Wednesday, March 11, 2009

2004 Therthal: இன்றும் பொருத்தமான பழைய அலசல்

வெங்கடேஷ்

இப்படிப் பார்ப்பது சரியா?

நான் மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து பார்க்கிறவர்களிடமெல்லாம், அதிகம் பதட்டமில்லாமல் ஒரு கேள்வி கேட்கிறேன்.

"யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?"

"கருணாநிதிக்கு... "

ஒரு கணம் திகைத்துப் போவேன்.

"இது மத்திய அரசுக்கான தேர்தலாச்சே, கருணாநிதியா டெல்லி போகப்போறாரு?"

எதிராளி கொஞ்சம் யோசிப்பார்.

பல மாநிலங்களில் இதுதான் நிலைமையாக இருக்கவேண்டும். மாநில அரசியல்தான் முதன்மைப்பட்டுப் போயிருக்கிறது. மாநிலப் பிரச்சினைகளும், கவலைகளும்தான் முக்கியமாகியிருக்கிறது. அதில் உள்ள சாதனைகளும், கோபங்களும்தான் தேர்தல்களில் பிரதிபலித்து வருகின்றது.
உண்மையில் மத்திய அரசைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் தோன்றவில்லையோ என்று எனக்கு எண்ணம் உண்டு. நாளுக்கு நாள் நாம் உள்ளுர் அரசியலில் முழ்கிக்கொண்டிருக்கிறோம். தேசியத் தலைவர்கள் என்றோ, தலைமை என்றோ எல்லாம் யோசிக்கிறோமா என்று தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் கூட, சோனியா காந்தி அந்நிய நாட்டவர் என்ற பிரச்சாரம் எடுபட மாட்டேன் என்கிறது.

முதலில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, இந்த அந்நியர் பிரச்சினையைத்தான் சில நாள்கள் தொடர்ந்து பேசினார். பின்னர், எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லையென்றவுடன்தான், வேறு செய்திகளைச் சொல்லி வருகிறார். அதுவும் உள்ளுர் விஷயம். கருணாநிதி எதிர்ப்பு, குடும்ப அரசியல் என்ற விஷயங்களையே இப்போது தொடுகிறார்.

குறிப்பு இதுதான். மக்களால், ஜெ. பேசும் விஷயங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. சோனியா தெரியவில்லை. அவர் அந்நியர் நாட்டவர் என்பதோ, ராஜிவ் காந்தியின் மனைவி என்பதோ எல்லாம் மக்களிடம் போய் சேரவில்லை. அதனால், அது காற்றில் குத்து விடுவது போல் இருந்திருக்க வேண்டும். கலைஞர் கண்ணுக்குத் தெரிந்தவர். அவரைக் குத்துவது, எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

கலைஞருக்கு வேறு பிரச்சினை. அவரும் சோனியாவைப் முதன்மைப்படுத்தி பேச மாட்டேன் என்கிறார். உள்ளுர் பிரச்சினையான தண்ணீர், காலி குடங்களைப் பற்றிப் பேசுகிறார். தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க தவறிய ஜெ. பற்றி பேசுகிறார்.

வாஜ்பேயியை எதிர்க்க முடியவில்லை. தேர்தலுக்குப் பின் என்னவாகுமோ என்ற எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. முடிந்ததெல்லாம் அத்வானியை எதிர்ப்பதுதான். முடிந்தவரை மதச்சார்பின்மை கூட்டணி என்று சொல்லி வருகிறார்.

ஆக, இங்கே சோனியாவோ, வாஜ்பேயியோ பிரச்சினை அல்ல. தேர்ந்தெடுக்கப்படப் போவது, கருணாநிதியோ, ஜெயலலிதாவோதான்.

நிலைமை எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்று இதைத்தான் சொல்வார்களோ?

~oOo~

தேர்தல் நிதி 

நான் திருவல்லிக்கேணி வாசி. தண்ணீர் பஞ்சம் கூடப் பிறந்தது. புது அடுக்ககத்தில் ஒரு தீப்பெட்டி வாங்கிக்கொண்டு குடியேறியபோது, வழக்கம்போல் தண்ணீர் போதவில்லை. பூமிக்குள் நீளக் கைவிட்டு, கடல்நீரை எடுத்துவிடலாம் என்று அடுக்கக பிரகஸ்பதிகள் சொல்ல, நான் ஒரு போர்வெல் காரனைக் கூப்பிட்டிருந்தேன்.

வாசலில் ஒரு பெரிய லாரி வந்து நின்று, குறிக்கப்பட்ட இடத்தில் ஒரு முக்கோண இயந்திரத்தை நிறுத்தி, பூமியை குத்தத் தொடங்கியபோது, வாசலில் ஸ்டைலாக சர்க்கென்று ஹீரோ ஹோண்டா வந்து நின்றது.

"யாரக் கேட்டு போர் போடறீங்க?"

வண்டியில் உட்கார்ந்துகொண்டு ஒரு அதட்டல்.

"யாரக் கேக்கணும்?"

"கார்ப்ரெஷன் ஏ.ஈ.கிட்ட சொன்னீங்களா? பர்மிஷன் வாங்கினீங்களா?"

