கவனம் செலுத்தினார் எனச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் திமுக சார்பில் களமிறங்கினால் போட்டி கடினமாக இருக்கக் கூடும்.

இது நகர் சார்ந்த தொகுதியாக இருப்பதால், ஜாதி செல்வாக்கு பெருமளவில் வேலை செய்யாது. பணம் வேலை செய்யலாம். ஆனாலும் நடுத்தர வர்கத்தின், குறிப்பாக தொழிலாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை

சிதம்பரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் இன்று, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய இரண்டு தொகுதிகளும், கடலூர் லோக்சபா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மங்களூர் தொகுதி சில மாற்றங்களுடன் திட்டக்குடி என்ற புதிய சட்டமன்றத் தொகுதியாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே சிதம்பரம் தொகுதியில் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள்தான் (சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி) இருக்கின்றன. அவற்றோடு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்பு இருந்து இப்போதும் நீடிக்கிற மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இப்போது (சிதம்பரம், புவனகிரி) அதிமுக வசம் இருக்கின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகளின் துணையில்லாமல் போட்டியிட்டு வெற்றி கண்ட தொகுதிகள் இவை என்பதால் அதற்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்போது பாமகவும் அதனுடன் இணைந்து கொள்வதால் அந்த அணியின் வலு அதிகரித்திருக்கிறது. இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகியவை புதிதாக உருவான தொகுதிகள்.

1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாமக தொடர்ந்து வெற்ற் பெற்று வந்திருக்கிறது. மூன்று முறையும் 3லட்சம் -3.5லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது (பதிவான வாக்குகளில் 45-47%) இங்கு இரண்டு முறை
திருமாவளவன் போட்டியிட்டு இரு முறையும் தோல்வி கண்டிருக்கிறார். 1999ல் சுமார் 1.25 லட்சம் வாக்குகளில் தோற்றார். 2004ல் 87 ஆயிரம் வாக்குகளில் தோற்றார்.1999ல் அதிமுக ஆதரவோடு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார் என்பது கவனிக்கத் தக்கது.

இந்த முறையும் போட்டி திருமாவிற்கும் பாமகவிற்குமிடையேதான் இருக்கும். தோற்றத்தில் மாற்றம் கண்டுள்ள தொகுதி எப்படித் தீர்ப்பளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்


அரக்கோணம்

அரக்கோணமும் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் கணிக்கக்கூடிய அளவிற்கான மாற்றங்கள்தான். திருத்தணி காட்பாடி ஆகிய இரண்டு தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.இதில் திருத்தணி அதிமுக வசம் உள்ளது.

காட்பாடி துரைமுருகனின் சட்டமன்றத் தொகுதி.. கெளரவப் பிரசினையாக எடுத்துக் கொண்டு பாமகவிற்கு எதிரான போட்டியைத் தீவீரப்படுத்தலாம்

ரயில்வே துணை அமைச்சர் வேலு கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருவேளை திமுக இந்த முறை ஜகத்ரட்சகனைக் களமிறக்கக் கூடும்

மற்ற 3 தொகுதிகள் நாளை....

4 comments:

தமிழ் சசி | Tamil SASI said...

இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.

*********

காட்டுமன்னார்கோவில் - விடுதலைச் சிறுத்தைகள் பலமாக இருக்கும் தொகுதி. திருமாவளவன் தனித்து போட்டியிட்ட பொழுது அதிக ஓட்டுக்களை காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தான் பெற்றார். இங்கு தலித் ஓட்டுக்கள் அதிகம். இது எப்பொழுதுமே தலித் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. இளையபெருமாள் போன்றவர்கள் இங்கிருந்து தான் வெற்றி பெற்றார்கள். எனவே திமுக-விசி இங்கு பலமான கூட்டணி. காட்டுமன்னார்கோவில் அதிமுக அணிக்கு சாதகமான தொகுதியாக சொல்ல முடியாது. போட்டி கடுமையாக இருக்கும்.

சிதம்பரம் தொகுதி சீரமைப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். காரணம் நெய்வேலி, மங்களூர் போன்ற பகுதிகளில் தலித் வாக்குகள் அதிகம். மாறாக ஜெயங்கொண்டம், அரியலூர் போன்ற பகுதிகளில் குறைவு. ஜெயங்கொண்டம், அரியலூர் போன்ற பகுதிகளில் பாமக - அதிமுக கூட்டணி வலுவான இருக்கும். இது பாமக பலமாக இருக்கும் இடம். ஆனால் கடந்த தேர்தலில் இங்கு காடுவெட்டி குரு படுதோல்வி அடைந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். இங்கு அதிமுகவிற்கும் செல்வாக்கு உண்டு. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே இங்கு வென்றது.

விஜயகாந்த் கடந்த தேர்தலில் பிரித்த வாக்குகளும் அதிமுக வெல்வதற்கு முக்கிய காரணம். இம் முறை விஜயகாந்த் ஓட்டுக்களை பிரித்தால் அது அதிமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்த முறை போட்டி கடுமையாகவே இருக்கும். தொகுதி சீரமைப்பால கணிப்பது கடினமாக உள்ளது

citizen said...

தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது . அதுவும் தமிழக தேர்தல் களம் பலமுனை போட்டியால் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது . யார் வெல்வார்கள் என்று கூற முடியாத அளவிட்கு போட்டி கடுமையாக உள்ளது . உங்கள் அடுத்த பதிவிட்கு காத்திருக்கிறேன் . நன்றி .

Anonymous said...

election mudinchapuram results theriyum appo paathukkalam

-vittutholai puli

குப்பன்.யாஹூ said...

தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் இத்தகைய கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்களுக்கு பொது மக்களாகிய நாம் வோட்டு அளிக்க கூடாது.

வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, எந்த முகத்தை, மனதை வைத்து பா ம கா வுடன் மேடை ஏற போகிறார் என்று புரியவில்லை.

குப்பன்_யாஹூ