நான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். ஏற்கனவே பார்த்தவர்தான். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். ஓட்டுக் கேட்டு வந்தபோது பார்த்திருக்கிறேன். வெள்ளை சட்டை. பாக்கெட்டில் செருகியிருந்த பேனாவின் முனையில் அம்மா பளிச்சென்று சிரித்தார்.

"பர்மிஷன் வாங்கணும்னு எனக்குத் தெரியாது சார். சொல்லுங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றேன்.

"இது கூடத் தெரியாம, நீ என்ன படிச்சவன்?"

நான் லேசாகச் சிரித்துகொண்டேன்.

"முதல்ல நிறுத்துச் சொல்லுங்க. ஏ.ஈ. கிட்ட இல்லன்னா, எங்கிட்டயாவது சொல்லியிருக்கணுமில்லையா?"

அவர் குரலில் தெரிந்த வேகம், அதிகாரம் என்னைக் கொஞ்சம் எரிச்சலூட்டியது. மெல்ல, சில நிமிடங்களில் என் சரக்கை எடுத்துச் சொன்னேன். வண்டியை விட்டு இறங்கினார்.

"உங்களுக்குத் தெரியாதது இல்ல சார்...திடீர் திடீர்னு கூட்டம்ங்கறாங்க. அம்மா வராங்க. 100பேரக் கூட்டிட்டு வாங்கறாங்க.. எங்க போறது சார். சாப்பாடு போட்டு பொடவ குடுத்து கூட்டிணு போற செலவெல்லாம் நம்மளுதான்... உங்கள மாதிரி ஆளுங்கதான் பார்த்து செய்யணும். இந்த வட்டத்துல ஜெயிக்க, 4 லட்ச ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படி சம்பாதிக்கறது சார்..."

இதுதான் உண்மை செலவு. வட்டியும் முதலுமாய் எப்படியும் அதை அறுவடை செய்தே தீரவேண்டும் என்ற உந்துதல் இருக்கத்தானே செய்யும்.

கார்ப்பரெஷன் தேர்தலுக்கே இப்படியென்றால், மக்களவைத் தேர்தலுக்கு...?

யோசிக்கவே முடியவில்லை. தமிழகத்தில் இரண்டு கூட்டணிகளும் செய்யும் செலவுக்கு நிச்சயம் உண்மை கணக்கு கிடைக்கப் போவதில்லை. தி.மு.க, தன் கட்சியில் சீட் வேண்டுமென்றால், 60 லட்சம் டெபாசிட் கட்டிவிட்டு, சீட் கேளு என்றது (இப்போது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லையென்று கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்).

அப்படிக் கட்ட முடியாமல், வாய்ப்பு கைநழுவிப் போன ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். மாலை முழுவதும் புலம்பித் தள்ளிவிட்டார். பல்லாண்டு உறுப்பினர். தலைவர் சொன்னார் என்று, தேர்தல் நிதியாக பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தவர்.

தி.மு.க. தேர்தல் நிதியாக கிட்டத்தட்ட 30 கோடி திரட்டியிருக்கிறது. அதை இந்தத் தேர்தலில்தானே செலவு செய்யவேண்டும்? பின் எதற்கு மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் 60 லட்சம் கட்டவேண்டும் என்ற கேள்வி எழாமலில்லை. தி.மு.க.வுக்குள் எழுந்த இந்த நிதி சலசலப்பு இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறது.

அ.தி.மு.க தேர்தல் செலவு பற்றி மற்றொருவர் சொன்னபோது, நான் லேசாக அதிர்ந்துபோனேன். ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 3 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை அவர் வைத்துக்கொண்டு மீதியைக் கொண்டு தேர்தல் வேலை பார்க்கப் பணிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் ஆடிப்போய்விட்டேன்.

ஒன்று மட்டும் உண்மை. இரண்டு பக்கமும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யப் போகிறார்கள். எல்லாம் கணக்கு வழக்கற்ற பணம். இதுதான் சமயம் என்று அதில் முங்கி எழுகிறவர்கள் ஒரு பக்கம் என்றால், இதில் உள்ள நியாயங்களை மற்றொருவர் எனக்கு விளக்கினார்... அது அடுத்த பகுதி.


~oOo~


அரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா?

விடிகாலை. நடப்பதற்காக கடற்கரைக்குப் போக, ஒரு கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அருகே நெருங்கிப் போக, முதுகில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி.சர்ட்டுகள் அணிந்த கட்சிக்காரர்கள். கடற்கரையின் நடைபாதையை அடைத்துக்கொண்டு மெல்ல நகரும் கூட்டம். யாரென்று புரியாமல், நானும் விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கினேன்.

எனக்கு முன் போனவர்களும் சரி, பின்னார் வருபவர்களும் சரி, அந்தக் கூட்டத்தை லாவகமாய்த் தவிர்த்துவிட்டு, வளைந்து சட்டென கூட்டத்தின் முன்னே போய், மீண்டும் தம் அன்றாட உடல்நலத்தைப் பேணும் அவசரத்தில் வேர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருந்தனர். நின்று பார்த்தவர்கள் நானும் ஒருவன்.

டி.ஆர். பாலு. எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளர். பக்கத்தில் உசேன். திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. நின்று கைகுலுக்க, 'படிச்சு பாருங்க சார்' என்று ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார் பாலு. என்னைப் போல் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள், தெரிந்த ஒன்றிரண்டு முகங்களோடு கைகுலுக்கியபடி அவர் நடந்துகொண்டிருந்தார்.

துண்டறிக்கையை நான் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். பலர், அப்படியே ஓரம் போட்டுவிட்டு நடையைக் கட்டினர். இன்னும் சிலர், தமக்கு இதெல்லாம் அநாவசியம் என்பதுபோல், முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிந்தனர்.

நிம்மதியா கூட நடக்க விட மாட்டேங்கறாங்க.. இங்கியும் வந்துடறாங்க

எனக்குப் பின்னால் வந்த மாமி, அடிக்குரலில் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சில நொடிகளில் என்னைக் கடந்து மேலும் உடல்நலம் காக்க, ஓட்டமாக நடையைப் பயின்றுகொண்டிருந்தனர்.

மற்றொரு காட்சி. எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கூட்டம். எம்ஜிஆர் திரைப்படப் பாடல்கள் யார் வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறின. வாசலில் போய் நின்றுகொண்டேன்.

ஒரு திறந்த ஜீப்பில் பதர் சையது. அதிமுக தென்சென்னை வேட்பாளர். பக்கத்தில் டி.ஜெயக்குமார். சிரிக்கலாமா வேண்டாமா, கைகூப்ப வேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் பதர் சையது தேமே என்று உயர்ந்து நின்ற அடுக்ககங்களைப் பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார்தான் அம்மா புகழ் பாடி ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கல்யாண ஊர்வலமாக இருந்தாலும் சரி, இழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி, பெருமாள் புறப்பாடாக இருந்தாலும் சரி, வெறுமனே எட்டிப் பார்க்கும் அடுக்கக முகங்கள் இப்போதும், பதர் சையதைப் பார்த்துக்கொண்டிருந்தன.

ஜெயலலிதா ஸ்கூல் ·பிரெண்டாம்..

புடைவை நன்னா அழகா இருக்கு இல்ல...

ஜீப் எங்கள் ஏரியாவின் புகழ்பெற்ற மீனவ 'நகர்'களின் உள்ளே நுழைய, அனைத்து முகங்களும் தம் வேலையைப் பார்க்கத் திரும்பிவிட்டன. ஆனால், ஜீப்போடு வந்தவர்கள், 'நகர்'களுக்கு உள்ளே போனதும், பட்டாசு வெடித்து, சரங்கள் கொளுத்தி, ஆரத்தி எடுத்து, கொண்டாட்டமாய் வரவேற்கத் தொடங்கினர். மணமகள் ஊர்வலம்போல், வாத்தியங்கள் முழங்க, அபாரமான ஏற்பாடுகள்.

இதுதான் வித்தியாசம். ஏற்கனவே, மேல் மத்திய தர வர்க்கம், அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டு விட்டது. கடந்த பத்தாண்டுகளில், கீழ் மத்திய வர்க்கத்துக்கும் அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

நான் இரவு பகலாக உழைக்கிறேன், எவனோ புண்ணியவான் என் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பு கொடுத்து, வேலைகொடுத்திருக்கிறான். அவன் சோறு போடுகிறான். பின் நான் எதற்கு உனக்கு (அரசுக்கு) மதிப்பு தரவேண்டும்? உன்னிடம் நான் எதற்காகவும் வந்து நிற்கத் தயாரில்லை. நிலைமைகள் மாறிவிட்டன பாஸ்!!!

கடந்த பல தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் குறைந்து வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். இந்தியாவின் புகழ்மிக்க மத்திய வர்க்கமும் அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது. கணினியும் தொழில்நுட்பமும் அவர்கள் பார்வையை மேல்நோக்கி உயர்த்திவிட, நாடாளுபவர்கள் நாசமாகப் போகக் கடவது என்ற விட்டுவிட்டார்கள்!!!

மிச்சமிருப்பது, தினக்கூலிகள், ஆலை உழைப்பாளர்கள், சிறு சிறு வேலைகள் செய்வோர் அடங்கிய அன்றாடம் காய்ச்சிகள். அவர்கள்தான் இன்னும் அரசையும் அரசியலாளர்களையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டினால் பேச்சைக் கேட்க வருகிறார்கள். கையில் தலைவரின் முகத்தை பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஓட்டுச் சாவடிக்குப் போய், வெயிலில் நின்று தம் ஓட்டைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இதுதான் உண்மை.

மத்தியதர வர்க்கம், செளகரியத்திலும், வெட்டிப்பேச்சிலும் செயலின்மையிலும் ஆழ்ந்துகிடக்கிறது. உண்மையில், நமக்கெல்லாம், இந்த அரசை விமர்சிக்க தகுதியே இல்லை.

வெங்கடேஷ்

No comments: